கூந்தல்



என்சைக்ளோபீடியா

1. இளநரைக்கு அற்புத மருந்து

ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்


`சால்ட் அண்ட் பெப்பர் லுக்’ என்கிற பெயரில் நடிகர்கள் நரைத்த கூந்தலுக்கு சாயம் பூசாமல் வரத் தொடங்கினாலும், சாமானிய மக்களுக்கு இன்னும் அந்த தைரியம் முழுமையாக வரவில்லை என்பதே உண்மை.நரை என்பது மூப்பின் அடையாளமாக இருந்த காலம் மாறி, இன்று அது டீன் ஏஜிலும் அதற்கு முன்பேயும்கூட ஆரம்பிக்கிற அவஸ்தையாக இருக்கிறது. 20 வயதுக்கு முன்பே தோன்றுகிற நரையானது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களது பெற்றோருக்கும் பெருங்கவலை அளிக்கிற விஷயமே!

வெள்ளையர்களுக்கு 30களின் மத்தியிலும் ஆசியர்களுக்கு 30களின் இறுதியிலும் கூந்தல் நரைக்கத் தொடங்கும். பெரும்பாலான மக்களுக்கு 50 வயதில் பாதிக்கும் மேலான கூந்தல் நரைத்திருக்கும். வயதானவர்களின் தலையில் தோன்றுகிற நரை நம்மை உறுத்துவதில்லை. ஆனால், தோற்றத்தில் இளமையாகக் காட்சியளிப்பவரின் தலையில் தோன்றுகிற ஒற்றை வெள்ளை முடிகூட நம்மை உற்று கவனிக்க வைக்கிறது. இளநரை என்கிற பிரச்னை இன்று அனேக இளைய தலைமுறையினருக்கும் இம்சை கொடுப்பதை மறுப்பதற்கில்லை.

இளநரைக்கான காரணங்கள்?

நம்முடைய கூந்தலின் ஃபாலிக்கிள் என்கிற நுண்ணறைகளில் மெலனின் என்கிற நிறமிகள் இருக்கும். உடலில் இந்த நிறமி உற்பத்தி குறைகிற போதுதான் கூந்தல் கருமை இழந்து வெள்ளையாகிறது. இதன் பின்னணியில்...

*மரபணுக்கள் காரணமாக இருக்கலாம்.

*பிட்யூட்டரி அல்லது தைராய்டு சுரப்பிகளில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலும் கூந்தல் நரைக்கலாம். அந்தப் பிரச்னை சரி செய்யப்பட்டால் நரைப்பதும் நின்றுவிடும்.

*வைட்டமின் பி12 குறைபாடு அல்லது தவறான உணவுப்பழக்கம் இந்த இரண்டும்தான் இளநரைக்கான முதல் முக்கிய காரணங்கள். இரும்புச்சத்து, தாமிரச்சத்து மற்றும் அயோடின் சத்து இந்த மூன்றும் உணவில் போதுமான அளவு இல்லாமல் போவதன் விளைவே, இன்றைக்கு இளம் வயதினர் பலரும் நரை முடிப் பிரச்னையை சந்திப்பதன் காரணம்.

*ஸ்ட்ரெஸ் என்கிற மன அழுத்தம் எல்லா பிரச்னைகளுக்கும் காரணமாக இருப்பது போலவே இளநரைப் பிரச்னைக்கும் காரணமாகிறது. மனது அதிக கவலை கொள்கிற போது, மண்டைப் பகுதியின் சருமத்தில் அதிக டென்ஷன் உருவாகிறது. அது கூந்தலுக்குப் போதுமான ஊட்டம் கிடைக்கிற வேலைக்கு இடையூறாகிறது. அதன் விளைவாகவே கூந்தல் நரைத்து, ஆரோக்கியம் இழக்கிறது.

*கூந்தல் அழகாக இருக்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் அதை சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது அவசியம். கூந்தலை அடிக்கடி சரியாக சுத்தப்படுத்தாமல் தூசும் மாசும் படிந்து, கூந்தலின் வேர்க்கால்கள் அடைபடும்போதும் நரை வரலாம்.

*ஒரே ஒரு நரை முடியைப் பார்த்ததுமே அலறியடித்துக் கொண்டு மிக இளவயதிலேயே ஹேர் டை உபயோகிப்பதும் நரையை அதிகப்படுத்தும்.

*தலை குளிக்க மிக அதிக சூடான தண்ணீரைப் பயன்படுத்துவது.

*அதீத மலச்சிக்கல்

*தீவிரமான ரத்தசோகை

*ஹார்மோன் பிரச்னைகளும் தொற்றுநோய் பாதிப்புகளும்

*கீமோதெரபி மற்றும் ரேடியேஷன்

சிகிச்சைகள்

*விடிலிகோ எனப்படுகிற வெண்புள்ளிப் பிரச்னை
*தைராய்டு கோளாறு
*ஃபோலிக் அமிலக் குறைபாடு.

என்ன தீர்வுகள்?

இளநரைக்கான அதிஅற்புதமான மருந்து என்றால் அது கறிவேப்பிலை. தினமும் முடிந்தளவு அதை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

*கைப்பிடி அளவு கறிவேப்பிலையை எடுத்துக் கழுவவும். அதை முதல்நாள் இரவே சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும். அதே தண்ணீருடன் கறிவேப்பிலையைக் கொதிக்க வைத்து தினம் ஒருவேளை குடிக்கவும்.

*பசும்பாலில் தயாரித்த வெண்ணெயால் தலைக்கு மசாஜ் செய்யவும். இதை வாரம் 2 முறை செய்ய வேண்டியது அவசியம்.

*நிறைய பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் சேர்த்துக் கொள்ளவும். இது இள நரையைத் தடுப்பதுடன், கூந்தலையும் அழகாக, ஆரோக்கியமாக வைக்கும்.

*சிறிது தயிரில் ஒரு டேபிள்ஸ்பூன் ஈஸ்ட் கலக்கவும். ஒவ்வொரு முறை உணவுக்கு முன்பும் இதைக் குடிக்கவும். இளநரைக்கான எளிமையான சிகிச்சை இது.

இளநரைப் பிரச்னை அதிகரிப்பதாக உணர்கிறவர்கள் ட்ரைகாலஜிஸ்டை அணுகி, அதற்கான காரணத்தை ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும். ஹோமியோ
பதியிலும் யுனானியிலும் இளநரையைப் போக்க ஏராளமான மருந்துகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனையின்படி அவற்றை எடுத்துக் கொள்வதும் பலனளிக்கும்.

இளநரைக்கான அதிஅற்புதமான மருந்து என்றால் அது கறிவேப்பிலை. தினமும் முடிந்தளவு அதை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

2. இளநரைக்கான வீட்டு சிகிச்சை

அழகுக்கலை நிபுணர் வசுந்தரா

* நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தனப் பொடி
ஆகியவை தலா 10 கிராம்- இவை அனைத்தையும் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்கவைக்கவும். இந்தக் கலவையை நான்கு நாட்கள் வெயிலில் வைக்க வேண்டும். சூரியக் கதிர்கள் பட்டு எண்ணெயில் சாரம் இறங்கும். பின்பு வெள்ளைத் துணியில் அதை வடிகட்டவும். குளிக்கும் முன் தலையில் தேய்த்து வந்தால் நரை குறையும். செம்பட்டை முடி கருமையாகும்.

* செம்பருத்தி பூ, அவுரி விதை, நெல்லி முள்ளி (காயவைத்த நெல்லிக்காய்) மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். நரைமுடிக்குத் தேவையான அளவு அந்தக் கலவையைத் தண்ணீரில் கலந்து ஒரு இரும்பு பாத்திரத்தில் நான்கு மணி நேரங்கள் வைக்கவும். வெள்ளை முடி உள்ள இடங்களில் அதைத் தடவி அரை மணி நேரத்தில் அலசிவிடவும். இது முடியைக் கருப்பாக்கும். வெள்ளை முடி அதிகமாகாமல் தடுக்கும்.

* பூந்திக்காய், வெந்தயம், வேப்பிலை, ரோஜா இதழ், ஆரஞ்சுப் பழத்தோல், மல்லிகைப் பூ, வெட்டிவேர், செண்பக மொட்டு, நெல்லிக்காய் எல்லாம் சேர்த்து  100 கிராம் எடுத்துக் கொள்ளவும். எல்லாப் பொருட்களையும் காய வைத்து, அரைக்கவும். 100 கிராம் பொடியை 200 மி.லி. தயிரில் கலந்து கொள்ளவும். முதலில் தலையில் சிறிது நல்லெண்ணெய் தடவவும். பிறகு இந்த ஹேர் பேக்கை தடவி, 45 நிமிடங்கள் ஊற வைத்து அலசவும். இந்த பேக், இளநரை வராமல் தடுப்பதோடு, முடி உதிர்வையும் கட்டுப்படுத்தி, கூந்தலுக்கு நல்ல பளபளப்பையும் ஆரோக்கியத்தையும் தரும்.

 50 கிராம் அளவுக்கு மருதாணிப் பொடியில் ஒரு முட்டை, 5 மி.லி. தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய், 2 டேபிள்ஸ்பூன் தயிர், 2 டேபிள்ஸ்பூன் காபி (சிக்கரி கலக்காதது) அல்லது டீ டிகாக்‌ஷன், எலுமிச்சைச்சாறு 5 முதல் 8 சொட்டு, தேவைக்கேற்ப வெதுவெதுப்பான நீர் சேர்க்கவும். இவற்றை ஒரு இரும்பு பாத்திரத்தில் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

தலையில் ஆயில் மசாஜ் செய்த பின் கொஞ்சம் கொஞ்சமாக முடியை எடுத்து எல்லா பக்கமும் பரவும்படி இதைத் தடவிக் கொண்டை போடவும். வெறும் பளபளப்பு மட்டும் வேண்டுமானால், அரை மணி நேரத்தில் குளிக்கவும். கலர் வேண்டுமானால் 2 முதல் 3 மணி நேரம் ஊற வைத்துக் குளிக்கவும். சுருட்டை முடி உள்ளவர்கள் ஹென்னா போடுவதை தவிர்க்கலாம்.

சுருட்டை முடி உள்ளவர்கள் ஹென்னா போடுவதைதவிர்க்கலாம்.

(வளரும்!)

வி.லஷ்மி