உணவே மருந்து... உடலே மருத்துவர்!



மகத்தான மக்கள் மருத்துவர்கள்!

நம் மரபுசார் வாழ்வியலுக்குத் திரும்பும் நிலையில்தான் நோயற்ற வாழ்வை சாத்தியப்படுத்த முடியும் என்கிற கருத்து பலரையும் இயற்கையுடன் இயைந்த மரபுசார் வாழ்வியலுக்குத் திருப்பியிருக்கிறது.

நூடுல்ஸ், பீட்சா, பர்கர் என்பது உயர்குடி மக்களின் உணவுப்பொருள் என்கிற அடையாளம் இப்போது மாறி அவர்கள் கம்பு, ராகி, சாமை, தினை என சிறுதானியங்களைத் தேடி உண்ணத் தொடங்கி விட்டனர்.

இந்த ஆரோக்கியமான மாற்றத்தை வித்திட்டதில் நம்மாழ்வார் போன்ற இயற்கை வல்லுநர்கள் முக்கியப் பங்காற்றியுள்ளனர். அந்த வரிசையில் கால்நடை மருத்துவர் காசிப்பிச்சையும் வாழ்வியல் முறை குறித்த தனது பேச்சின் வாயிலாக பலரையும் இயற்கையுடன் இணைந்த வாழ்வியலுக்குத் திருப்பியிருக்கிறார்.

கால்நடை மருத்துவராக புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி ஆகிய ஊர்களில் 30 ஆண்டுகள் பணிபுரிந்தவர். ஓய்வுக்குப் பிறகு மரபுசார் வாழ்வியலை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கி இன்று வரையிலும் அப்பணியை சிரத்தையாக மேற்கொண்டு வருகிறார்.

‘‘நாட்டு மருத்துவம் என்று சொல்லக்கூடிய மூலிகை மருத்துவம் புரியும் குடும்பத்தில் பிறந்ததால் மூலிகைகள் குறித்த அறிவு சிறுவயதிலிருந்தே வந்ததுதான். ‘உணவே மருந்து... உடலே மருத்துவர்’ என்பதுதான் நமது மரபுசார் வாழ்வியல் முறை. இன்றைக்கோ மருந்தாக கொள்ளத்தக்க உணவு முறையும் இல்லை.

உடலே மருத்துவர் எனும் அளவுக்கு யாரிடமும் எந்தத் தெளிவும் இல்லை. அஞ்சறைப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் சீரகம், மிளகு, சுக்கு, மஞ்சள் தூள் ஆகியவை எல்லாம் சிறந்த மூலிகைகள். உலகிலேயே மூலிகைகளைக் கொண்ட சமையல் முறை நம்முடையதாகத்தான் இருந்தது.

இவற்றையெல்லாம் விட்டுவிட்டு வெளிநாட்டு மோகத்தால் உணவு முறை தொடங்கி வாழ்வியலே மாறியதால்தான் இன்றைக்கு கணக்கில்லா நோய்களுக்கு நாம் ஆளாகிக் கொண்டிருக்கிறோம். இந்நிலை மாற வேண்டும் என்றால் நமக்கு இருக்கும் ஒரே வழி மரபு சார் வாழ்வியலுக்குத் திரும்புவதுதான். அது குறித்தான தெளிவை ஏற்படுத்துவதுதான் என் பணி’’ என்கிறார் காசிப்பிச்சை.

1998ல் கால்நடை மருத்துவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின், நம்மாழ்வாருடன் இணைந்து ‘தமிழின வாழ்வியல் இயக்கம்’ என்கிற அமைப்பைத் தொடங்கி, இவர் தலைவராகவும் நம்மாழ்வார் செயலாளராகவும் இருந்து வாழ்வியல் மீட்டெடுப்பு செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் பாரம்பரிய மருத்துவ இயக்கம், தஞ்சை மருத்துவ இயக்கம், திருச்சி மருத்துவ இயக்கம், சமூக இயக்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து தமிழகத்தின் பல்வேறு மூலைகளில் ஆயிரத்துக்கும் அதிக மருத்துவ முகாம்களில் மரபுசார் வாழ்வியல் குறித்துப் பேசியிருக்கிறார்.

பேச்சு மட்டுமல்ல... எழுத்தின் வாயிலாகவும் தனது நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் இவர், 20 நூல்கள் எழுதியுள்ளார். அவற்றுள் ‘வாக்கு மூலம்’, ‘நரம்பு ஊசி’, ‘காலை முதல் மாலை வரை’, ‘மறந்து போன மருத்துவம்’, ‘வாழ்வியல் மரபு’, ‘வெண்மைப்புரட்சி விளைவித்த வேதனைகள்’, ‘மறைந்து வரும் மாண்புகள்’, ‘மறுபரிசீலனை’,

‘நோயற்ற வாழ்வுக்கான நுட்பங்கள்’, ‘தமிழ் மருத்துவக் களஞ்சியம்’ போன்ற மருத்துவ நூல்களும் அடக்கம். இவையெல்லாம் நமது பாரம்பரிய மருத்துவம், வாழ்வியல், தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் மருத்துவக் குறிப்புகள், நமது பண்பாட்டில் கலந்திருக்கும் மருத்துவம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்டவையே. இந்நூல்கள் பல விருதுகளையும் வென்றிருக்கின்றன.

உலகிலேயே மூலிகை களைக் கொண்ட சமையல் முறை  நம்முடையதாகத்தான் இருந்தது. வெளிநாட்டு  மோகத்தால் உணவு முறை தொடங்கி வாழ்வியலே மாறியதால் தான், கணக்கில்லா  நோய்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறோம்...

- ஞானதேசிகன், கி.ச.திலீபன்
படங்கள்: ராஜா, ஆர்.கோபால்

டாக்டர் காசிப்பிச்சை