வயோதிகமும் எலும்பு நலமும்!



வணக்கம் சீனியர் !

முதுமை... எதிர்ப்பு சக்தி குறைவு காரணமாக நோய்க்கு ஆளாகுதல், எலும்பு பலவீனத்தால் நடப்பதில் சிரமம், அதனால் அடிக்கடி கீழே விழுதல், காயம் அடைதல், எலும்பு முறிவு போன்ற பிரச்னைகள் அதிகம் ஏற்படுகிற காலகட்டம். இவற்றில் இருந்து முதுமை பருவத்தை எப்படி பாதுகாக்கலாம்?

- விளக்குகிறார் முதியோர் நலன் மருத்துவர் ஜனகன்‘‘வயோதிகக் காலத்தில் உடலில் பலவிதமான பிரச்னைகள் ஏற்படும். அவற்றில், முதுகு எலும்பு பாதிக்கப்படுதல் முக்கிய பிரச்னையாக உள்ளது. இணைப்புகளில் வலி, மூட்டு தேய்மானம், முதுகெலும்பு வளைதல் மற்றும் கீழே விழுவதால் ஏற்படும் முதுகெலும்பு முறிவு என பல பிரச்னைகளால் முதியோர்கள் அவதிப்படுகின்றனர்.

முதுமையில் ஏற்படும் Degenerative Changes எனப்படும் தேய்மானம் காரணமாக முதுகு எலும்பு பாதிப்பு அடைவது பொதுவாக நடைபெறும் ஒன்றாக உள்ளது. அடுத்து, கீழே விழுவதால் ஏற்படும் இடும்பு எலும்பு முறிதல் மற்றும் இணைப்புகள் விலகுதல் போன்ற பாதிப்புகள் முதியவர்களுக்கு அதிகமாக ஏற்படுகின்றன. கண் பார்வை குறைபாடு, மயக்கம் போன்றவை காரணமாக கழிவறை, படிக்கட்டு போன்ற இடங்களில் தவறி விழுதல் இவற்றுக்குக் காரணமாக அமைகின்றன.

இவற்றில் இருந்து முதியோர்களைக் குணப்படுத்த பிரச்னைகளுக்கு ஏற்றவாறு தகுந்த சிகிச்சைகள் உள்ளன. அதேவேளையில், முதுமை காரணமாக சிகிச்சைக்கு அதிக நாள் தேவைப்படும். இவர்களில் சிலருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்வது சிரமம். வயதான காலத்தில் இத்தகைய பாதிப்புகள் வராமல் தடுக்கலாம். அதற்கு எலும்பு தொடர்பான பிரச்னைகள் வரும்முன் தடுப்பதுதான் சிறந்த வழி. இதற்கு உணவுப்பழக்கம் உதவும்.

கால்சியம், புரதம், வைட்டமின்-டி அதிகம் உள்ள உணவு வகைகளை சாப்பிட்டு வர வேண்டும். பால், காய்கறிகள், முட்டை, பாதாம் போன்ற பருப்பு வகைகளையும் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்பு மற்றும் தசைகள் பலம் அடையும். சாதாரண உணவு மட்டுமே பயன் தராது.

முறையான உணவுப்பழக்கம் மற்றும் சரியான வாழ்க்கை முறையையும் தாண்டி வயதானவர்களுக்கு எலும்பு முறிவு, இணைப்புகள் விலகல் போன்றவை ஏற்படலாம். இவற்றின் தன்மையைப் பொறுத்து, மருந்து, மாத்திரைகளோ, பிசியோதெரபி பயிற்சியோ, அறுவை சிகிச்சையோ தேவைப்படும்.

அதன்பின்னர், சில காலம் பெட் ரெஸ்ட் எடுப்பது அவசியமாக இருக்கலாம். இந்தச் சமயத்தில் வயதானவர்கள் நடக்கும்போதும் உட்காரும்போதும் கவனமாக இருக்க வேண்டும். ஹார்மோன் மாறுபாடு காரணமாக பெண்களின் எலும்பு விரைவில் பலவீனம் அடையும். எனவே, இவர்கள் சத்துக்கள் அதிகம் உள்ள உணவு வகைகளை தேவையான அளவு சரியான நேரத்துக்கு சாப்பிட்டு வர வேண்டும்.

வயதானவர்களுக்கு மட்டும் இல்லாமல் நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கும் எலும்பு பாதிப்பு அடைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இதைத் தவிர்க்க, கால்கள் இரண்டும் நன்றாக தரையில் படுமாறு நிமிர்ந்து உட்கார வேண்டும். முதுகுக்கு ஆதரவு தரும் நாற்காலியை பயன்படுத்துவது நல்லது.

ஒருமணி நேரத்துக்கு ஒரு தடவை ஐந்து நிமிடம் நடக்க வேண்டும். இதனால், முதுகெலும்பு ஆரோக்கியம் மேம்படும். இதன் மூலம் வயதான காலத்தில் ஏற்படும் கழுத்தெலும்பு, இடுப்பு எலும்பு வலி மற்றும் Spondylosis  போன்ற பாதிப்பு
களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.’’

வயதானவர்களுக்கு மட்டும் இல்லாமல் நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கும் எலும்பு பாதிப்பு அடைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இதைத் தவிர்க்க, கால்கள் இரண்டும் நன்றாக தரையில் படுமாறு நிமிர்ந்து உட்கார வேண்டும். முதுகுக்கு ஆதரவு தரும் நாற்காலியை பயன்படுத்துவது நல்லது.

- விஜயகுமார்