சபாஷ் இலங்கை!



செய்திகள் வாசிப்பது டாக்டர்

கொசுத்தொல்லையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நம்மைப் பெருமூச்சுவிட வைத்துவிட்டது அந்த செய்தி.‘வடகிழக்கு ஆசியாவின் மலேரியா இல்லாத நாடு’ என்ற அங்கீகாரத்தை இலங்கைக்கு உலக சுகாதார நிறுவனம் வழங்கியிருக்கிறது. இதற்கு முன்னர் மாலத்தீவு மலேரியா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டிருந்தது.

WHO-வின் இந்த அறிவிப்பு வெளியானதும் இந்தியா உட்பட பல நாடுகளும், இலங்கையில் இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் இந்தியாவைவிட நான்கு மடங்கு அதிகம் மழை பொழியும் நாடு இலங்கை. அதனால், கொசு உற்பத்தி அதிகமாக இருக்கவே வாய்ப்பு அதிகம் என்பது கவனிக்கத்தக்க தகவல்.

இலங்கை இந்த பெருமையைப் பெற்றதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.கடந்த 2006-ம் ஆண்டு முதல்2012-ம் ஆண்டு வரை இலங்கையில் ஆண்டுதோறும் 1000 பேர் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதைத் தடுக்க அந்த நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் பயனாக கடந்த 2012-ம் ஆண்டுக்குப் பிறகு மலேரியா காய்ச்சல் பதிவாகவில்லை என இலங்கை சுகாதார அமைச்சகம் கூறியிருந்தது.
 
உலக சுகாதார நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் மூலம் ‘இலங்கையில் மலேரியா இல்லை’ என்பது அதன் பின் உறுதிப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்தே இதற்கானஅங்கீகாரம் அதிகாரப்பூர்வமாக சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனரத்ன
விடம் சான்றிதழாக அளிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் நாயகம் டாக்டர் மார்கரெட் சென்மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்காசிய பிராந்திய இயக்குநரான டாக்டர் பூணம் கெத்திபால் ஆகியோர் இந்த சான்றிதழை அளித்துள்ளனர்.

ஏற்கெனவே ‘யானைக்கால் நோய் அற்ற நாடு’ என்ற சான்றிதழை ஒரு மாதத்துக்கு முன்னதாக பெற்றிருந்த இலங்கை, இப்போது மலேரியா இல்லாத நாடு என்ற கௌரவத்தையும் பெற்றுள்ளது. ‘அப்படியே டெங்குவையும் ஒழிக்க வழி கண்டுபிடிங்க ஸார்!’