எகிறும்... குறையும்!



சுகர் ஸ்மார்ட்
 
நீரிழிவு வந்துவிட்டதா? கவலை வேண்டாம்... முறையாகப் பயன்படுத்தினால், அது உங்கள் நல்வாழ்வுக்கான ஆயுதம்!

‘மருத்துவரைச் சந்திக்கச் செல்கையில் ரத்தப்பரிசோதனை செய்தால் போதும்’ என்றே நீரிழிவாளர்கள் பலரும் நினைக்கின்றனர். நீரிழிவின் நிலை என்பது ஒவ்வொரு நாளுமே மாறுபடக் கூடியது.

கடைசியாகச் சாப்பிட்ட உணவைப் பொறுத்து, செயல்பாடுகளை ஒட்டி, மருந்து எடுத்துக்கொண்ட நேரத்துக்கு ஏற்ப என ஏராளமான நிகழ்வுகளோடு, ரத்த சர்க்கரை அளவு சம்பந்தப்பட்டிருக்கிறது. அதனால் என்றைக்கோ ஒருநாள் எடுக்கப்படுகிற ரத்தப் பரிசோதனை முடிவானது முழுமையானதல்ல.

உதாரணமாக... நீரிழிவு பிரச்னை அல்லாத சாதாரண நபர் நடைப்பயிற்சிக்குப் பிறகு குளுக்கோஸ் அளவை சோதித்தால் 99 mg/dl என்கிற அளவில் இருக்கலாம். அவரே, உணவுக்கு அரை மணி நேரம் பின்பு சோதித்தால், உணவைப் பொறுத்து 200 mg/dl என்கிற அளவுக்கு எகிறி இருக்கும். இதுவே உணவுக்கு 2 மணி நேரத்துக்குப் பிறகு 139 mg/dl என்கிற அளவுக்குக் குறையும்.

ரத்த சர்க்கரை அளவைக் கூட்டவோ, குறைக்கவோ ஏராளமான காரணங்கள் உண்டு. இவையே ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து நீரிழிவின் நிலையைத் தீர்மானிக்கின்றன. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் கூட இம்மாறுதல் நிகழும். ரத்த சர்க்கரையை அதிகரிக்கும் முக்கிய காரணிகள்...

*உணவு
*உடல் மற்றும் மன அழுத்தம்
*உடல்நலக் குறைவு
*மரபணு மாற்றங்கள்
*மருந்துகளை தாமதமாக உட்கொள்ளுதல் / மறந்து விடுதல்
*உடலியல் ரீதியாக மந்தமாகச் செயல்படுதல்
*புகை பிடித்தல்

ரத்த சர்க்கரையை குறைக்கும் முக்கிய காரணிகள்...

*உணவைத் தவிர்த்தல் / தாமதித்தல்
*உடலியல் ரீதியாக சுறுசுறுப்பாகச் செயல்படுதல் / உடற்பயிற்சி
*மருந்துகளை முறையாக உட்கொள்ளுதல்
*அளவுக்கு மீறி மது உட்கொள்ளுதல்

எந்த அளவு எகிறும்?
எந்த அளவு குறையும்?

ரத்த சர்க்கரை அளவு மாறுபாடுவது ஒவ்வொருவருக்கும் வேறுபடக் கூடியது. ஒன்றோ, பலவோ இதற்கான காரணங்களாக இருக்கலாம். உதாரணமாக... உணவு அருந்திய உடன் புகை பிடிப்பது சிலரது வழக்கம். பொதுவாக இவர்கள் உடற்பயிற்சி செய்வதும் இல்லை. இவர்களது ரத்த சர்க்கரை அளவு நிச்சயமாககிடுகிடுவென உயரத்தான் செய்யும்.

மருத்துவர் அறிவுறுத்தலை முறையாகப் பின்பற்றுகிறவர்களுக்கு ஒவ்வொரு உணவுக்குப் பிறகும் பாதுகாப்பு எல்லைக்குள் ரத்த சர்க்கரை அதிகரிக்கும். அடுத்த உணவு வேளைக்குள் குறைந்துவிடும். இப்படியே மாறி மாறி இருந்தாலும், ஒரே சீராக இருக்கும். நல்ல அளவீடுகளைத் தாண்டாது.

நீரிழிவாளர்களுக்கு இப்படி இருப்பதில்லை என்பதுதான் பிரச்னை. ஒரே நாளில் பலமுறை ரத்த சர்க்கரை அளவு பாதுகாப்பு எல்லையைத் தாண்டி வெளியிலும் செல்லும். அதனால்தான் மருத்துவர்கள் குறிப்பிட கால இடைவெளிகளில் ரத்த சர்க்கரை அளவை வீட்டிலேயே பரிசோதிக்கச் சொல்கிறார்கள்.

முறையான பரிசோதனை திட்டத்தில் இருந்தாலே, கிடைக்கிற அளவீடுகளைப் பொருத்து, வாழ்க்கைமுறை மாற்றங்கள் செய்து, நீரிழிவைக் கட்டுக்குள் வைக்க முடியும். உணவு ரத்த சர்க்கரையை அதிகரிக்கும் என்பதாலேயே, உணவு கெட்ட விஷயம் அல்ல. ஆரோக்கியமான சமச்சீர் உணவை குறித்த நேரத்தில் எடுத்துக் கொள்வது ரத்த சர்க்கரையை நல்ல அளவீடுகளுக்குள் கொண்டுவர நிச்சயம் உதவும்.

விரதம் இருந்தோ, பட்டினி கிடந்தோ ரத்த சர்க்கரையை குறைக்க நினைத்தால், அது அபாயத்தையே அளிக்கும். என்றைக்காவது விருந்தில் திளைக்க விரும்புகிறவர்களுக்கும் இதே எச்சரிக்கைதான். நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கும்போது விருந்து சாப்பிடலாம் - ஆனாலும், அளவாக. கட்டுப்பாட்டில் இல்லாத காலகட்டத்தில் விருந்து என்பது விரும்பத்தகாதது.

விரதம் இருந்தோ, பட்டினி கிடந்தோ ரத்த சர்க்கரையை குறைக்க நினைத்தால், அது அபாயத்தையே அளிக்கும். என்றைக்காவது விருந்தில் திளைக்க விரும்புகிறவர்களுக்கும் இதே எச்சரிக்கைதான்!

சோதனை மேல் சோதனையா?

ரத்த சர்க்கரை அளவு கன்னாபின்னாவென அதிகரித்தால், அது காலையும் கூட விட்டுவைக்காது.

ஸ்வீட் டேட்டா

நீரிழிவு காரணமாக ஏற்படுகிற பிற குழப்பங்கள் எவ்வளவு நபர்களைத் தாக்குகிறது?
நியூரோபதி                    60%
கரோனரி இதய நோய் (CHD)    32.3%
காட்ராக்ட்                    20%
ரெட்டினோபதி              15.4%
பெரிபெரல் வஸ்குலர் டிசிஸ்    11.5%
செரிப்ரோவஸ்குலர் ஆக்சிடென்ட்ஸ் 6.9%

தாஸ்