கருப்புடா!
டயட்
‘காதலில் சைவம் உண்டு, அசைவம் உண்டு’ என்று இரண்டு வகை பிரித்தார் வைரமுத்து. பழங்களிலும் அதேபோல் இரண்டு வகைகளைப் பிரிக்கிறார்கள் மருத்துவர்கள். நிறங்களின் அடிப்படையில் வெளிர்நிற பழங்கள் என்றும் அடர்நிற பழங்கள் என்றும் பிரிக்கப்படும் இதன் சிறப்பு என்னவென்று ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரியிடம் கேட்டோம்.
 ‘‘சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, வெள்ளை, நீலம், ஊதா போன்ற பல நிறங்களில் பழங்கள் உள்ளன. இவைகளில் நாவல், பேரீச்சம்பழம், திராட்சை, ப்ளாக் பெர்ரி போன்ற கருப்பு நிறத்தை அடிப்படையாகக் கொண்ட அடர்நிறப் பழங்கள் மிகவும் சிறப்பானவை.
(பிளம்ஸ், கொடிமுந்திரி, மாதுளை போன்றவையும் அடர்நிற பழங்கள் பட்டியலில் உண்டு.) இந்த அடர்நிறப் பழங்கள் ரத்த அழுத்தம் மற்றும் HDL என்கிற நல்ல கொலஸ்ட்ராலை உடலில் சீராகப் பராமரிக்கப் பெரிதும் உதவுகிறது. மேலும் இதய ஆரோக்கியம், தெளிவான கண்பார்வை மற்றும் அறிவுக்கூர்மைக்கும் இவை உறுதுணையாக அமைகிறது.
குறிப்பாக, அடர்நிற பழங்களில் கருப்புநிறம் கொண்ட நாவல், பேரீச்சம் பழம், திராட்சை, ப்ளாக் பெர்ரி பழங்களில் Pro anthocyanidins, Chlorophyll என்கிற நிறமி அதிகம் உள்ளது. இந்த நிறமிகள் நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களை நமது உடலுக்குள் செல்லவிடாமல் தடுக்கும் திறன் கொண்டவை. திராட்சைப் பழங்களிலுள்ள அமினோ அமிலம் உடல் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. பெர்ரி பழங்கள் சாப்பிடுவதால் சிறுநீரக நோய்த் தொற்று வராது’’ என்று கருப்பின் சிறப்பு பற்றிக் கூறுகிறார் புவனேஸ்வரி.
- க.கதிரவன்
|