பின்விளைவுகளும்...முன்னேற்பாடுகளும் !



மது... மயக்கம் என்ன ?

ஒரே ஒரு மாதம் மது அருந்தாமல் இருந்தாலே மகத்தான மாற்றங்கள் நிகழும். கல்லீரல் செயல்பாடு அதிகரித்தல், கல்லீரல் நோய்கள் மற்றும் நீரிழிவு ஏற்படும் அபாயம் குறைதல், ரத்தக் கொதிப்பு குறைதல் ஆகிய இனிய விளைவுகளை முப்பதே நாட்
களில் பெறலாம்!

மருந்து உதவுமா?
மதுப்பழக்கத்துக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் மருந்துகள் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன. மதுப்பழக்கத்தை தொடராமல் இருக்கச் செய்யும் வகையில் சிலருக்கு மருந்துகள் அளிக்கப்படுகின்றன. இதற்கான குறிப்பிட்ட மாத்திரையை சாப்பிட்டால், ஸ்ட்ராங்கான பின்விளைவுகள் இருக்கும். இதற்குப் பயந்தே குடிப்பதைத் தொடர மாட்டார்கள். அப்படி ஓர் அசுர வைத்தியம் அது!

இம்மருந்தை நேரடியாக மருந்துக்கடைகளில் வாங்கி, தானாகப்  பயன்படுத்துவது அபாயம். குடிப்பழக்கம் உடைய குடும்ப உறுப்பினர் அல்லது நண்பருக்கு நாம் வாங்கிக் கொடுப்பதும் ரிஸ்க்தான். இம்மருந்துகளை மனநல சிறப்பு மருத்துவர் மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்.

மாற்று மருத்துவ முறைகளிலும் இதற்கான மருந்துகள் உள்ளன. ‘குடிப்பவருக்குத் தெரியாமலே கொடுக்கலாம்’ என்பது போன்ற விளம்பரங்களைக்கூட பார்த்திருப்பீர்கள். ஆனால், ஆங்கில மருத்துவமோ, மாற்று மருத்துவமோ - முறையான மருத்துவர்கள் பரிந்துரைப்பவை மட்டுமே நிச்சய பலன் தரும். பக்கவிளைவுகளைச் சமாளிக்கும் முறைகளையும் அப்போதுதான் அறிந்து செயல்பட முடியும்.

ஆகவே, கவனம்!நமக்கு உற்றவரோ, உறவினரோ அதீத குடிப்பழக்கத்தில் இருந்தால், அவருக்கு பின்வரும் அறிகுறிகளில் ஒன்றோ, பலவோ இருந்தால், சற்றும் தாமதிக்காமல் வலுக்கட்டாயமாகவேணும் மருத்துவரிடம் அழைத்துச் சென்று முறையான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

* குடி காரணமாக விபத்தில் சிக்கி, தனக்கோ, பிறருக்கோ பாதிப்பு ஏற்படக் காரணமாக இருத்தல்.
* ரத்த வாந்தி எடுத்தல்.
* மஞ்சள் காமாலைக்கு ஆளாதல்.
* தீவிரமான மனநோய்கள்... உதாரணமாக அறிதிறன் பிறழ்வு (Psycoses) போன்றவை.
* கடுமையான போதை நிறுத்தப் பின்விளைவுகள் காணப்படுதல்.

அதென்ன போதை நிறுத்தப் பின்விளைவு?
‘குடியை நிறுத்தினா ரொம்பப் பிரச்னை வரும் மச்சான்... உடம்பு ஒத்துழைக்காது... எந்த வேலையும் செய்ய முடியாது...’ என்பது போன்ற பதில்களை நம் நண்பர்கள் கூற நிறையவே கேட்டிருப்போம். போதை அடிமையாக உள்ள ஒரு நபர் திடீரென மதுவை நிறுத்தினால் சிலபல பாதிப்புகள் ஏற்படக்கூடும். ‘நிறுத்தி விடலாம்’ என்கிற மனநிலைக்கு வந்து, கடைசியாகக் குடித்த 24 மணி நேரத்துக்குள் கூட பாதிப்புகள் தொடங்கக்கூடும்.

குறைந்தபட்சம் 4 நாட்களாவது இது பற்றிக்கொள்ளும். அதிகபட்சம் 10 நாட்கள் கலக்கி எடுக்கலாம். சம்பந்தப்பட்ட நபர் எவ்வளவு அதிகமாக குடித்துக் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு இந்த மனச்சிக்கலும் உடல் சிக்கலும் இருக்கும். இதையே போதை நிறுத்தப் பின்விளைவுகள் என்கிறோம்.முதல் நாள் தொடங்கி 10 நாட்கள் வரை வெளிப்படக்கூடிய போதை நிறுத்த பின்விளைவு அறிகுறிகள்...

*பதற்றம்
*எரிச்சல் / கோபம்
*அமைதி இன்மை
* தூக்கம் இன்மை

*நடுக்கம்
*தடுமாற்றம் / தள்ளாட்டம்
*வாந்தி அல்லது வாந்தி எடுக்கும் எண்ணம்
*காய்ச்சல் / வயிற்றுக்கோளாறு
அடுத்தகட்டமாக அதீத குழப்பங்களும் மாயத்தோற்றங்களும் சிலருக்கு ஏற்படக்கூடும். வெகு சிலருக்கு வலிப்பு கூட வரலாம்.

ஆனால், பயம் கொள்ள வேண்டாம். மேற்கண்ட போதை நிறுத்த அறிகுறிகளில் ஒன்றோ, பலவோ ஏற்பட்டால், தாமதிக்காமல் மருத்துவர் உதவியை நாடலாம். போதை நிறுத்தப் பின்விளைவுகள் மற்றும் அதன் அறிகுறிகள் பற்றி மருத்துவர் அறிவுறுத்துவார். சிலருக்கு முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கலாம். குறிப்பாக கல்லீரல் பாதிப்புக்கான சோதனைகளும் செய்யப்படும்.

காய்ச்சல், வலிப்பு, திரவ உணவுகளைப் பருக இயலாமை உள்பட உடல் சார் கோளாறுகள் இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். நீரிழிவு இருந்தாலும் கூடுதல் கவனம் தேவை.சிலர் பிரமை பிடித்தது போலவோ, குழம்பிய நிலையிலோ காணப்படுவார்கள். இவர்களுக்கும் சிறப்பு ஆலோசனை மற்றும் சிகிச்சை தேவை.

குடி நிறுத்தியவர்களில் பெரும்பான்மையோருக்கு தயமின் போன்ற வைட்டமின்கள் ஊசியாகவும், மல்ட்டி வைட்டமின், ஃபோலிக் ஆசிட் போன்றவை மாத்திரையாகவும் வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் சாதாரண நிலைக்குத் திரும்ப இவை துணைபுரியும். ரகசியம் காக்கப்படும்!மதுப்பழக்கத்திலிருந்து மீள விரும்பு கிறவருக்கு உதவக் காத்திருக்கும் மருத்துவர் நிச்சயமாக ரகசியம் காப்பார்.

பாதிக்கப்பட்டவரிடம் தனியாகவே பேசுவார். இயல்பான சூழலை உருவாக்குவதற்காக சாதாரணமாகவே பேசுவார். கடின சொற்களைப் பயன்படுத்துதல், திட்டுதல், பயமுறுத்துதல், மிரட்டுதல் போன்றவை அவரது மொழியில் இடம்பெறாது. மருத்துவரை முழுமையாக நம்பலாம் என்ற நம்பிக்கை பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட பிறகு, குடி பற்றி மனம்விட்டுப் பேசலாம்.

மருத்துவர் மதுப்பழக்கம் பற்றி எந்த முன்முடிவுடனோ, பொதுவான எண்ணத்துடனோ இருக்க மாட்டார். மது அருந்துதல் தகாது என்றே அவர் பெர்சனலாக கருதினாலும், அவரது நோக்கம் மதுவுக்கு அடிமையானவருக்கு உதவுவதுதான். அதனால் அவர் கோபத்துடனோ, விரோதி போலவோ பாதிக்கப்பட்டவரைப் பார்க்க மாட்டார்.

இந்த அடிப்படையில்தான் குடிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்கிற வரையறை மருத்துவர்களுக்கு உள்ளது. ஆகவே, சமூகம் பற்றியோ, அடுத்தவர் என்ன நினைப்பார் என்றோ கவலை கொள்ளாமல், தயங்காமல் சிகிச்சை எடுக்கலாம். மருத்துவர் அறியும் அறிகுறிகள்...

*சிகிச்சைக்கு வந்துள்ளவர் பொறுமையின்றியோ, பதற்றமாகவோ, காரணம் இல்லாத பரபரப்புத் தன்மையுடனோ காணப்பட்டால் என்ன அர்த்தம்?
இவை மது அருந்தாதின் அறிகுறி களாக இருக்கலாம்!4மது வாசனை வந்தால், 12 மணி நேரத்துக்குள் அவர் மது அருந்தியுள்ளதாக உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

*காயம், தழும்பு, சிராய்ப்பு போன்றவை குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்துக்கு உள்ளான அறிகுறிகளாக இருக்கலாம். அல்லது குடித்துவிட்டு கைகலப்பு அல்லது தகராறில் ஏற்பட்டதன் விளைவாக இருக்கலாம்.

*இயல்பாக இருக்க முடியாமை, தொடர்ந்து தடுமாற்றத்திலேயே இருத்தல், ஓரிடத்தில் சிறிது நேரம் கூட ஒழுங்காக அமர முடியாத நிலை போன்றவை இருந்தால் மூளை சார்ந்த பிரச்னைகளும் ஏற்பட்டிருக்கக்கூடும்.

*குடிப்பழக்கம் உள்ள நபருக்கு கல்லீரல் பரிசோதனை (ஹெபடைடிஸ் போன்றவை) செய்யப்பட வேண்டியது மிக அவசியம். ஒரு சிறுசோதனை அவரது உயிரையே காக்கும்!

அதீத குழப்பங்களும் மாயத்தோற்றங்களும் சிலருக்கு ஏற்படக்கூடும். வெகு சிலருக்கு வலிப்பு கூட வரலாம். ஆனால், பயம் கொள்ள வேண்டாம்.

போதை அடிமையாக உள்ள ஒரு நபர் திடீரென மதுவை நிறுத்தினால் சிலபல பாதிப்புகள் ஏற்படக்கூடும். ’நிறுத்திவிடலாம்’ என்கிற மனநிலைக்கு வந்து, கடைசியாகக் குடித்த 24 மணி நேரத்துக்குள் கூட பாதிப்புகள் தொடங்கக்கூடும்.

(தகவல்களைப் பருகுவோம்!)

டாக்டர் ஷாம்