சாருக்கு ஒரு நிலவேம்பு டீ...



மாத்தி யோசி

டெங்கு காய்ச்சல் பற்றிப் பேசும்போதெல்லாம் நிலவேம்பு பற்றியும் பேச்சு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. நிலவேம்பு டெங்குவை விரட்டும் மகிமை கொண்டதுதான் என்றாலும் அந்த கஷாயம் கசப்பானதாக இருக்கிறதே.. அதற்கு மாற்று வழி ஏதேனும் சொல்லுங்கள் என்று சென்னை கிங் இன்ஸ்டிட்யூட் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் ப.குணசேகரனிடம் கேட்டோம்…

‘‘டெங்கு உள்பட கொசுக்களால் பரவும் 30 வகையான உயிர்க்கொல்லி நோய்களைத் தடுக்கும் ஆற்றல் நிலவேம்பில் இருப்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நிலவேம்பினை வாரத்துக்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் எந்தக் காய்ச்சலாக இருந்தாலும் நம்மை அண்டாது. வந்த காய்ச்சலும் குணமாகிவிடும். நிலவேம்பு கசப்பான தன்மை கொண்டது என்பதால் நிலவேம்பினை தேநீராகத் தயாரிக்கும் முறையைத் தொடங்கியிருக்கிறோம். 15, 30, 60 மிலி கிராம்களில் வருகிற மாதிரி Tip tea முறையில் தயாரிப்புப் பணி நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலவேம்பு டீ பேக்கை வெந்நீரில் நனைத்து குடிக்க வேண்டும். கசப்பு சுவையை நீக்கு வதற்காக ஸ்டீவியா(Stevia) என்ற செடியின் எசென்ஸை சேர்த்துக் கொள்ளலாம். எல்லாக் கடைகளிலும் கிடைக்கும் ஸ்டீவியா எசென்ஸை ஒன்றிரண்டு சொட்டு சேர்த்தால் நிலவேம்பின் கசப்புத்தன்மை குறைந்துவிடும். இது மட்டுமல்லாமல் வீட்டில் சாதாரணமாக தேநீர் தயாரிப்பது போலவும் தயாரிக்கலாம்.

நிலவேம்புப் பொடி அனைத்து நாட்டு மருந்துக்கடைகளிலும், அரசு மருத்துவமனைகளின் சித்தா பிரிவிலும் தாராளமாகக் கிடைக்கிறது. ஒரு டீ ஸ்பூன் நிலவேம்புப் பொடியை 200 மிலி தண்ணீரில் கொதிக்கவைக்க வேண்டும். கருப்பட்டி, பனங்கற்கண்டு, வெல்லம் என ஏதாவது இனிப்பு சேர்த்துக் கொள்ளலாம். அது பாதியாக 100 மில்லி ஆகும் வரை காய்ச்ச வேண்டும்.

இனிப்பு சேர்க்கப்பட்டிருப்பதால் கசப்புத்தன்மை குறைந்துவிடும். அதன்பிறகு, 13 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் 15 மிலியும், பெரியவர்கள் 30 மிலியும் சாப்பிட்டால் போதும். இந்த நிலவேம்பு டீயை டெங்கு சீசனில்தான் சாப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை. வாழ்நாள் முழுக்கவே சாப்பிடலாம். இதன்மூலம் எண்ணற்ற நன்மைகள் உண்டு’’ என்கிறார்.

- தி.இந்திராணி,
படம் : ஏ.டி.தமிழ்வாணன்