லேசர் சிகிச்சையில்லேட்டஸ்ட்!
விழியே கதை எழுது பார்வைக் குறைபாடுகளுக்கு லேசர் முறையில் அளிக்கப்படுகிற சிகிச்சைகளில் இன்று எத்தனையோ முன்னேற்றங்கள் வந்திருக்கின்றன. எந்தெந்த பிரச்னைகளுக்கு எந்த மாதிரியான லேசர் சிகிச்சைகள் பயன்படுகின்றன என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
 லேசிக் (LASIK)
Light amplification by stimulated emission of radiation என்பதன் சுருக்கமே LASER. லேசர் என்பது மோனோகுரோமாட்டிக் எனப்படுகிற ஒரே ஒரு கலர். இதன் எஃபெக்ட் எங்கே பாய வேண்டுமோ, அங்கே துல்லியமாகப் பாயும் என்பதுதான் இதன் சிறப்பு. திசுக்களை சூடாக்கிவிட்டுத்தான் இது தன் இலக்கை அடையும்.
இது குறிப்பிட்ட திசுக்களை உடைத்து விடும்(photo disruption) அல்லது அந்தத் திசுவுக்கு ஒத்தடம் கொடுப்பது மாதிரி செய்யும் அல்லது அந்தத் திசுவைக் குழப்பி விட்டு விடும்(photo coagulation) அல்லது அந்த திசுவையே எடுத்துவிடும்(photo ablation). இந்த வழிகளில்தான் லேசர் சிகிச்சைசெயல்படுகிறது.எனவே, லேசரின் சக்தியைப் பொறுத்து நமக்கு என்ன மாதிரியான பலன் தேவைப்படுகிறது என்பதைப் பொறுத்து அவற்றை உபயோகிக்கிறோம்.
உதாரணத்துக்கு கருவிழி ரொம்பவும் மெலிதாக இருப்பவர்களுக்கு எபி லேசிக், இன்னும் ஸ்மைல் மற்றும் bladeless lasik என்றெல்லாம் வந்திருக்கின்றன. வெளியில் அணிகிற கண்ணாடி அல்லது கான்டாக்ட் லென்ஸ் போலவே இந்த லேசர் சிகிச்சையானது கருவிழியை ஷேப் செய்து விட்டுவிடும். கருவிழிக்கு மேல் நாம் கண்ணாடியோ, கான்டாக்ட் லென்ஸோ அணிகிறோம்.
அது என்ன பவரோ, அதை கருவிழியிலேயே கொடுத்து விடுகிறோம். கான்டாக்ட் லென்ஸ் போட்டாலும் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது. ஆனால், அவை வெளியில் உள்ள ஆக்சிஜனை உள்ளே அனுமதிக்காமல் தடுக்கின்றன.
எனவே, குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் அதை அணிந்திருக்க முடியாது. கழற்றி வைக்க வேண்டும். ஆனால், லேசர் என்பது கருவிழியையே ஷேப் செய்துவிடுவதால் இதை செய்து கொள்கிறவர்கள், கண்ணாடி பவர் இல்லாத மற்றவர்களைப் போலவே தங்களையும் காட்டிக் கொள்ளலாம்.
லேசர் சிகிச்சை செய்யப்பட்ட ஆரம்ப காலங்களில் சில பிரச்னைகள் இருந்தன. உதாரணத்துக்கு இரவில் வண்டி ஓட்டும்போது கண்கள் அதிகம் கூசும். வறட்சி, ஒருவித மந்தமான பார்வை நிலை போன்றவை இருந்தன.
ஆனால், இன்றைய நவீன தொழில்நுட்ப முன்னேற்றத்தில் அந்தப் பிரச்னைகள் ஏதும் இல்லை.முன்பெல்லாம் லேசருக்கு உபயோகிக்கிற பிளேடுகளால் சில பிரச்னைகள் இருந்தன. இப்போது அந்த பிளேடுகளுமே நவீனமாக மாறி வந்திருக்கின்றன. அந்த பிளேடுகளால் கருவிழியை ஒரு பாதியில் வெட்டி, தூக்கி, உள்ளே கருவிழியின் உள்பக்க வடிவத்தை கொஞ்சம் மாற்று வோம். இன்று பிளேடே தேவைப் படாத Bladeless Lasik வந்திருக்கிறது.
கண்களின் உள்ளே ஐரிஸ் என்றொரு பகுதி உண்டு. நம் கண்களின் நிறத்துக்கு அதுதான் காரணம். அந்த ஐரிஸுக்கு நடுவில் உள்ள திறப்புதான் கண்ணில் உள்ள பாப்பா. அந்த ஐரிஸ் சில நேரங்களில் ரொம்பவும் தடித்து, கருவிழியின் பக்கத்தில் வந்திருக்கும். அதனால் கருவிழிக்கும் ஐரிஸுக்கும் நடுவே இடைவெளியே இருக்காது. அந்த இடைவெளி வழியேதான் நம் கண்களின் விழித்திரவம் கண்களை விட்டு வெளியே போகும். இந்த இடைவெளி இல்லாததால் கண்களில் அழுத்தம் அதிகரிக்கும்.
இருட்டினாலோ, மாலைப் பொழுது வந்தாலோ தலைவலிப்பது, அடிக்கடி தலைவலி வருவது, பார்வை மங்குவது போன்றவை இந்திய மற்றும் சீனப் பெண்களுக்கு 40 வயதுக்குப் பிறகு வருவது ரொம்பவும் சகஜம். அந்த ஐரிஸிலும் லேசர் மூலமாக துளை போட்டு அழுத்தத்தைக் குறைக்க முடியும்.லேசர் மூலம் செய்யப்படுகிற கேட்ராக்ட் சிகிச்சைகள் இப்போது பிரபலமாகி வருகின்றன.
லேசர் மூலமாக கண்புரையின் வெளிப்பகுதியை எடுக்கலாம். மொத்த சிகிச்சையும் லேசரின் மூலம் செய்யப்படுவதில்லை. உள்ளே போய் அல்ட்ரா சவுண்ட் மூலமாக கேட்ராக்ட்டை எடுக்கலாம். கேட்ராக்ட் எடுத்த பிறகு பின்னால் ஒரு திரை போன்று உருவாகும். கேட்ராக்ட் அறுவை செய்து கொள்கிறவர்களில் இது 5 முதல் 30 சதவிகிதத்தினருக்கு வரும். அதையும் லேசர் மூலம் சரி செய்து பார்வை திரும்பப் பெறச் செய்ய முடியும்.
நீரிழிவு, ரத்த அழுத்தம் காரணமாக விழித்திரையினுள் ரத்த நாளங்கள் வெடித்தாலோ, விழித்திரையில் ஓட்டை இருந்தாலோ அதைக் கூட என்டோ லேசர் அல்லது PRP மூலம் சரி செய்து ரத்த நாளங்களில் ரத்தம் கசிவதைக் குறைக்க முடியும். கண்ணின் நடு நரம்பில் தண்ணீர் சேர்வதையும் லேசர் மூலம் சரி செய்யலாம்.
கண்ணையும் மூக்கையும் இணைக்கிற ஒரு குழாய் இருக்கிறது. அதற்கு முன் ஒரு நீர்ப்பை இருக்கும். அதில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் DCR என்கிற சிகிச்சை தேவைப்படும். அதைக் கூட லேசரில் செய்யலாம்.
கண்ணாடிக்கு பதில் லேசர்....கவனம் வேண்டும்!
21 வயது வரை கண்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். எனவே அதற்கு முன் லேசர் செய்து விட்டால் அது நிரந்தரம். திரும்பத் திரும்ப செய்ய முடியாது. கண் நன்கு வளர்ந்து அதன் பவர் ஒரு நிலைக்கு வந்த பிறகுதான் லேசர் சிகிச்சை செய்யப்பட வேண்டும்.விழித்திரையில் பிரச்னை இருந்தாலும் லேசர் அறிவுறுத்தக்கூடியதல்ல. அதே நேரம் விழித்திரை பலவீனமாக இருந்தாலும் செய்யக் கூடாது.
40 வயதில் லேசர் செய்வதும் உசிதமல்ல. அப்போது கிட்டப் பார்வைப் பிரச்னை வந்திருக்கும். அடுத்த பத்து வருடங்களில் கேட்ராக்ட் பிரச்னையும் வரலாம். அவர்களது பிரச்னைகளுக்கு லேசர் செய்வது தற்காலிகத் தீர்வையே தரும்.
லேசர் சிகிச்சை செய்யப்பட்ட ஆரம்ப காலங்களில் சில பிரச்னைகள் இருந்தன. உதாரணத்துக்கு இரவில் வண்டி ஓட்டும்போது கண்கள் அதிகம் கூசும். வறட்சி, ஒருவித மந்தமான பார்வை நிலை போன்றவை இருந்தன. ஆனால், இன்றைய நவீன தொழில்நுட்ப முன்னேற்றத்தில் அந்தப் பிரச்னைகள் ஏதும் இல்லை.
(காண்போம்!)
தொகுப்பு: எம்.ராஜலட்சுமி
|