டியர் டாக்டர்
 *குங்குமம் டாக்டர் மூன்றாம் ஆண்டில் கால்களைப் பதித்து இருப்பது மகிழ்ச்சியான விஷயம். தொடரட்டும் உங்கள் பணி... மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள் ! - சுகந்தி நாராயண்,வியாசர் நகர்.
கொழுப்பைக் கரைக்கும் ‘குளுகுளு’ சிகிச்சை பற்றி... ‘கிளுகிளு’ படங்களுடன் விரிவான தகவல்களை வெளியிட்டு அசத்திவிட்டீர்கள். Freeze away fat என்ற இந்த புதிய சிகிச்சை கட்டணம் குறைவாக இருந்தால் பலருக்கும் பலன் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. - சா. பாலுசாமி, திருவண்ணாமலை
*வாசிப்பு பற்றிய கட்டுரை மானிட உடல் நலத்துக்கும், வாசிப்புக்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டிய விதம் அருமை. அந்த இருபக்க கட்டுரை காலத்துக்கேற்ற அறிவுரை. - இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி மற்றும் பாப்பாக்குடி இரா.செல்வமணி, திருநெல்வேலி.
புற்றுநோயைத் தடுக்கும் புரோபயாடிக் பற்றிய செய்தி கண்டு வியந்தேன். உணவியல் நிபுணர் திவ்யா கூறும் இந்த செய்திகளை மக்கள் அறியும் வண்ணம் பரப்ப வேண்டும். அந்தப் பணியில் ‘குங்குமம் டாக்டர்’ முதலிடம் வகிப்பது பாராட்டுக்குரியதாகும் . இதழாசிரியருக்கும், இதழுக்கும் கோடானுகோடி நன்றிகள் - சு. இலக்குமண சுவாமி, இருங்கூர், மதுரை.
ஒரு விலங்கின் ரத்தத்தில் இருந்தே இன்னொரு விலங்கின் விஷத்துக்கு மருந்து தயாரிக்கப்படுவதை அறிந்ததும் அறிவியல் உலகமும், மருத்துவ துறையும் ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை என்று நினைக்க தோன்றியது. - சா. சவரிமுத்து, திருநெல்வேலி மற்றும் நீலகண்டன்,கொடுங்கையூர்.
இயந்திரமயமான வாழ்க்கைமுறை, வேலைச்சுமை போன்றவற்றால் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாய் நேரத்தைச் செலவிடுவதுதான் ஒரே வழி எனக் கூறியிருப்பது அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஆலோசனை. அதேநேரத்தில் செலவில்லாத வழியும்கூட.- தர், பூந்தமல்லி.
நம்முடனே எந்நேரமும் இருந்து தூக்கம், உணவுமுறை, உடல் தொடர்பான இயக்கங்கள் பற்றி கண்காணிக்கும் Health Wrist Band பற்றிய கட்டுரை ஆச்சரியம் தந்தது. நிஜமாகவே ஸ்டைல் டாக்டர்தான். - ஞானபாரதி, சேலையூர் மற்றும் ஆதித்தியா(மின்னஞ்சலில்).
மருத்துவத்துறையில் பணியாற்றுபவர்கள் பணம் சம்பாதிப்பதைக் குறிக்கோளாக கொண்ட இன்றைய காலக்கட்டத்தில், அன்பையும், உறவுகளையும் சம்பாதித்த செவிலியர் பிளாசம் அனைவருக்கும் சரியான முன்னுதாரணம். - நரசிம்மன், பழனியப்பன், சேலம். எல்ஜின் ஜோசப்,செங்குன்றம்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.’ தூக்கத்துக்கும் இது பொருந்தும் என்ற டாக்டர் ராமகிருஷ்ணன் அறிவுரைப்படி, இனியாவது நீண்ட நேரம் தூங்குபவர்கள் விழித்துக்கொண்டால் பல பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம் - மதிவாணன், பர்கூர்.
|