பேக்கிங் முக்கியம் அமைச்சரே...



‘‘ஆரோக்கியத்துக்கான முக்கிய வழியில் ஒன்று வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது என்பதை அடிக்கடி வலியுறுத்திக் கொண்டே இருக்கிறோம்.இதன் அடுத்தகட்டமாக, வீட்டில் சமையலுக்காக வாங்கும் உணவுப்பொருட்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக, பாக்கெட்டுகள், பாட்டில்கள், அட்டைப்பெட்டிகளில் அடைக்கப்பட்ட பொருட்களின் மீதும் கவனம் அவசியம்’’ என்கிறார் இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவர் ரவி.

‘‘இன்றைய சூழ்நிலையில் வீட்டில் செய்யும் உணவுப்பண்டங்களின் சுகாதாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஏனென்றால் கவர்ச்சிகரமாகத் தோற்றமளிக்கும் அரிசி, பருப்பு போன்ற தானிய வகைகள் நீண்ட நாள் பூச்சிகள் அரிக்காமல் இருக்கவும் சுவையுடன் இருக்கவும் ஏராளமான ரசாயனங்கள் சேர்க்கப்பட்டே பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகின்றன.

வியாபார நோக்கம், அலட்சியம் காரணமாக நாம் நம்பும் அளவு அவைகள் எந்த அளவு தரமானதாக தயாரிக்கப்படுகிறது என்பது ஒருபக்கம் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், மறுபுறம் அவைகள் பாதுகாப்பாகப் பேக்கிங் செய்யப்படுவதும் கிடையாது.

இதன் விளைவு சுத்தமானது, சுகாதாரமானது என்று நம்பி வாங்கும் உணவுப் பொருட்கள் சீக்கிரமாக நச்சுத்தன்மை உடையதாய் மாறுகின்றன. குளிர்பானங்களில் உயிரைப் பறிக்கும் பல்லி, புழு மிதந்து அச்சுறுத்துவது சாதாரண செய்தியாகிவிட்டது.

நாம் உபயோகப்படுத்தும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்கள், பாட்டில் மற்றும் அட்டைப்பெட்டிகளில் உள்ள குளிர்பானங்கள் என எல்லாவற்றிலும் சிறிதேனும்ரசாயனக் கலப்பு இருக்கும்.

அது நாளாக நாளாக இன்னும் விஷத்தன்மை உடையதாக மாறிவிடும். எனவே, பாட்டில்கள், பாக்கெட்டுகள் மற்றும் அட்டை பெட்டிகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவுப் பண்டங்களை வாங்கி உபயோகப்படுத்தும் முன், அவை தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் அவற்றின் காலாவதி தேதியை கவனமாகப் பார்க்க வேண்டும்.

முக்கியமாக இந்த உணவுப்பொருட்களில் சேர்க்கப்படும் Sodium Benzoate  பல நேரங்களில் இயல்பாக இருக்க வேண்டிய அளவைவிட, அதிகமாக காணப்படும். இதன் காரணமாக, இவற்றில் உள்ளசர்க்கரை எதிர்விளைவு உண்டாகி தொற்றுநோய் முதல் புற்றுநோய் வரை பல பாதிப்புகள் ஏற்படலாம். வயிறு தொடர்பான பிரச்னைகளும் சாதாரணமாக உண்டாகக் கூடும். 

காலாவதி தேதி குறிப்பிட்டிருந்தாலும் நீண்ட நாள் விற்பனை ஆகாமல் உள்ள உணவுப்பொருட்களை வாங்கக் கூடாது என்பதும் முக்கியம். பல கடைகளில் மாதக்கணக்கில் தேதி குறிப்பிட்டு பொருட்கள் விற்பனை ஆகாமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது. உடனடியாக சாப்பிடும் உணவுப்பொருளாக இருந்தால் சரியாக மூடப்பட்டிருக்கிறதா, ஓட்டை எதுவும் இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்’’ என்று எச்சரிக்கிறார்.

நுகர்வோர் செய்ய வேண்டியது என்ன என்று கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் தொடர்புஅலுவலர் சோமசுந்தரம் விளக்குகிறார்.‘‘நீங்கள் வாங்கிய பொருட்களில்,சுகாதார குறைவை ஏற்படுத்தும் பல்லி, பூரான், புழு இருந்தாலோ, அவற்றால் பாதிக்கப்பட்டு இருந்தாலோ சட்டரீதியாக உரிய இழப்பை பெற வழிவகை உண்டு.

இதற்கு அவர்கள் பொருள் வாங்கியதற்கான பில் முக்கிய சான்று என்பதால் அதை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். அதன் பின்னர், உரிய நுகர்வோர் அமைப்பிடமோ அல்லது தன்னார்வ அமைப்புகளிடமோ உதவி பெற அணுகலாம்.

தனிநபராகவும் அப்பொருளை தயாரித்த நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். இதுதவிர, உணவு பாதுகாப்பு அலுவலரிடம் தரமற்ற பொருளின் மாதிரி, அதை வாங்கியதற்கான பில் ஆகியவற்றை கொடுத்து புகார் தெரிவிக்கலாம்.

விஷத்தன்மை உள்ள உணவுமாதிரிகள், விஷப்பூச்சிகள் விழுந்த குளிர்பானங்கள் போன்றவற்றை பரிசோதனை செய்ய விரும்பினால் ரூ.500 செலவில் பரிசோதித்துக் கொள்ளலாம். இதற்கென தமிழகம் முழுவதும் 550 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உள்ளனர்.

இவர்கள் பாதிக்கப்பட்ட நுகர்வோர் சார்பாக பொருளை விற்பனை செய்த கடை மற்றும் தரமற்ற பொருளை தயாரித்த நிறுவனம் ஆகியவற்றில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள். நுகர்வோர் எந்த பொருளை வாங்கும் முன் தரம் மற்றும் சுகாதாரமானதாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பாக்கெட்டின் மேல் உள்ள லேபிளில் கொள்ளளவு, உணவுபொருளில் என்னென்ன சத்துக்கள் மற்றும் அவற்றின் அளவு, கன்ஸ்யூமர் ஹெல்ப்லைன், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, பேட்ச் நம்பர் ஆகிய தகவல்கள் சரியாக, தெளிவாக உள்ளதா என கவனிக்க வேண்டும்.

வெளிநாட்டு தயாரிப்பு என்றால், இந்தியாவில் அதன் விநியோகஸ்தர், விற்பனையாளர் பெயர்களை உறுதி செய்வது நல்லது. பேட்ச் நம்பரை குறித்து வைத்தால், தரமற்ற பொருட்கள் யார்யாருக்கு விநியோகம் செய்யப்பட்டது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்’’ என்கிறார்.

- விஜயகுமார்