அடங்க மறு பாடகர் முகேஷ்



டைட்டில்ஸ் டாக்-136

வாழ்க்கையில் அடங்க மறுத்தால்தான் ஆட்டம் சூடு பிடிக்கும்.எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் செய்துங்கநல்லூர். அப்பா இசைக் கலைஞர். பேங்கோ, டிரம்ஸ் போன்ற இசைக் கருவிகளை வாசிப்பதில் கைதேர்ந்தவர். சின்ன வயதிலிருந்தே எனக்கு படிப்பைவிட இசை மீதுதான் அதிக நாட்டம். பள்ளியில் நடக்கும் பாடல் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பேன்.

அப்போது என்னுடைய ஆசிரியர் ‘உனக்கு படிப்பைவிட பாட்டுதான் நல்லா வருது. நீ இசைத் துறையில் கவனம் செலுத்தினால் பெரிய ஆளாய் வருவே’ என்று வாழ்த்தினார். நண்பர்கள், சில நலம்விரும்பிகள் ‘சினிமா வேண்டாம். அங்கு ஜெயித்தவர்களை விட தோற்றவர்கள் அதிகம்’ என்று யதார்த்தத்தை எடுத்துச் சொன்னார்கள். எனக்குள் பாடகன் ஆகணும் என்ற வெறி இருந்ததால் அந்த ஆலோசனைகளுக்கு அந்த வயதிலேயே அடங்க மறுத்தேன்.

என்னுடைய அப்பா மட்டும் என்னுடைய இசை ஆர்வத்துக்கு ஆதரவு கொடுத்தார். காரணம், அப்பா இசைக் கலைஞராக வரணும்னு நினைத்தபோது அவருடைய அப்பாவிடமிருந்து எந்தவித என்கரேஜ்மென்ட்டும் கிடைக்கவில்லையாம். அதனால் நான் இசைத்துறைக்கு வருகிறேன் என்று சொன்னதும் மறுக்காமல் என்னை என்கரேஜ் பண்ணியதோடு இசையை முறைப்படி கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தார்.

தினகரன் என்ற மாஸ்டரிடம் ஆர்மோனியம் கற்றுக்கொண்டேன். அவர் மூலம் மேடைகளில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. முதன் முறையாக எல்.ஆர்.ஈஸ்வரி அம்மாவுடன் சேர்ந்து பாடியதை மறக்க முடியாது. அந்த மேடையில் ‘பழம் நீயப்பா’ என்ற பாடலைப் பாடினேன். என்னுடைய பாடலைக் கேட்ட எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா, ‘பழைய பாடல்களைப் பாடுவது அவ்வளவு சுலபமில்லை. உனக்கு நல்ல குரல் வளம் இருக்கு. இறைவன் உனக்கு துணை புரிவான்’ என்று வாழ்த்தினார்.

தொடர்ந்து மேடைக் கச்சேரி களில் பிஸியாக இருந்தபோது சென்னையில் தனியார் டி.வி. நடத்திய  பாடல் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நான் தேர்வு செய்து பாடிய பாடல்கள் அனைத்தும் உச்சஸ்தாயியில் இருக்கும் பாடல்கள்.  ‘மருதமலை மாமுனியே’, ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’, ‘பாட்டும் நானே’, ‘இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’ போன்ற பாடல்களைத்தான் போட்டியில் பாடினேன்.

 பாடல் பட்டியலைக் கேட்டதும் அப்போதும் சிலர் ‘உன்னால் பாடி ஜெயிக்க முடியாது. இது மிகவும் கடினமான பாடல்கள். இந்தப் பாடல்களைப் பாடினால் தோற்பது நிச்சயம்’ என்றார்கள். அங்கேயும் நான் மறுத்தேன். அதுக்கு காரணம் என் மீதான நம்பிக்கை. கடுமையான முயற்சி எடுத்து நம்பிக்கையுடன் பாடினேன். அந்தப் போட்டியில் எனக்கு விருதும் கிடைத்தது. அப்போது அப்துல் ஹமீது, எம்.எஸ்.விஸ்வநாதன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்று மிகப்பெரிய ஆளுமைகளின் பாராட்டு கிடைத்தது.

இந்தப் பாட்டெல்லாம் பாடும்போது எனக்கு சங்கீதம் தெரியாது. ‘ஏதோ ஒரு பாட்டு மாதிரி ஈஸி என்று நினைக்காதீர்’ என்று எல்லோரும் பயம் காட்டினார்கள். உடனே என் குருநாதரிடம் போனேன். ‘‘‘பாட்டும் நானே’ பாடலில் ஸ்வரங்கள் வருகிறது. எல்லோரும் பயம் காட்டுகிறார்கள்’’ என்றேன். அவர், ‘‘பயப்படாதே. எல்லா பாடலிலும் ஸ்வரம் இருக்கும். ‘பாட்டும் நானே’ என்பதும் ஸ்வரம்தான். நீ எளிதாகப் பாட ஒரு வழியைச் சொல்கிறேன்’' என்றார். அதன்படி ‘சரி...க.. ரி...க...’ என்று வரும் இடங்களில் ‘தன்னன்ன... தனனன... என்று ஸ்வரங்களை வரிகளாக நினைத்து பாடு’ என்றார்.  

பாடல் போட்டியில் ‘பாட்டும் நானே’ என்ற பாடலை அடம் பிடித்துப் பாடினேன். அப்படி நான் அடங்கமறுக்காமல் இருந்திருந்தால் என்னை பின்னணிப் பாடகனாக பார்த்திருக்க வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும். ஏன்னா, போட்டியில் நான் பாடிய அந்தப் பாடல்தான் எனக்கு சினிமா வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தது.

அந்த வாய்ப்பு அப்துல் ஹமீது சார் மூலம் கிடைத்தது. அவர்தான் ஏ.ஆர்.ரஹ்மான் சாரிடம் அழைத்துச் சென்றார். ‘கண்களால் கைது செய்’ படத்தில் ‘தீக்குருவியாய்’ என்ற பாடல். அந்தப் பாடல்  குறில், நெடில் கலந்த பாடல். தமிழ் உச்சரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். ஏ.ஆர்.ரஹ்மான் முதல் நாள் அந்தப் பாடல் ரிக்கார்டிங் பண்ணுவதை பார்க்கச் சொன்னார்.

ஹரிணி மேடம் அந்தப் பாடலைப் பாடினார். மறுநாள் நான் பாடவேண்டும். எனக்கு கிடைத்திருக்கும் பெரிய வாய்ப்பு என்பதால் கடும் முயற்சி எடுத்து அந்தப் பாடலுக்காக ரிகர்சல் பண்ணினேன். ரிக்கார்டிங்கில் அரை மணி நேரத்தில் பாடி முடித்தேன். அப்போது, ஏஆர்.ரஹ்மான் சார் ‘ பாட முடியாது  என்று நினைத்தேன். ஆனால் சிறப்பாகப் பாடினீர்கள்’ என்று வாழ்த்தினார்.

பின்னணிப் பாடகராக ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்கள் எல்லாமே சவால் நிறைந்தது. நான் அடங்கிப் போயிருந்தால் இன்றளவும் என்னால் பாடகனாக உலா வந்திருக்க முடியாது. கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் பாடியுள்ளேன். ரஜினி சார் தவிர எல்லாருக்கும் பாடியிருக்கிறேன். சமீபத்தில் வெளிவந்த ‘அடங்கமறு’ படத்தில் ‘ஆங்கு வாங்கு’ என்ற பாடலை சாம்.சி.எஸ்.இசையில் பாடினேன். இசையமைப்பாளர்களில் அனிருத், ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனிக்கு மட்டுமே பாடவில்லை.  

‘சிலம்பாட்டம்’ படத்தில் ‘வேர் இஸ் தி பார்ட்டி’ பாடல் எனக்கு பெரிய வரவேற்பைக் கொடுத்தது. அந்தப் பாடல் சென்னை வட்டார மொழிப் பாடல். அந்தப் பாடலுக்கான அழைப்பு வந்தபோது யுவன், சிம்பு சொன்னது... “நீங்க பழைய பாடல் பாடுவீங்கனு தெரியும். ரஹ்மான் இசையில் நீங்கள் பாடிய பாடல் தூய தமிழ்.

இது வேற ஸ்டைல்” என்று ‘இன்னம்மா பண்ணலாம், டிஸ்கோவுக்கு போகலாம்’  என்று சிம்பு  பாடிக் காட்டினார். நானும் அதே மாதிரி பாடினேன். அவருக்கு ஆச்சர்யம். ‘எப்படி உங்களால் சென்னை வட்டார மொழியில் பாட முடிகிறது’ என்று கேட்டார். “நான் லைட் மியூசிக் ட்ரூப்ல இருந்ததால் எல்லோருடைய குரலிலும் எல்லா மாடுலேஷனிலும் பாடுவேன். கமல் சாரின் ‘காசு மேல காசு வந்து’, ‘ஆழ்வார்பேட்டை ஆளுடா’ பாடல்களும் அதே ஸ்டைலில் இருக்கும்” என்றேன்.

என் வாழ்க்கையில் முடியாது என்ற சொல்லுக்கு இடமிருக்காது. எந்தக் கட்டத்திலும் என்னுடைய முயற்சியை விடமாட்டேன். வெற்றியோ, தோல்வியோ முயற்சி செய்து பார்ப்பேன்.டி.எம்.எஸ்., எஸ்.பி.பி., மனோ., சங்கர் மகாதேவன், ஹரிஹரன் போன்றவர்களிடமிருந்துதான் நான் பல குரல்களில் எப்படி பாடுவது என்பதைக் கற்றுக் கொண்டேன். மற்றபடி பெரியளவில் சாதகம் பண்ணியதில்லை. பழைய பாடகர்களின் குரலோடு சேர்ந்து பாடுவேன்.  

பாட வேண்டும் என்ற ஆசையுள்ளவர்களுக்கு நான் சொல்வது... நான் ஸ்கூலில் பாட ஆரம்பித்தேன். அன்று டெக்னாலஜி கிடையாது. இப்போது திறமையை வெளிப்படுத்த ‘ஸ்மூல் ஆப்’ இருக்கிறது. திறமைகளை அதில் வெளிப்படுத்தலாம். அதன் மூலம் பிறரின் கவனத்தை ஈர்க்கலாம். இறைவன் படைப்பில் எல்லோரும் திறமைசாலிகள். எல்லாருக்குள்ளும்  இசைத் திறன் உண்டு. வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் பாடகர்கள். வித்தியாசம் அவ்வளவே!

ஸ்ருதி தெரியாமல்தான் நான் பாட ஆரம்பித்தேன். சினிமாவுக்கு வந்தபிறகுதான் ஸ்ருதி தெரிந்து பாட ஆரம்பித்தேன். பாடகர்களே... உங்கள் திறமையைப் பூட்டி வைக்காதீர்கள். எதற்கும் அஞ்சாதீர்கள்.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)