நிச்சயமா ஜெயிப்பேன் சார்!துருவ் விக்ரம் நம்பிக்கை



‘ஆதித்ய வர்மா’ படத்தின் மூலமாகத் தமிழுக்கு அறிமுகமாகிறார் விக்ரமின் மகன் துருவ். தெலுங்கில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த ‘ஆதித்ய வர்மா’. ‘‘அப்பாவுக்கு ஒரு மாமங்கத்துக்குப் பிறகுதான் எல்லாமே நடந்தது.
என் வாழ்க்கையில் அப்பாவின் அன்பும் ஆதரவும் இருந்ததால் என் ஹீரோ கனவு எளிதில் நடந்தது’’ என்கிறார் துருவ் விக்ரம்.“ஆக ஹீரோ ஆயிட்டீங்க...”“அதுதான் சார் என் கனவு. அப்பாவைப்போல் நடிகனாகவேண்டும் என்பதுதான் சின்ன வயதிலிருந்தே லட்சியம். அது அப்பா

மூலமாகவே நிறைவேறியது. அவர்தான் இந்த பிராஜக்ட்டை கொண்டுவந்தார். ‘உன்னுடைய டப்மாஷ் வீடியோக்களைப் பார்த்துவிட்டு இ 4  என்டர்டெயின்மென்ட் முகேஷ் ஆர்.மேத்தா அர்ஜுன் ரெட்டி தெலுங்குப் படத்தோட தமிழ் ரீமேக்ல நடிக்க கேட்கிறார். ஓக்கேன்னு சொல்லிடட்டா’ன்னு அப்பா கேட்டார். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதால் உடனே சம்மதித்தேன்.”

“அப்பா ஏதாவது டிப்ஸ் கொடுத்தாரா?”

“கொடுக்காம இருப்பாரா என்ன? அப்பா ஒரு வார்த்தை சொன்னார்... ‘ரீமேக் படம் பண்ணும்போது ஒரிஜினல் நடிகருடன் உன்னுடைய நடிப்பையும் ஒப்பிட்டு பேசுவாங்க. நீ வித்தியாசமாக எதாவது பண்ணினால்தான் பேர் வாங்கிக் கொடுக்கும்’ என்றார். இந்தப் படத்தில் என்னுடைய பாடிலேங்வேஜ் ஒரே மாதிரியாக இருந்தாலும் சீன் பை சீன் வித்தி யாசமாக இருக்கும். அப்பா மட்டுமல்ல, ஒட்டுமொத்தமா எனது குடும்பத்தினரின் ஆதரவால்தான் நான் நடிக்க முடிந்தது. அவர்களின் ஆதரவு இல்லாவிட்டால் நிச்சயம் என்னை நடிகனாகப் பார்த்திருக்க முடியாது.”
“படத்தோட ஹீரோயின் பற்றி எதுவும் பேசமாட்டேங்கறீங்க. வெட்கமா?”

“வெட்கப்பட என்ன சார் இருக்கு? நான் ரொம்ப பிராக்டிக்கல். ஹீரோயின் என்னை மாதிரி இந்தப் படத்தில் நடிக்கிறார். அவ்வளவுதான். ஆக்சுலவா ரெண்டு ஹீரோயின்கள். பனிதா சந்து, ப்ரியா ஆனந்த். பனிதா சந்து என்னைப் போன்று சினிமா மீது ஆர்வமுள்ளவர்.

அவருக்கு தமிழ் தகராறு என்றாலும் அதை சரிக்கட்டும்விதமாக முறையான பயிற்சி எடுத்துக்கொண்டபிறகுதான் கேமரா முன்பு நிற்பார்.  நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு ஒரு ஃப்ரெஷ் ஃபேஸாக இருப்பார். ப்ரியா ஆனந்த் ஏற்கனவே தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய வெரி குட் பெர்ஃபாமர். அவரைப் பத்தி புதுசா நான் என்ன சொல்லி அறிமுகப்படுத்துறது!”

“தெலுங்கில் பெரிய ஹிட் அடிச்ச படம். விஜய் தேவரகொண்டா ரொம்ப சிரமப்பட்டு நடிச்சாராம். உங்களுக்கு எப்படி?”

“உடம்புதான் எனக்கு மைனஸ் பாயிண்டா இருந்தது. கடுமையான டயட் கடைப்பிடித்து உடம்பைக் குறைத்தேன். வாய்க்கு ருசியாக சாப்பிடமுடியவில்லை என்று சில சமயம் புலம்புவேன்.

அப்போது அப்பா ‘இதோட பலன் உடனே தெரியாது. இந்த மாதிரி தியாகங்கள் பண்ணினால்தான் பெரிய வெற்றி அடையமுடியும்’ என்றார். நிச்சயமா ஜெயிப்பேன் சார். நம்பிக்கை இருக்கு.”“படத்தோட டெக்னிக்கல் டீம் பற்றி சொல்லுங்க...”

“இயக்குநர் கிரிசாயாவுக்கு இதுதான் முதல் படம். ஆனால் தேர்ந்த இயக்குநர் போல் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியிருக்கிறார். முதல் டேக் சிறப்பாக வந்தாலும் அடிஷனலாக சில டேக் எடுப்பார். படப்பிடிப்புத் தளத்தில் அவர் சும்மா இருந்ததை நான் பார்த்ததே இல்லை. கடுமையான உழைப்பாளி. ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இந்தப் படத்தின் ஆகச் சிறந்த பலம்.

ரதன் இசையமைத்துள்ளார். அவருடைய பெயர் வித்தியாசமாக இருப்பதால் அவர் தெலுங்கு மொழிக்காரர் என்று பலர் நினைப்பதுண்டு. ஆனால், அவர் பச்சைத் தமிழன். ‘மெலடி கிங்’ என்று சொல்லும் அளவுக்கு மனதை வருடிச் செல்லும் பாடல்களுக்காக பேசப்படுவார். இந்தப் படத்தில் இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றிய குழுவினர்க்கு என் நன்றி எப்போதும் இருக்கும்.”“அப்பா நடித்த படங்களில் உங்களுக்குப் பிடித்த படம் எது?”

“பொதுவாக அப்பா நடிக்கும் படங்களில் விக்ரம் என்ற பெஸ்ட் ஆக்டர் தெரிவார். ஆனால் ‘தெய்வமகன்’ படத்தில் அப்பா ஏற்று நடித்த ‘கிருஷ்ணா’ கேரக்டர்தான் என்னை மிகவும் பாதித்தது. தலைமுடியைக் கோதுவது, நடை, உடை என்று அந்தப் படத்தில் அப்பாவின் நடிப்பு வேற லெவலில் இருந்தது. அப்புறம் பாலா அங்கிள் டைரக்ட் பண்ணின ‘சேது’வும் ஆல் டைம் ஃபேவரைட்.”“படப்பிடிப்பு அனுபவங்களை அப்பாவிடம் ஷேர் பண்ணுவீர்களா?”

“அப்பா ‘ஆதித்ய வர்மா’ படப்பிடிப்புத் தளத்துக்கு அவ்வளவாக வந்ததில்லை. அப்படியே வந்தாலும் நடிகர் விக்ரமாக வராமல் பாசமுள்ள தந்தையாக மட்டுமே வருவார். படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போனதும் அன்றைக்கு நடித்த காட்சியை அப்பாவிடம் அட்சரம் பிசகாமல் பண்ணிக்காட்டுவேன்.

நல்லா இருந்தால் பாராட்டுவார். அவருக்கு பிடிக்கலைன்னா எப்படிப் பண்ணியிருக்கலாம் என்று சஜஷன் கொடுப்பார். அந்தவகையில் அப்பாவிடம் ஷேர் பண்ணினபிறகுதான் எனக்கு தனிப்பட்ட விதத்தில் திருப்தியாக இருக்கும்.

நேர நிர்வாகம், உடம்பை ஃபிட்டாக வைத்திருப்பது என்று நிறைய சொல்லியிருக்கிறார். மிக முக்கியமாக, ‘வெற்றி  வந்ததும் ஆடாதே, தோல்வி வந்தாலும் துவண்டுபோயிடாதே. வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாகப் பார்’ என்றார். என்னை நடிகனாக்கியதில் அவரது அர்ப்பணிப்பு 100 சதவீதம் இருக்கிறது. என் அப்பா ஒரு நல்ல நடிகர் என்பதைவிட அக்கறையும் அன்பும் அதிகம் உள்ள தந்தை என்பது எனக்குத் தெரியும்.”

- சுரேஷ்ராஜா