அடிச்சி ஆடுகிறார் தன்ஷிகா!
சிலம்பம், பைக் ரைடிங் என்று எப்போதும் அதிரடி காட்டும் தன்ஷிகா, இப்போது நடித்து வரும் ‘யோகி டா’வில் ஃபைட், சேஸிங் என அதிரடி ஆக்ஷன் குயீனாக அசத்துகிறார்.“கடைசியிலே உங்களையும் ஆக்ஷன் ஹீரோயின் ஆக்கிட்டாங்களே?”
“ஆமாங்க. ‘யோகி டா’வுல நல்ல கதை அமைஞ்சது. ஒரு பெண்ணால், இந்த சமூகத்தின் சூழல்களை எப்படியெல்லாம் எதிர்கொள்ள முடியுது என்பதுதான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. கௌதம் கிருஷ்ணா இயக்குறார்.
என்னோட அங்கிள் அருணகிரி, அவரது நண்பர் ராஜ்குமார் ரெண்டு பேரும் தயாரிக்கறாங்க. ரொம்பவும் தைரியமான பொண்ணா வர்றேன். ஷூட் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே ஃபிசிக்கல் டிரெயினிங் நிறைய பண்ணினேன். கணேஷ் மாஸ்டர் ஸ்டண்ட்ஸ் அமைக்கறார். இதுவரைக்கும் அஞ்சு ஃபைட்ஸ் எடுத்து முடிச்சிருக்கோம். எண்பது சதவிகிதம் படப்பிடிப்பு முடிச்சிட்டோம். இன்னும் ஒரு ஃபைட் பேலன்ஸ் இருக்குனு சொல்லியிருக்காங்க. ஒரு பெண் கதாபாத்திரத்தின் மீது நம்பிக்கை வச்சு, அத்தனை ஆண்கள் படத்துல ஒர்க் பண்றதை பார்க்கும் போது பிரமிப்பா இருக்கு. அவங்களோட நம்பிக்கையை நான் குறைச்சிடக்கூடாதுனு ரொம்பவும் உழைக்க ஆரம்பிச்சிருக்கேன். இதையடுத்து சுந்தர்.சி சார் நடிப்பில் ‘இருட்டு’னு ஒரு படமும் நடிச்சு முடிச்சிருக்கேன்.”
“உங்க வாய்ஸ் ரொம்ப ‘யூனிக்’கா இருக்கே..?”
“தேங்க்ஸ். இதை நிறைய பேர் சொல்லியிருக்காங்க. என் வாய்ஸ் மத்தவங்களுக்கு பிடிக்குதோ இல்லையோ.. என் குரல்ல எப்பவும் பேசத் தயங்கினதில்ல. ‘உங்க வாய்ஸ் நல்லா இருக்கு. நீங்க பாடலாமே’னு கூட கேட்டிருக்காங்க. ஒரு படத்துல பாடுறதுக்கான வாய்ப்பும் வந்தது. ஆனா, அது மிஸ் ஆகிடுச்சு. எதிர்காலத்தில் சாத்தியமாகலாம்.”
“உங்க படங்கள் சரியா போகாத போது உங்க மனநிலை எப்படியிருக்கும்?”
“முதல்படம் ‘பேராண்மை’யிலிருந்து இப்ப வரை சக்சஸ், ஃபெயிலியர் ரெண்டையுமே ஒரே மாதிரிதான் பாக்குறேன். எதையுமே மைண்ட்ல ஏத்திக்க மாட்டேன். சினிமாவுல ஒவ்வொரு விஷயமும் நமக்கு லேர்னிங் பிராசஸ்தான். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு அனுபவம். அதுதான் பாடங்கள். அதுலதான் கத்துக்க முடியும். எல்லாத்தையுமே என் வளர்ச்சிக்கானதா பாக்குறேன்.”
“கமர்ஷியல் படங்கள் பண்றது ஈஸியான வேலைதானே..?”
“இல்லீங்க. யதார்த்த படங்கள் பண்றதை விட, கமர்ஷியல் பண்ணும்போது அதைவிட டபுள் மடங்கு ஒர்க் பண்ண வேண்டியிருக்கு. ஆரம்பத்துல நான் கூட அப்படித்தான் நினைச்சிருந்தேன். கமர்ஷியல்னா கன்டன்ட்டுக்கு மெனக்கெட வேண்டாம், என்டர்டெயின்மென்ட் மட்டும் பண்ணினா போதுமானதுனு நினைச்சிருந்தேன். மரத்தை சுத்தி டூயட் பாடுறது தானேனு எளிதா சொல்லிட முடியும்.
ஆனா, அப்படிப் படங்கள் பண்ணும்போதுதான், அது எவ்ளோ சிரமமானதுனு புரிஞ்சுக்கிட்டேன். கமர்ஷியல்னாலும் கூட அதில் கன்டன்ட் அவசியம். வெரைட்டி இருக்கணும். ஒவ்வொரு ஃபிரேமிலும் அழகா தெரிஞ்சாகணும்னு.. இப்படி ரொம்பவே ஒர்க் பண்ண வேண்டியிருக்கு. ரியாலிட்டி ஒரு பக்கம் கஷ்டம்னா.. கமர்ஷியலும் கஷ்டமானதுதான்.”
- மை.பாரதிராஜா
|