ஆட்டுக்குட்டியை ஆட்டை போட்டவர் இவர்தான்!பொதுவாக தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடிப்பதற்கு தமிழ் நடிகர்களுக்கு வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக நிலவிவருகிறது. இந்த நிலையில் தமிழ் நடிகரான மூணார் ரமேஷ்  ‘‘அரும்பாடுபட்டு சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற பெயர் வாங்குவதற்காக தொடர்ந்து முயற்சித்து வருகிறேன்’’ என்கிறார்.

இவர் சமீபத்தில் வெளிவந்த ‘அசுரன்’ படத்தில் முதல் காட்சியில் ஆட்டுக்குட்டியை ஆட்டையைப் போடும் போலீஸாக நடித்தவர். ‘புதுப்பேட்டை’ படத்தில் இவர் பேசிய ‘கடவுள் இருக்கான் குமாரு’ என்ற டயலாக் மீம்ஸ் வட்டாரத்தில் எப்போதும் டிரெண்டில்  இருக்கும் டயலாக்.

  ‘புதுப்பேட்டை’, ‘வடசென்னை’ உட்பட ஏராளமான படங்களில் நடித்து செஞ்சுரி அடித்துள்ள மூணார் ரமேஷிடம் பேசினோம். ‘‘உங்களுடைய சினிமா பயணம் எப்படி ஆரம்பித்தது?’’

‘‘ எனக்கு சொந்த ஊர் மூணார். சினிமாவுக்கு வரணும், நடிகனாகணும் என்று நான் நினைத்ததில்லை. எங்க ஊர்க்கார் ஒருவர் ‘தீண்ட தீண்ட’ என்ற படத்துக்காக பைனான்ஸ் பண்ணியிருந்தார். அதில் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை வந்தது. நண்பரின் பணத்தை வசூல் பண்ணித் தருவதற்காக சென்னை வந்தேன்.

அப்போது பாலுமகேந்திரா சார் டீமின் அறிமுகம் கிடைத்தது. பாலுமகேந்திரா சார் இயக்கிய ‘அது ஒரு கனாக்காலம்’தான் நான் நடித்த முதல் படம். குறுகிய காலத்தில் 100 படங்களைத் தாண்டுவேன் என்பது நானே எதிர்பாராதது.’’

‘‘லேட்டஸ்ட்டா நடிச்ச ‘அசுரன்’ அனுபவம் எப்படி இருந்தது?’’

‘‘இயக்குநர் வெற்றிமாறன் சார் எனக்கு நீண்ட நாள் பழக்கம். அவருடைய இயக்கத்தில் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘விசாரணை’, ‘வடசென்னை’, ‘அசுரன்’ உட்பட  ஐந்து படங்களில் நடித்துவிட்டேன். கிட்டத்தட்ட வெற்றி சாரின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் என்றுகூட சொல்லலாம். சார் இயக்கத்தில் நான் நடித்த இரண்டு படங்களில்தான் எனக்கான கேரக்டர் இருந்தது. மீதிப் படங்களில் வம்பு பண்ணித்தான் வாய்ப்பு வாங்கினேன்.

எனக்கும் வெற்றிமாறனுக்குமான பழக்கம் ‘அது ஒரு கனாக்காலம்’ படத்திலிருந்து தொடர்கிறது. அந்தப் படத்தில் வெற்றி சார் அசோசியேட் இயக்குநர். அப்போது அவர் ஒரு வார்த்தை சொன்னார். ‘கேரக்டர் குறைவாக இருக்கிறது என்று நினைக்காதீங்க. நான் படம் பண்ணும்போது உங்களை கண்டிப்பாக அழைப்பேன்’ என்று சொல்லி என்னுடைய போன் நம்பர் வாங்கினார். அதன்படி ‘பொல்லாதவன்’ படத்திலிருந்து தொடர்ச்சியாக எனக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்.

வெற்றி சார் படங்களில் தொடர்ந்து நடிக்கக் காரணம் அவருடைய கதைக்களம்.  என்னைப் போன்ற முரட்டுத் தோற்றம் உள்ளவர்கள் அவருடைய கதைக்கு இயல்பாகப் பொருந்துகிறார்கள். அடுத்து எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. வெற்றி சார் படத்தில் நடிக்க இன்னொரு காரணம் அவர் படத்தில் நடிப்பதால் ஒர்க் ஷாப் மாதிரி நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளமுடியும். அவர் நிறையப் படிப்பார்.

அதற்கு சாட்சி அவர் படங்கள். ‘அசுரன்’ படத்தைப் பொறுத்தவரை ‘வெக்கை’ நாவலைப் படிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஸ்பாட்ல வெற்றி சார் என்ன சொன்னாரோ அதை மட்டும் செய்தேன். அதனால் படப்பிடிப்புக்கு போகும்போது ஒரு மாணவன் போல் கற்றல் மனப்பான்மையுடன் போவேன். எனக்குள் ஒரு ஆதங்கம் உண்டு. தமிழ் சினிமா அடுத்த லெவலுக்கு போகணும் என்பதுதான். அப்படி என்னுடைய சிந்தனைக்கு ஏற்ற மாதிரி வெற்றி சாரின் படங்கள் இருக்கும்.’’

‘‘தனுஷ்?’’

‘‘தனுஷ் சாருடன் ‘புதுப்பேட்டை’ படத்திலிருந்து பழக்கம் உண்டு. அவர் பெரிய நடிகர். ஆனால் தன்னுடன் நடிக்கும் புதுமுக நடிகர்களின் திறமையை வெளியே கொண்டுவருவதற்காக நிறைய உதவி செய்வார். ‘அசுரன்’ படத்தில் பழகும் வாய்ப்பு குறைவாக இருந்தது. ஏன்னா, சிவசாமி கேரக்டருக்காக இறுக்கமாகவே இருந்தார். மற்றபடி பழகும் விதத்தில் எந்தவித வித்தியாசமும் இல்லாமல் பழகுவார்.’’

‘‘இப்போ என்ன படம் பண்றீங்க?’’

‘‘பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, சசிகுமாரின் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, விதார்த்துடன் ஒரு படம் இருக்கிறது. மலையாளத்தில் இரண்டு படங்கள் பண்றேன். தவிர வெப்சீரிஸும் பண்றேன்.’’

‘‘தொடர்ந்து போலீஸ் கேரக்டரில் நடிப்பதால் அலுப்பு தட்டவில்லையா?’’

‘‘மலையாளத்திலும் போலீஸ் கேரக்டருக்குத்தான் அழைக்கிறார்கள். ஆனால் அதை நான் நெகடிவ்வாகப் பார்க்கவில்லை. அதை எனக்கான அங்கீகாரமாகப் பார்க்கிறேன். ஆக்‌ஷன் கேரக்டர்களைத் தாண்டி எனக்கு காமெடி, சென்டிமென்ட்  பண்ண வரும். அந்த மாதிரி படங்களிலும் நடித்துள்ளேன். வில்லனாக நடித்துதான் பெயர் வாங்க வேண்டும் என்று இல்லை.

‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தில் காமெடி ரோல் பண்ணினேன். குணச்சித்திர நடிகனாக வரணும் என்பதுதான் என் ஆசை. மற்றபடி போலீஸ் கேரக்டர் வரும்போது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஏன்னா, இங்கு வாய்ப்பு இல்லாமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் எனக்கு வாய்ப்பு வருகிறது என்றால் அதுவே பெரிய விஷயம்.’’

‘‘உங்களைப் போன்றவர்களுக்கு வருமானம் திருப்தியளிக்கும் விதத்தில் இருக்குமா?’’

‘‘சர்வைவல்  பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதை நான் பெரிது படுத்துவதில்லை. ஆனால் பணம் தரும் சந்தோஷத்தை சின்ன வயதிலேயே அனுபவித்துள்ளேன். என்னுடைய 23 வயதிலேயே ஃபாரீன் வேலைக்கு போய்விட்டேன். அதனால்  பண விஷயத்தில் எனக்கு எந்தக் குறையும் இருந்ததில்லை. நான் ஒரு கார் பைத்தியம்.

ஆடம்பரமாக இல்லையென்றாலும் ஓட்டை வண்டியாவது இருக்கணும். பாட்டிலில் பெட்ரோல் ஊற்றியெல்லாம் கார் ஓட்டியிருக்கிறேன். அந்தவகையில் என்னுடைய 18ஆம் வயதிலிருந்து கார் மெயின்டெயின் பண்றேன். திருமணத்துக்குப் பிறகுதான் என் வாழ்க்கையில் திருப்புமுனை வந்தது. என் மனைவி ஐ.டி. துறையில் வேலை செய்கிறார். அவரும் குடும்பப் பொறுப்புகளை ஷேர் பண்ணுவதால் அடிப்படை பிரச்சனைகள் இல்லை.

சொந்த வீட்டில் வசிக்கிறோம். நான் ஏற்று நடிக்கும் ரோலுக்கு என்று ஒரு குறிப்பிட்ட சம்பளம்தான் நிர்ணயம் செய்திருப்பார்கள். அது குறைவாகவும் இருக்காது, அதிகமாகவும் இருக்காது. சில படங்களில் நம்முடைய உழைப்புக்கு நியாயமான சம்பளம் கிடைக்கும். அப்படி ‘அசுரன்’ படத்தில் தாணு சார் கலைஞர்கள் மகிழும்படியான சம்பளத்தைக் கொடுத்தார்.

நடிப்பு தாண்டி டப்பிங் யூனியனிலும் உறுப்பினராக இருக்கிறேன்.  சாயாஜி ஷிண்டேவுக்கு டப்பிங் பேசியிருக்கிறேன்.  திருநெல்வேலி வட்டார மொழி பேசுவதாக இருந்தால் அழைப்பு வரும். எனக்கு மலையாளம் தெரியும் என்பதால் அங்கும் டப்பிங் பேசுகிறேன். டப்பிங் பேசி பெரியளவில் சம்பாதிக்கவில்லை என்றாலும் மெம்பர்ஷிப்புக்காக கட்டிய தொகையை சம்பாதித்துவிட்டேன்.’’
‘‘உங்களை வைத்து அதிகம் மீம்ஸ் வருகிறதே?’’

‘‘ஆமாம் சார். ‘புதுப்பேட்டை’ படத்தில் ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘ரொம்ப அவமானமா போச்சு குமாரு’ என்று டயலாக் பேசியிருப்பேன். நான் பேசிய டயலாக்கை வைத்தும் என்னுடைய போட்டோவை வைத்தும் மீம்ஸ் வராத நாளே இல்லை.’’இவர் பேசிய டயலாக்கே, இவர் வாழ்க்கை மாற்றத்துக்கும் பொருந்திப்போனதுதான் ஆச்சர்யம்!கடவுள் இருக்கான் குமாரு!

- சுரேஷ்ராஜா