இன்னிசை மழை பொழிந்த பெண் இயக்குநர்!



மின்னுவதெல்லாம் பொன்தான்-51

நட்பு காதலாவதும், அந்த காதல் மோதலாவதும், பின்பு சமாதானமாவதுமான யூத்களின் மனங்களை பல்ஸ் பிடித்துப் பார்க்கிற மாதிரியான படங்கள் இப்போது அதிகமாக வருகிறது. ஆனால் 28 வருடங்களுக்கே முன்பே அதை துணிச்சலாகவும்,  அழகாகவும்  சொன்ன படம் ‘நண்பர்கள்’.
இந்தப் படத்தில் அறிமுகமான  மம்தா குல்கர்னி பிற்காலத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகை ஆனார். நீரஜ் என்ற புதுமுகம் ஹீரோ.

விவேக், நாகேஷ், மனோரமா, சங்கீதா உள்பட பலர் நடித்திருந்தார்கள். படத்துக்கு சங்கீதராஜன் இசை அமைத்திருந்தார். பாலிவுட் இசை அமைப்பாளர் பாபுல் போஸ் பாடல்களுக்கு இசை  அமைத்திருந்தார்.

நண்பர்களுக்கு இடையே வரும் ஊடலும், கூடலும், காதலும்தான் கதை. இரண்டரை மணி நேர யூத் படமாக உருவாகி இருந்தது. படம் வெளியான மறு ஆண்டே இதே படம் பாலிவுட்டில் ‘மேரா தில் தேரா லியே’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. அதில் கோபி பல்லாவும், அருணா இரானியும் நடித்திருந்தனர்.

1992ல் வெளிவந்த படம்  ‘இன்னிசை மழை’. கே.பாலச்சந்தர் இயக்கிய ‘நினைத்தாலே  இனிக்கும்’ படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க இன்னிசை சித்திரமாக தயாரான படம். இளையராஜா இசை அமைத்திருந்தார். படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள். ‘நண்பர்கள்’ படத்தில்  நடித்தவர்களே இதிலும் நடித்திருந்தார்கள். ஹீரோயினாக மட்டும் மம்தா குல்கர்னிக்கு பதிலாக பர்வின் நடித்தார்.

 ஹீரோ நீரஜ், ஹீரோயின் பர்வீன், விவேக் உள்ளிட்ட நண்பர்கள் ஒரு இசைக் குழுவை நடத்துகிறார்கள்.  பர்வீனை விவேக் காதலிப்பார். பர்வீன் நீரஜை காதலிப்பார். ஆனால் நீரஜ், பர்வீன் காதலை சில காரணங்களுக்காக ஏற்க மறுத்து விடுவார். ஒருவழியாக காதலை ஏற்று கல்யாணம் பண்ணும்போது பர்வீனின் தந்தை திருமணத்தை எதிர்ப்பார்.

முடியாத பட்சத்தில் என் மகள் திருமண வயதை எட்டுவதற்கு இன்னும் 15 நாள் இருக்கிறது என்று பர்த் சர்ட்டிஃபிக்கேட்டைக் காட்டி, மகளை அழைத்துச் சென்று விடுவார். பிறகு எப்படி திருமணம் நடக்கிறது என்பது கதை. குதூகலம், காதல், சோகம், நட்பு அனைத்தும் பாடல்களிலேயே சொல்லப்படும்.

இந்த இரண்டு படங்களிலும் படத்தின் ஹீரோவின் பெயர் விஜய். இரண்டு படத்தையும் தயாரித்தவர் தளபதி விஜய். இயக்கியவர் அவரது அம்மா ஷோபா சந்திரசேகர்.பெண் இயக்குநர் அரிதாகி இருந்த நேரத்தில் ஷோபா சந்திரசேகர், இரண்டு படங்களை இயக்கி நமபிக்கைக்குரிய இயக்குநராக இருந்தார்.

அதன் பிறகு அவர் ஏன் படம் இயக்கவில்லை என்று தெரியவில்லை. அவர் எழுதிய பல கதைகளை படமாக எடுத்தார் அவரது கணவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அவரது ‘நண்பர்கள்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ததும் அவர்தான்.

“அடிப்படையில் கர்நாடக இசைக் கலைஞரான ஷோபா சந்திரசேகர், அதன் பக்கம் தன் கவனத்தை திருப்பிவிட்டார். திரைப்படங்களிலும் கச்சேரிகளிலும் பாடுவது, வீணை இசைப்பது என்று தனது வாழ்க்கையை இசையின் பக்கம் முழுக்கவே திருப்பி விட்டார்.

ஒருவேளை அவர் சினிமாவில் தொடர்ந்திருந்தால்?நிறைய அனுபவங்களுடன் கூடிய ஒரு குறிப்பிடத்தக்க பெண் இயக்குநராக வளர்ந்திருப்பார். ஏன், மகனை வைத்துக் கூட மாஸ் படம் இயக்கி இருக்கலாம்.

(மின்னும்)

●பைம்பொழில் மீரான்