பொன்விழா கண்ட பாடலாசிரியர்!



சினிமாவில் பல துறைகளில் ஒருவர் வெற்றி பெற்றாலும், அவர்களின் மனதுக்குப் பிடித்த துறைகளில் மட்டுமே கடைசி வரை பயணிப்பார்கள். அந்த வகையில், திரைப்படத் தயாரிப்பு, இயக்கம் உள்ளிட்ட பல துறைகளில் பணியாற்றிய பாடலாசிரியர் இதயஜோதி, பாடல்கள் எழுதுவதை மட்டுமே தனது உயிராக நினைத்து இன்னமும் சினிமாவில் வெற்றிகரமான பாடலாசிரியராக பயணித்துக் கொண்டிருக்கிறார்.

1968 ஆம் ஆண்டு தனது முதல் பாட்டை எழுதிய இதயஜோதி, தொடர்ந்து பல வெற்றிப் பாடல்களை எழுதினார். இவரது பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுவர்ணலதா, சுசீலா, ஷைலஜா என பல முன்னணி பாடகர்கள் பாடியுள்ளார்கள்.

இப்படி தொடர்ந்து வெற்றி கரமான பாடலாசிரியராகப் பயணித்த இவருக்கு சினிமா தயாரிப்பதற்கும், இயக்குவதற்கும் வாய்ப்பு கிடைக்க, அதிலும் தனது வெற்றியைப் பதித்தவர் பல படங்களை இயக்கியும், தயாரித்தும் வந்ததால், பாடல் எழுதுவதற்கு இடைவெளி விட்டுள்ளார்.

இந்த நிலையில், இவரது பாடல்களின் வீரியத்தால் இன்னமும் இவரை பாடல் எழுதச் சொல்லி பல இயக்குநர்களும்,  தயாரிப்பாளர்களும் விரும்புவதால் மீண்டும் பாடல் எழுதத் தொடங்கியிருப்பவர் ‘கலாச்சாரம் 2018’, ’சகவாசம்’ ஆகிய இரண்டு படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். இதுதவிர சில படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளாராம்.

சினிமா பாடல்கள் மட்டுமின்றி பக்திப் பாடல்களிலும் தனி முத்திரை பதித்திருக்கும் இதயஜோதி, இதுவரை 200 க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்கள் எழுதியிருக்கிறாராம். இவர் எழுதிய பக்திப் பாடல்கள் இன்னமும் ஆன்மீக உலகில் ஒலித்து வருகிறதாம். பக்திப் பாடல்கள் மட்டுமின்றி பல பக்திக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய பல கட்டுரைகளை மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் வெளியிட்டிருக்கிறாராம்.

தற்போது,  தஷி இசையமைப்பில் ‘கண்ணனும் கந்தனும்’ என்ற பக்திப் பாடல் ஆல்பம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கிறது. 11 பாடல்கள் கொண்ட இந்த இசை ஆல்பத்தில் அனைத்துப் பாடல்களும் பக்தர்களை உருக வைக்குமளவுக்கு அமைந்துள்ளதாம்.

‘‘மெட்டுக்கு பாட்டோ அல்லது பாட்டுக்கு மெட்டோ, இசையமைப்பாளர் எப்படி கேட்டாலும் தனது வார்த்தை ஜாலத்தாலும், கவிதை ஜாலத்தாலும் அவர்களை மட்டுமின்றி ரசிகர்களையும் திருப்திப்படுத்து வதுதான் என்னுடைய ஸ்டைல். சினிமாவில் பல துறைகளில் பயணித்தாலும் பாட்டு எழுதுவதில்தான் எனக்கு அலாதி ப்ரியம். ஏன்னா, அதற்காகத்தான் நான் சினிமா துறைக்கே வந்தேன். அதனால், இனி எனது முழு கவனத்தையும் பாட்டு எழுதுவதில் மட்டுமே செலுத்தப் போகிறேன்'' என்கிறார் இதயஜோதி.

- ரா