அண்ணன் விஜய்யோடு தம்பி விக்ராந்த் சேர்வது எப்போது?



‘சுட்டுப்பிடிக்க உத்த ரவு’, ‘பக்ரீத்’ என்று அடுத்தடுத்து நடித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார் விக்ராந்த். அடுத்த படத்துக்காக கதை கேட்டுக்கொண்டிருந்தவர் உணவு இடைவெளியில் நம்மிடம் பேசினார்.“உங்க லேட்டஸ்ட் ரிலீஸ் ‘பக்ரீத்’ அனுபவம் எப்படி இருந்தது?”

“ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். மிகப் பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது. அந்தப் படத்துக்காக நான் நிறைய கஷ்டப்பட்டு உழைத்தேன் என்று சொல்லமாட்டேன். சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப் பதிவாளர் தொடங்கி உதவியாளர்கள் வரை எல்லோருடைய உழைப்பும் ஒரு படத்தில் இருக்கிறது. அந்தப் படத்துக்காக மற்றவர்கள் செய்யாத வேலையை நான் செய்திருக்கிறேன் என்றால் உடல் எடையை அதிகரித்ததுதான். மற்றபடி வேறு  கஷ்டங்கள் இல்லை.”

“அடுத்த படத்தில் எந்த மாதிரி விக்ராந்தை எதிர்பார்க்கலாம்?”

“வேற மாதிரி எதிர்பார்க்கலாம். ‘தாக்க தாக்க’ படத்துக்குப் பிறகு அண்ணன் சஞ்சீவ் இயக்கத்தில் நடிக்கிறேன். விளையாட்டை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. என்ன விளையாட்டு என்பதை இப்போது சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் இருக்காது. ஆனால் அந்தப் படம் வித்தியாசமான படமாக இருக்கும். விஜய்சேதுபதி சார் திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். அந்தப் படத்தில் விஜய்சேதுபதியின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். நாங்கள் நல்லா வரவேண்டும் என்று நினைக்கக்கூடிய நல்ல உள்ளங்களில் அவரும் ஒருவர்.

அவருக்கு இரவு பகல் என்று தொடர்ச்சியாக படப்பிடிப்பு இருந்தாலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கி வைத்திருப்பார். அண்ணனும் அவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்துக்குச் சென்றுவிடுவார். படப்பிடிப்பு எத்தனை மணிக்கு முடிந்தாலும் விஜய்சேதுபதி சார் தன்னுடைய பங்களிப்பைக் கொடுக்கத்தவறமாட்டார். குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணி நேரம் எங்களுக்காக ஒதுக்குவார்.”

“விஜய்யின் உறவுக்காரர் என்கிற சினிமா பின்னணி உதவியாக இருக்கிறதா அல்லது உபத்திரவமாக இருக்கிறதா?”

“இரண்டும் கலந்து இருக்கிறது. ஒருசில இடங்களில் அணுகுவதற்கு உதவியாக இருக்கிறது. மற்றபடி நம்முடைய தனித்திறைமையைச் சார்ந்துதான் எல்லாமே அமைந்துள்ளது. சினிமா என்பது முழுக்க முழுக்க வணிகம் சார்ந்தது என்பதால் தெரிந்தவர், தெரியாதவர் என்ற பேச்சுக்கு இங்கு இடமில்லை. திறமை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். உழைப்பு சார்ந்துதான் உயர்வு அமையும்.

விஜய் சார் குடும்பம் என்ற பின்னணி நான் முதன் முதலாக சினிமாவில் அடியெடுத்து வைக்க உதவியாக இருந்தது. அதன்பிறகு அந்தப் பின்னணி யூஸ் ஆகாது. அதன்பிறகு என்னுடைய திறமை என்ன என்பதைக் காண்பிக்க வேண்டும். நான் என்ன பண்றேன் என்பதைப் பொறுத்துதான் வாய்ப்புகள் வரும்.”

“பல ஆண்டுகள் சினிமாவில் இருந்தாலும் நிலையான இடத்தைப் பிடிக்கமுடியவில்லையே என்ற வருத்தம் உங்களுக்கு உண்டா?”

“அந்தக் கோணத்தில் என்னுடைய வளர்ச்சியைப் பார்க்கவில்லை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. எந்த ஒரு வேலையாக இருந்தாலும் வெற்றி, தோல்வி வரும். ஏமாற்றங்கள் இருக்கும். அப்படி எனக்கு சில சமயம் தோல்வியோ, ஏமாற்றமோ வரும்போது நான் சோர்வடைவதில்லை. ஏன்னா, சினிமா எனக்கு பிடிக்கும்.

2005ல் நான் அறிமுகமானேன். அந்தக் காலகட்டத்தில் என்னுடன் வந்தவர்களில் பலர் இப்போது ஃபீல்டில் இல்லை. ஆனால் நான் நிற்கிறேன். அந்த வகையில் நான் சினிமாவில் இருப்பதையும் நான் நடித்த படங்கள் வெளியாவதையும் பெரிய சாதனையாகப் பார்க்கிறேன். அது போன்ற செயல்கள்தான் நான் தொடர்ந்து இயங்குவதற்குக் காரணமாக இருக்கிறது.

அதுமட்டுமில்ல, நான் தயாரிப்பாளரும் கிடையாது. என்னுடைய படங்களை நானே தயாரித்து நடிக்கக்கூடியளவுக்கு எனக்கு பைனான்ஸ் சப்போர்ட் கிடையாது. அதுபோன்ற அம்சங்கள் என்னிடம் இல்லாத நிலையில் நான் சினிமாவில் இருப்பதே பெரிய சாதனை. எனக்கான இடம் சினிமாவில் கிடைக்கும்வரை என்னுடைய போராட்டம் தொடரும்.”

“நாயகனாக நடித்துவரும் நீங்கள் கேரக்டர் ரோலில் நடிக்கும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?”

“கதை பிடித்திருந்ததால் கேரக்டர் ரோலில் நடிக்கிறேன். அந்தவகையில் கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருந்தால் சின்ன இயக்குநர் பெரிய இயக்குநர் என்று பார்க்கமாட்டேன். ‘தொண்டன்’ படத்தைப் பொறுத்தவரை கனி அண்ணன் அழைத்தார். கனி அண்ணன் மீது எனக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு.

கதை கேட்காமலேயே அந்தப் படத்தில் நடித்தேன். என்னுடைய எதிர்பார்ப்பு எல்லாமே நல்ல கதையில் நான் இருக்கணும் என்பது மட்டுமே. அந்த வகையில் என்னுடைய கேரக்டர் சின்னதாக இருந்தாலும் நடிக்கத்  தயங்கமாட்டேன். ‘கவண்’, ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ போன்ற படங்களில் எனக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.”

“இயக்குநர் பாலா, ‘தொண்டன்’ பட விழாவில், நீங்கள் பெரிய ஹீரோவாக வலம் வருவீர்கள் என்று  சொல்லியிருந்தாரே?”
“பாலா சார் பாராட்டு எனக்குக் கிடைத்த அங்கீகாரம். எனக்குப் பிடித்த இயக்குநர் நேரடியாக பொதுமேடையில் பாராட்டிய அந்தத் தருணம் மறக்கமுடியாதது. அவருடைய பாராட்டு ஊக்கத்தைக் கொடுத்தது. பாலா சாரின் பாராட்டு என்னால் சாதிக்க முடியும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியதோடு, தொடர்ந்து முன்னேறி நடக்க உந்துதலாக இருக்கிறது. அந்த வகையில் வாய்ப்பு வரும் என்று உட்காராமல் முன்னணி நடிகருக்கான இடத்தை நோக்கி தொடர்ந்து முயற்சித்து வருகிறேன்.”

“பெரிய இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்கும் பழக்கம் இருக்கிறதா?”

“நிறைய கேட்டிருக்கிறேன். நிறைய கதவுகளைத் தட்டியிருக்கிறேன். ஆனால் நான் தட்டிய கதவுகள் எதுவும் திறந்ததில்லை. ‘பக்ரீத்’ படத்தில் கூட என்னுடைய நடிப்பை மீடியா, சினிமாத் துறையைச் சேர்ந்தவர்கள், ரசிகர்கள் என்று பரவலாகப் பாராட்டினார்கள். சினிமாவுக்கு நான் வந்து 14 வருடங்கள் கடந்துவிட்டது.

என்னுடைய படங்கள் வழியே என்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருக்கிறேன். அதன்பிறகும் விக்ராந்த் நல்லா நடிப்பார் என்று சொல்லவேண்டியதில்லை. என்னை அடையாளம் கண்டு வருகிறவர்களும் உண்டு. நானும் ஈகோ பார்க்காமல் இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்டும் வருகிறேன். என்னுடைய முயற்சிக்கு கண்டிப்பாக ஒரு நாள் பலன் கிடைக்கும்.”

“பிறமொழிகளில் நடிக்கும் ஆர்வம் இருக்கா?”

“எனக்கும் அப்படி ஒரு ஆர்வம் உண்டு. அப்படி வாய்ப்பு வந்தால் நடிப்பேன். தெலுங்கு, மலையாளத்தில் ஓரிருமுறை வாய்ப்பு வந்தது. என்னுடைய மனசுக்கு சரியாகத் தோன்றாததால் அந்தப் படங்களைப் பண்ணவில்லை. நல்ல படமாக வரும்போது பிறமொழிகளில் நடிப்பேன்.”
“எல்லாம் சரி... அண்ணன் விஜய் படத்தில் தம்பி விக்ராந்தை  எப்போது பார்க்கலாம்?”

“அண்ணன் அழைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். அண்ணனுடன் நடிக்காததை குறையாகப் பார்க்கவில்லை. நானும் அண்ணனும் சேர்ந்து நடிக்குமளவுக்கு கதை அமைய வேண்டும். என்னுடைய இடத்திலிருந்து விஜய் அண்ணன் படத்தில் நடிக்கவில்லையே என்று சொல்வது எளிது. ஆனால் அண்ணனுடைய இடத்திலிருந்து பார்க்கும்போதுதான் நான் தேவையா, இல்லையா என்பது தெரிய வரும்.”

“நடிகர்கள் நடிப்புப் பயிற்சிக்காக வெளிநாடுகள் செல்வது பற்றி?”

“அதில் எனக்கு நம்பிக்கையில்லை. அதுமட்டுமில்ல, அமெரிக்கா செல்லுமளவுக்கு என்னிடம் பண வசதி இல்லை. என்னுடைய இயக்குநர்களே எனக்கு ஆசானாக இருந்து நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும்போது நடிப்புப் பயிற்சி எனக்குத் தேவையில்லை என்று தோன்றுகிறது.”

- சுரேஷ்ராஜா