கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை!



இசை உலகில் சாதிக்க விரும்புகிறவர்கள் கவர்மியூசிக் மூலம் ஏராளமான ரசிகர்களை வசப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் கலிபோர்னியாவில் புகழ் பெற்ற பாப் பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஹிதா. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவரின் குரலுக்கு கலிபோர்னிய மக்கள் அடிமை என்றே சொல்லலாம்.

இவரின் பாடல்களை வலைத்தளத்தில் கண்டு ரசித்த குவியம் மீடியா ஒர்க்ஸ் யோகேந்திரன், ஹிதாவை அணுகி சென்னையில் ஒரு பாப் இசை நிகழ்ச்சி நடத்தித் தருமாறு கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக் கொண்டு இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் ‘INSPIRED  BY HITHA’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தினார்.

இந்தியாவுக்கு அறிமுகமில்லாத இவரை ரசிகர்கள் எப்படி ஏற்கப்போகிறார்கள் என்று பெரிய சந்தேகம் இருந்தது.  இந்த நிகழ்ச்சிக்கு நுழைவுக் கட்டணம் கட்டி பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மேலும் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் அங்கு இசை நிகழ்ச்சியைக்காண  கூடியிருந்தனர். ஹிதா அறிமுகம் இல்லாதவர் என்றாலும் ரசிகர்கள் இவரது பாப் இசை பாடல்களுக்கு மயங்கினர். கடைசியாக பாடிய 4 பாடல்களுக்கு குழந்தைகள் ஆட்டம் போடத் தொடங்கிவிட்டனர். நிகழ்ச்சி முடியும் தருவாயில் அனைவரும் எழுந்து நின்று கிட்டத்தட்ட 10 நிமிடம் கைதட்டிக் கொண்டிருந்தது பாப் இசைக் கலைஞர் ஹிதாவை பெரும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியதாம்.

‘‘அமெரிக்காவில் வசித்தாலும் கர்நாடிக் உட்பட இந்திய இசை மீது எனக்கு நாட்டம் உண்டு.  பாப் மேடைகளுக்கு அடுத்து சினிமாவில் பாட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. நம்முடைய இசையமைப்பாளர்கள் மிக அபாரமாக இசையமைக்கிறார்கள்.

தற்போது தெலுங்கில் சில படங்களில் பாடியுள்ளேன். தமிழில் பிரபல இசையமைப்பாளர்களிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. இனி தொடர்ந்து என்னுடைய குரல் கோலிவுட்டில் ஒலிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்கிற ஹிதாவுக்கு நாட்டுப்புற ஸ்டைலில் பாடவும் ஆர்வம் உண்டாம்.

- எஸ்