45 நாளில் 40 லொக்கேஷன்! ‘குண்டு’ பட ரகசியங்கள்



‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’ ஆகிய பா.ரஞ்சித்தின் படங்களின் ஒளிப்பதிவாளர் ஜி.முரளி. நான், முரளி அண்ணனின்  மாணவன். அதியன் ஆதிரை ரஞ்சித் அண்ணனின் மாணவர். நாங்கள் தனித்தனி குழு அல்ல, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளைப் போன்றவர்கள்” என்கிறார் ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார்.

இயக்குநர் பா ரஞ்சித் தயாரித்திருக்கும்  இரண்டாவது படம் தான் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கி இருக்கிறார்.  இதில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார் கிஷோர் குமார். படத்தின் டீஸர் வெளிவந்ததுமே ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி சினிமாத்துறையினரிடமே கூட பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

 “உங்க பின்னணி”‘‘என் அண்ணன் ஓவியர். சென்னை கவின் கலைக் கல்லூரி யிலே படிச்சவரு. சின்ன வயசில அண்ணனோட ஓவியங்களைப் பார்த்து வளர்ற சூழல் இருந்ததால ஸ்கூல் முடிச்ச உடனே ரெகுலரா எல்லாரும் படிக்கிற படிப்பு மேலே எனக்கு ஆர்வம் வரல. எங்க அண்ணன் தான் என்ன விஷுவல் கம்யூனி கேஷன் படிக்க சொன்னாரு.

காலேஜ் போறதுக்கு முன்னாடியே அண்ணனோட கேமராவிலேதான் போட்டோ எடுக்கக் கத்துக்கிட்டேன். தஞ்சை பாரத் காலேஜ்லதான் விஸ்காம் முடிச்சேன். என்னோட குருநாதர் முரளி அண்ணன் என் அண்ணனோட நண்பர். எப்போதுமே எங்க குடும்பத்தோடு நல்ல நட்புறவுலே இருப்பவரு. நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே எனக்கு ஸ்ட்ராங்கான கார்டியனா இருந்தது முரளி அண்ணன்தான்” “சினிமா என்ட்ரி?”

“ஒரு பத்திரிகையில் போட்டோகிராபரா வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். இதுலேருந்து அடுத்த தளத்துக்கு போகணும்னு தோணுச்சி.  அப்புறம்தான் சினிமாவை பல கோணத்திலே பார்க்க ஆரம்பிச்சேன். அந்த நேரத்திலே முரளி அண்ணா தெலுங்குல ‘அந்தால ராக்சஷி’ன்னு ஒரு படத்துக்கு கேமரா பண்ணாரு. அந்தப் படம் தான் நான் வேலை பார்த்த முதல் படம். போட்டோகிராஃபில இருந்து சினிமாட்டோகிராஃபிக்கு ஷிப்ட் பண்ண வச்சது அவருதான். முதல் நாள் சூட்டிங்ல எனக்கு எதுவுமே புரியல. லைட்டிங், கட்ஸ்-னு என்னென்னவோ பேசுனாங்க.   

முரளி அண்ணன் கூட இருக்கிறவங்க  எல்லாருமே பயங்கர இண்டெலெக்ச்சுவலா இருந்தாங்க. ஒரு விசயத்தை பேசுனா பயங்கர ஆழமா பேசுவாங்க. சினிமாலே இருக்கிற எல்லா கிராஃப்ட் பத்தியும் பேசுறாங்க. இதெல்லாம் இவங்களுக்கு எப்படி தெரியும்னு ஆச்சரியமா இருக்கும். அப்புறம்தான் தெரியுது எல்லாருமே பெரிய இன்ஸ்டி டியூட்ல படிச்சி இருக்காங்கனு. அப்பதான் சினிமாவ ஆழமா கத்துக்க தோணுச்சி. அப்புறம் தான் சத்யஜித்ரே இன்ஸ்டி டியூட்ல சேர்ந்தேன்.

சினிமா எங்கேயும் ஓடிறாது. முதல்லே சினிமாவ படிக்கலாம், அப்புறமா சினிமாவுக்கு வரலாம்னுதான் படிக்கப் போனேன். அந்த இன்ஸ்டிடியூட்டுலே இடம் கிடைக்கிறதே கஷ்டம். எல்லா ஸ்டேட்ல இருக்கிறவங்களும் அங்க படிப்பாங்க. அதனால வேற வேற  கலாச்சாரத்தில இருக்கிறவங்களோட பழக வாய்ப்பு கிடைச்சது.

என்னை கலைஞனா உணர வச்சது  சத்யஜித்ரே இன்ஸ்டிடியூட் தான்.  படிப்பை முடிச்சிட்டு வரும் போது தான் ‘கபாலி’ படம் ஸ்டார்ட் பண்ணாங்க. அடுத்து ‘காலா’. இந்த ரெண்டு படத்திலேயும் முரளி அண்ணன் கூட முழுசா வேலை பார்த்தேன். என்னை ஒரு ஒளிப்பதிவாளரா தயார் செஞ்சது இந்த ரெண்டு படம் தான்.”

“இயக்குநர் அதியன் ஆதிரைக்கும் உங்களுக்குமான நட்பு?”

“ரஞ்சித்தோட ‘மெட்ராஸ்’,  ‘கபாலி’  படங்களில் வேலை பார்க்கும்போது அதியன் ஆதிரை அறிமுகம் ஆனாரு. ரஞ்சித் அண்ணா படத்திலே டைரக்டர் டிபார்ட்மெண்ட், கேமரா டிபார்ட்மெண்ட்னு தனித் தனியா வேலை பார்க்க மாட்டோம் எல்லாரும் ஒண்ணா தான் இருப்போம். ஒண்ணா தான் வெளியே போவோம். அதியன் கூட வேலை பார்க்கும் போது நம்மள வியக்க வச்சிட்டே இருப்பாரு. காமெடியா பேசிட்டு இருக்கும்போது திடீர்னு உலக அரசியலை கனெக்ட் பண்ணுவாரு. அங்க அப்படி நடந்துச்சி, இங்க இப்படி நடந்துச்சினு புதுசா தெரியாத விசயத்தை எல்லாம் சொல்லுவாரு.”

“இந்த ‘குண்டு’ பட வாய்ப்பு?”

“ஜாலியா பேசிட்டு இருக்கும் போதெல்லாம் என் படத்துக்கு நீதான் மச்சி கேமரா பண்ணணும்னு அடிக்கடி அதியன் சொல்லுவாரு. அந்தக் கதையோட ஆரம்பத்தில இருந்து ட்ராவல் பண்ணுறேன். அப்போ  சினிமாட்டோகிராஃபி நல்லா பண்ணுவனா, இல்லையானு எல்லாம் எனக்கு தெரியாது. நான் அவரை புரிஞ்சிக்கிட்டதும், என்னை அவரு புரிஞ்சிக்கிட்டதும் தான் காரணம். அதையும் தாண்டி என் மேல அவருக்கு இருந்த  நம்பிக்கை.”

“ஹீரோ தினேஷ்?”

“புதுசா வர்ற டைரக்டருக்கும் சரி, கேமராமேனுக்கும் சரி, ஒரு ஹீரோவ எப்படி ஹாண்டில் பண்ணப்போறோம் என்கிற பயம் இருக்கும். ஆனா தினேஷ் கூட வேலை பார்க்கும் போது அந்த பயம் இல்லை. இது வரைக்கும் பதினாறு படங்கள் ஹீரோவா நடிச்சவரு. அந்தப் பதினாறு படமும் புது இயக்குநர்களோட படம்.

கேமராமேன் கூட என்ன பேசணும், டைரக்டர் கூட என்ன பேசணும், சக மனிதர்களை எப்படி கையாளணும்னு அவருக்கு நல்லா தெரியும். ரொம்ப டெக்னிக்கலான ஒரு நடிகர்.  அதுமட்டும் இல்லை, சூட்டிங் ஸ்பாட்லே குரூப் டிஸ்கஷன் பண்ணுவோம். ஆனந்தி, தினேஷ் ரெண்டு பேரும் பயங்கரமான காம்போ. அவ்ளோ ஈசியா எங்க ஒர்க்க மாத்துனது அவங்கதான். ரொம்ப நுணுக்கமா சில எமோஷன்ஸ் ட்ரை பண்ணுவாங்க.”

“45 நாளில் 40 லொக்கேஷன்னு சொல்லுறீங்க. இது டிராவல் கதையா?”

 “ஆமாம். இது ட்ராவல் கதைதான். சென்னையில் இருந்து பாண்டிச்சேரி வரைக்கும் இந்தக் கதை பயணிக்கும். ஒரே நாள் ரெண்டு லொகேஷன்ல சூட் பண்ணுவோம். அப்போ முழு டீமும் வேற இடத்துக்கு மாறும்போதுதான் பயங்கர சேலஞ்சிங்கா இருந்துச்சி. பிளான் போட்ட மாதிரி ஒவ்வொரு ஊரா தங்குவோம்.

அடுத்த ஊருக்கு சூட் பண்ண போறதுக்கு முன்னாடியே தயார் பண்ணிருவோம். நாங்க போட்ட செட்யூல ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ பண்ணதாலேயும், வேலை பார்த்த எல்லாருமே அர்ப்பணிப்போட இருந்ததாலேயும் தான் நாங்க நினைச்ச மாதிரி படத்தை முடிச்சிருக்கோம்.”

“நிறைய புத்தகம் வாசிக்கறீங்களே! இதெல்லாம் சினிமாவுக்கு உதவுதா?”

“சினிமாவுக்கு வந்தபிறகு தான் நிறைய வாசிக்க ஆரம்பிச்சேன். சினிமாவிலே வேலை பார்க்குற எந்த கலைஞரா இருந்தாலும் சரி, ஒரு விசயத்தை இமேஜ் பண்ணுற ஆற்றல் இருக்கணும். சினிமாவைப் பொறுத்த வரைக்கும் ஒரு வார்த்தையை விஷுவலா மாத்தத் தெரிஞ்சிருக்கணும். அதை இலக்கியம் தான் பிராக்டிஸ் பண்ண வைக்குது.

குறிப்பா ஒரு ஒளிப்பதிவாளருக்கு இலக்கியத்தில இருந்து விஷுவலுக்கு மாத்துற சென்ஸ் வாசிப்பில தான் கிடைக்கும்.  ஸ்கிரிப்ட் வாசிக்கும் போது நான் இமேஜின் பண்றத ரொம்பவே ரசிப்பேன். அதுதான் ஆன்தி ஸ்பாட்ல என்ன பண்ணுறோம்ங்கிறதுக்கு அடிப்படையே.”

“இந்த ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தை அரசியல் படமா எதிர்பார்க்கலாமா?”

“நாங்க அரசியல் படம் எடுக்கிறவங்க இல்லை. மக்களோட வாழ்வியலை எதார்த்தமா காட்டுற படங்களைத்தான் எடுக்கிறோம். குண்டு படம் பார்க்கும் போது ஒரு லாரி ட்ரைவர் பக்கத்தில கேமரா வச்சிட்டு அவரு கூட ட்ராவல் பண்ணா எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கும். கண்டிப்பா குண்டு படத்துக்கு அப்புறம் சமூகத்திலே உரையாடல் நிகழ்த்துற இயக்குநரா அதியன் இருப்பாரு. ஆனாலும் எல்லாத்லேயும் அரசியல் இருக்கும். இந்தப் படத்திலே கொஞ்சம் உலக அரசியலையும் பேசியிருக்கோம். அமைதி தான் பெரும் அரசியல் என்று சொல்ல வராரு அதியன்.”

“அடுத்த பிளான் என்ன?”

“எனக்கு இப்படித்தான் படம் பண்ணணுங்கிற கட்டுப்பாடு எல்லாம் கிடையாது. நான் பழகுன நண்பர்கள் எல்லாமே வேற வேற கலாச்சாரத்தில, மொழியிலே இருக்கிறவங்க. அதனால எல்லா இடத்திலேயும் போய் ஒர்க் பண்ணணும். அடுத்து ஒரு படம் பேசிட்டு இருக்கேன்.  இப்போதைக்கு குண்டு படம் ரிலீசுக்காக வெயிட்டிங்.”
 

- தீக்சா தனம்