டாக்டர் ஆன ஆக்டர்!



மின்னுவதெல்லாம் பொன்தான்-45

80களின் இளசுகள் ஜீஜியை அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். காரணம், இரண்டே பாடல்கள் அவரை இன்று வரை சுமந்து வந்து கொண்டிருக்கின்றன. ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘பனி விழும் மலர்வனம்’ பாடல்களை இளையராஜாவின் இசையில் கேட்கும்போதெல்லாம், ஜீஜி மனசுக்குள் உலா வருவார். இரண்டு பாடல்களின் வரிகளையும் தலைப்பாகக் கொண்டு படங்கள்  வெளிவந்திருக்கின்றன.

1982ல் வெளிவந்த படம் ‘நினைவெல்லாம் நித்யா’. யதார்த்தமான காதல் கதைகளை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய ஸ்ரீதர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கிய படம். ஜெமினி கணேசனை வைத்து பல காதல் படங்களைக் கொடுத்த தர், அவரது கடைசி மகள் ஜீஜியை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தினார். இயற்பெயர் ஜெயலட்சுமி. ஜீஜியின் வருகையை அன்றைய சினிமா கொண்டாடியது.

ஜீஜியும், கார்த்தியும் யதார்த்தமான காதலர்களாக படத்தில் வாழ்ந்தார்கள்.  உடல் ரீதியான உறவு இல்லாமல் ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ முடியுமா என்கிற கேள்வியை  முன்வைத்து அதற்கு பதிலும் சொன்ன படம். ஆனால் அன்றைக்கிருந்த ரசிகர்கள் இதனை ஏற்கவில்லை. படம் நினைத்த அளவிற்கு பெரிதாகப் போகவில்லை.

என்றாலும் இளையராஜாவின் பாடல்களும், ஜீஜியின் முகமும் மக்கள் மனதில் பதிந்தன.முதல் படத்தின் தோல்வி ஜீஜியை மிகவும் பாதித்திருக்க வேண்டும்.  அதனால் அடுத்த படத்தில் நடிக்க அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தேடிவந்த சில வாய்ப்புகளையும் அவர் தவிர்த்துவிட்டதாகச் சொல்வார்கள்.

நடிக்கும்போது அவர் மருத்துவத்தில் இளம்கலை பட்டம் பெற்றிருந்தார். அதன்பிறகு மேல்படிப்பு படித்து மருத்துவத் துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்டார்.இன்றைக்கு சென்னையில் உள்ள முக்கிய பெண் மருத்துவர்களில் அவரும் ஒருவர். யுனிசெப் போன்ற சர்வதேச மருத்துவ அமைப்புகளில் உறுப்பினராக  உள்ளார். சர்வதேச அளவில் செயல்படுத்தப்படும் மருத்துவத் திட்டங்களில் பணியாற்றி வருகிறார். எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக  பெரும்பாங்காற்றி வருகிறார்.

எல்லோரும் ஆக்டராகி விட முடியும். எல்லோராலும் நல்ல டாக்டராகி விட முடியாது. அந்த வகையில் ஜீஜி சினிமாவை  விட்டு விலகியதும் நல்லதுக்குத்தான். சமூகத்துக்கு ஒரு நல்ல மருத்துவர் கிடைத்தார்.  நடிகை ஜீஜி இன்று  டாக்டர் ஜெயலட்சுமி தராக கம்பீரமாக வலம் வருகிறார்.

(மின்னும்)

●பைம்பொழில் மீரான்