சர்வதேச அரங்கில் தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கும் நெய்வேலிக்காரர்!



சென்னையைச் சேர்ந்த இண்டிபெண்டன்ட் இயக்குநர் அபிலேஷ் ரவி இந்திய சினிமாவுக்குப் பெருமை தேடிக் கொடுத்துள்ளார்.2007ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அமெரிக்காவின் கான்சாஸ் நகரின் உலகளாவிய சுயாதீன திரைப்பட விழா, அமெரிக்காவின் மிக முக்கியமான 100 திரை விழாக்களில் ஒன்றாகும்.
இது சுயாதீன திரைப்படக் கலையைக் கொண்டாடும் வருடாந்திர பொழுதுபோக்கு நிகழ்வு. இயக்குநர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து தரப்பு திரைப்பட பார்வையாளர்களையும் இந்த நிகழ்வு ஈர்க்கிறது.

கனடா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ரஷ்யா, துருக்கி, ஈரான், இந்தியா, லெபனான், இஸ்ரேல், செக் குடியரசு, தென் ஆப்பிரிக்கா, ஃபிலிப்பைன்ஸ், அமெரிக்கா என 104க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்த 1127 சமர்ப்பிப்புகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட திரையிடல்கள் இருந்தன. 1127 படங்களில் இருந்து 50 ஆகவும், பிறகு 30 படங்களும் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டன.

இந்தியாவில் இருந்து மொத்தம் இரண்டு இயக்குநர்கள் இப் போட்டியில் கலந்துகொண்டு சாதனை புரிந்துள்ளனர். ஒருவர் இந்திய வம்சா வளியைச் சார்ந்த, கனடா நாட்டுக் குடியுரிமை பெற்றவர். இன்னொருவர்தான் அபிலேஷ் ரவி. குறும்பட போட்டித் தேர்வில் இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட அபிலேஷ் ரவி இயக்கிய தமிழ் குறும்படம் ‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ உலகின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்திருந்த படங்களுடன் போட்டியிட்டு, வெற்றி பெற்றிருக்கிறது.

விருது வென்ற மகிழ்ச்சியில் இருந்த அபிலேஷ் ரவியிடம் பேசினோம். ‘‘எனக்கு சொந்த ஊர் நெய்வேலி. என்ஜினியரிங் முடித்துள்ளேன். படிக்கும்போது ஃபேஷன் ஃபோட்டோகிராபி மீது ஆர்வம் வந்தது. அதன் தொடர்ச்சியாக ஒளிப்பதிவில் கவனம் செலுத்தினேன். ‘புலி’ படத்தின் மேக்கிங்கில் பணியாற்றினேன். ‘மெர்சல்’ படத்தில் ஜி.கே.விஷ்ணு சாரிடம் உதவியாளராக வேலை பார்த்தேன். தொடர்ந்து படம் இயக்கலாம் என்ற முயற்சியில் இருந்தபோதுதான் குறும்படம் இயக்கினேன்.

என்னுடைய குறும்படத்தில் வாழ்க்கையில் வெற்றி பெற நேரமும் விருப்பமும் முக்கியம் என்பதைச் சொல்லியிருப்பேன். பொதுவாக குறும்படங்களில் ஆக்‌ஷன் இருக்காது. நான் ஆக்‌ஷன் படமாக இயக்கியதால் கூடுதல் வரவேற்பு கிடைத்தது.

காஜல் பசுபதி, அஸ்வின் ஜெரோம், ஷாலி நிவேதாஸ் சிறப்பான ஒத்துழைப்பைக் கொடுத்தார்கள். ப்ரவீன் கே.எல். உதவியாளர் இளையராஜா எடிட்டிங் பண்ணினார்.

இசை ராஜ் கே.சோழன். தயாரிப்பாளர் தேனப்பன், இயக்குநர் அஜய்ஞானமுத்து, எடிட்டர் கே.எல்.ப்ரவீன் போன்ற ஜாம்பவான்களின் பாராட்டு என்னை உற்சாகப்படுத்தியுள்ளது. என்னுடைய அடுத்த இலக்கு படம் இயக்குவதுதான்’’ என்று சொல்லும்
அபிலேஷுக்கு இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனின் படங்கள் பிடிக்குமாம்.

- ரா