கடைக்குட்டி சிங்கம் சரவணன்



டைட்டில்ஸ் டாக்-130

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் வரும் கார்த்தி கேரக்டர் மாதிரிதான் நான். உறவுகளை விட்டுக்கொடுக்கக்கூடாது என்பதற்காகவே உள்ளதையெல்லாம் இழந்திருக்கிறேன். உறவுகள் கைவிட்டாலும் கடவுள் என்னைக் கைவிட்டதே இல்லை. சொந்த ஊர் சேலம். அப்பா போலீஸ். அம்மா செவிலியர். ஓர் அண்ணன், மூன்று தம்பிகள்.

வீட்டுக்கு இரண்டாவது பிள்ளையாக இருந்தாலும் கடைக்குட்டி சிங்கம் மாதிரிதான் செல்லம் கொடுத்து வளர்த்தார்கள். நான் பிறந்த பிறகுதான் அப்பா ஏட்டாக, பிறகு அதிகாரியாக என்று படிப்படியாகப் பதவி உயர்வுபெற்று செல்வாக்கான மனிதராக மாறினாராம். வீட்டில் செல்லமும் எனக்குத்தான் அதிகம். அடியும் எனக்குத்தான் அதிகம்.

வைரமுத்து சாரையும், கண்ணதாசன் சாரையும் பிடிக்கும் என்பதால் சேலம் வைரக்கண்ணன் என்ற புனைப் பெயரில் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். அப்படி நான் எழுதிய கவிதைகளை வார இதழ்களுக்கு அனுப்பி வைப்பேன். ஒருமுறை என்னுடைய கவிதை பிரபல வார இதழில் பிரசுரமானது.

இந்தச் செய்தி எப்படியோ பள்ளி நிர்வாகத்துக்குத் தெரிந்து தலைமை ஆசிரியர் நீலகண்டன் அறிவிப்புப் பலகையில் என்னுடைய கவிதை பேப்பரை ஒட்டி வைத்து என் பெயர், வகுப்பு போன்ற விவரங்களை எழுதி சிறப்பு செய்தார்கள். ஒருபக்கம் பள்ளிக்கூடம் என்னை ஆராதிக்க, அப்பாவோ என் மீது செம கடுப்பில் இருந்தார். காரணம், பெயர் மாற்றம். அப்பா முருக பக்தர். அதனால்தான் எனக்கு சரவணன் என்று பெயர் வைத்தார். ‘நீ யாரைக் கேட்டு உன் பெயரை மாற்றினாய்’ என்று பின்னியெடுத்தார்.

அப்படித்தான் என்னுடைய கலைப் பயணம் ஆரம்பித்தது. படிக்கும் காலத்திலிருந்து எனக்கு பாரதிராஜா சார் படங்கள் பிடிக்கும். அவர்தான் எனக்குள் சினிமா தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரிடமிருந்து வெளியே வந்த பாக்யராஜ், அவரிடமிருந்து வெளியே வந்த பார்த்திபன் என்று பாரதிராஜா சாரின் ஸ்கூலில் இருந்து வந்த ஒவ்வொருவரின் படங்களையும் விரும்பிப் பார்ப்பேன். சினிமா செய்திகளை ‘வண்ணத்திரை’ மற்றும்  சினிமா பத்திரிகைகள் மூலம் அறிந்துகொள்வேன்.

அப்போது நான் பி.ஏ. தமிழ் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்தேன்.  அந்த சமயத்தில் ‘என்னுயிர் கண்ணம்மா’ படத்தின் சாங் கம்போஸிங்கிற்காக இயக்குநர் சிவச்சந்திரன் சாரும் இளையராஜா சாரும் சேலம் வந்திருந்தார்கள். இயக்குநரிடம் என்னுடைய சினிமா ஆசையைச் சொன்னேன். அவர் ‘‘டிகிரி முடித்துவிட்டு வா.

கண்டிப்பாக சினிமா வாய்ப்பு தருகிறேன். நான் டபுள் எம்.ஏ. முடித்துவிட்டுத்தான் சினிமாவுக்கு வந்தேன். அதே மாதிரி நீயும் டிகிரி முடித்துவிட்டு சர்டிபிகேட்டைக் காட்டியதும் சேர்த்துக்கொள்கிறேன்’’ என்றார். டச் விட்டுவிடக்கூடாது என்பதற்காக அவருக்கு அவ்வப்போது சேலத்து மாம்பழத்தை கூடை கூடையாக அனுப்பி வைப்பேன். ஒருநாள் மூன்று புகைப்படத்தை எடுத்துக்கொண்டு உடனே சென்னை வரும்படி லக்ஷ்மி மேடம் சார்பாக அவருடைய மேலாளர் சைலேந்தரிடமிருந்து கடிதம் வந்தது.

அப்பாவிடம் விஷயத்தைச் சொன்னதும் அனுமதி மறுத்துவிட்டார். அப்பாவுக்கு நான் போலீஸ் இன்ஸ்பெக்டராக வேண்டும் என்று விருப்பம்.  அப்பாவை தாஜா பண்ணினேன். கொஞ்சம் இரக்கம் காட்டிய அப்பா ‘நானும் உன்னுடன் சென்னைக்கு வருவேன்’ என்றார். அப்பாவும் நானும்  ஒருவழி யாக சென்னைக்கு வந்தோம். அப்போது லக்ஷ்மி அம்மா வீட்டில் ஐஸ்வர்யா நடிப்பது போல் டெஸ்ட் ஷூட் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் போன என்னையும் டெஸ்ட் ஷூட் எடுத்தார்கள். அதில் ஐஸ்வர்யா நாயகி. நான் நாயகன்.

இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு என்னையும், அப்பாவையும் சிவச்சந்திரன் சார் ஜெமினி லேபிற்கு அழைத்துச் சென்றார். அப்போதுதான் வாழ்க்கையில் முதன் முறையாக ப்ரிவியூ தியேட்டரைப் பார்த்தேன். அங்கு டெஸ்ட் ஷூட் காட்சிகளைப் போட்டுப் பார்த்தார்கள்.  அங்கிருந்தவர்கள் பையன் ஓக்கே என்று சொன்னார்கள்.

மேக்கதயவில் கருப்பாக இருந்தாலும் களையாக இருந்தேன்.  எல்லாம் முடிந்த பிறகு அப்பாவை மட்டும் ஊருக்குக் கிளம்பிப் போகச் சொன்னார்கள். அப்பா ‘அப்படியெல்லாம் பையனை தனியாக  விடமுடியாது’ என்றார். அப்பாவுக்கும் சிவச்சந்திரன் சாருக்குமிடையே பெரிய களேபரம் நடந்தது.

அச்சமயத்தில் சிவகுமார் சார் சிவச்சந்திரன் சாரைப் பார்க்க வந்தார். அங்கு நடந்த காட்சிகளைப் பார்த்த சிவகுமார் சார் அப்பாவிடம், ‘உங்க பையன் விருப்பத்துக்கு தடையாக இருக்காதீங்க. அவங்க நல்லா பாத்துப்பாங்க’ என்றார். அதுவரை சீற்றமாக இருந்த அப்பா சிவ குமார் சார் சொன்னதும்  கூல் ஆனார். அதன் பிறகு சினிமாவில் ராதாபாரதியால் அறிமுகப்படுத்தப்பட்டேன்.

சினிமாவில் பெரிய ஏற்றங்களையும் கண்டுள்ளேன். ஏமாற்றங்களையும் கண்டுள்ளேன். என்னுடைய வாழ்க்கையில் நினைத்துப் பார்க்கமுடியாத பல கவவைகள் இருக்கிறது. அவை என்னுலடய எதிரிக்கும்கூட நடக்கக்கூடாத மோசமான நிகழ்வுகள். ஆனால் இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் கணித்திருந்தேன். எனக்கு ஜோசியம் மீதும் கடவுள் மீதும் பெரிய நம்பிக்கை உண்டு என்பதால் என் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களைக் கண்டு துவண்டுபோகவில்லை.

என்னுடைய அப்பாவித்தனத்தால் நிறைய இழந்துள் ளேன். அதைப்பற்றி பேச விருப்பமில்லை. நாற்பதில் நல்லது நடக்கும் என்று நம்பினேன். என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை ‘பருத்திவீரன்’ படத்தில் ஆரம்பித்து வைத்த இயக்குநர் அமீர் சாருக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன். ‘பருத்திவீரன்’ படத்துக்குப் பிறகு என்னுடைய வாழ்க்கை மாறியது.

நிறைய படங்கள் வந்தன. ‘பிஞ்சு மனசு’, ‘வீரமும் ஈரமும்’ போன்ற படங்களில் மீண்டும் நாயகனாகவும் நடித்தேன். ஆனாலும் ‘சித்தப்பு’ என்ற இமேஜிலிருந்து வெளியே வர அரும்பாடுபட்டேன். எழுபது, எண்பது  வயதுக்காரர்களும் என்னை சித்தப்பு என்றே அழைத்தார்கள். அவையெல்லாம் அன்புத்தொல்லை என்று தெரிந்ததால் அது போன்ற அழைப்புகளும் என் வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்தின.

சித்தப்புவாக இருந்த நான் இப்போது பெரிய தலைவனாக மாறியிருக்கிறேன். இந்த மாற்றங்களுக்காக நான் எதையாவது செய்தேனா என்றால் இல்லை என்பதுதான் என்னுடைய பதில். எல்லாம் அவன் செயல். ‘ஒவ்வொரு இறப்பும் வரையறுக்கப்பட்டுள்ளது’ என்கிறார்கள். அதன்படிதான் ஒரு மனிதனின் ஆதியும் அந்தமும் அமைகிறது.

இங்கு உங்களுக்கானவைகள் எல்லாமே எழுதப்பட்டுவிட்டது. அப்படி விதிக்கப்பட்டதுதான் வாழ்க்கை. எதையும் மாற்றமுடியாது. விதியை மதியால் வெல்வோம் என்பது சொல்வதற்கு இனிமையாக இருக்கலாம். இறைவனின் கடாட்சம் இல்லை என்றால் சின்ன துரும்பும் அசையாது.

என்னுடைய வாழ்க்கையில் பல சோகங்களைக் கடந்துவந்துள்ளேன். ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் வரும் குடும்பம் போல்தான் எனக்கும் வாழ ஆசை. பணம் எல்லாத்தையும் பிரித்துவிட்டது. இப்போது உறவுகள் யாரும் என்னோடு இல்லை. எல்லோரும் என்னை அழவைத்துவிட்டார்கள்.இந்த உலகம் பணத்தைச் சார்ந்துதான் இயங்குகிறது.

மனிதர்களும் பணத்தைத்தான் பிரதானமாகப் பார்க்கிறார்கள். பணத்தின் அடிப்படையில்தான் பழக்க வழக்கங்களும் இருக்கிறது. சில கூட்டுக் குடும்பங்கள் இன்றும் தழைக்கிறது என்றால் அவர்கள் பாக்யசாலிகள். என்ன விலை கொடுத்தாவது உறவுகளுக்கு முட்டுக்கொடுங்கள். உறவு களைக் காயப்படுத்த வேண்டாம். அப்படி இருந்தால் உங்கள் வீட்டில் ஆனந்தம் விளையாடும்.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)