என்றும் மின்னும் ஏழாவது மனிதன்!



மின்னுவதெல்லாம் போன்தான்!!-42

●பைம்பொழில் மீரான்


அக்மார்க் தமிழரான ஹரிகரன் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே மும்பையில்தான். 1970களில் கமர்ஷியல் சினிமாக்கள் வளர்ந்து கொண்டிருந்த  நேரத்தில், சினிமாவை மாற்றுப் பாதையில் அழைத்துக் செல்ல முயன்றவர். ‘எக்ஸ்பெரிமெண்டல்  சினிமா–்’ என்கிற சோதனை முயற்சி படங்கள்  பல அவர் உருவாக்கினார். மராத்தியில் புகழ்பெற்ற  காசிராம் கொத்துவால் நாடகத்தை திரைப்படம் ஆக்கினார். அதுதான் அவரது முதல் படம்.இந்தி  மற்றும் மராத்தியில் சில படங்களை இயக்கி விட்டுத்தான் 1982ம் ஆண்டில் தமிழில் ‘ஏழாவது மனிதன்’ என்கிற பரீட்சார்த்தபடத்தை உருவாக்கினார்.  அதில் ரகுவரனை அறிமுகப் படுத்தினார். ரத்னா, தீபக், ரங்கா, ரூபா, சத்யேந்திரா நடித்தனர்.

படத்தின் கதை ரொம்ப எளிமையானது. பொறியியல் படித்த மாணவன் ஒருவன், ஒரு தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்கிறான். அங்கு நடக்கும்  தொழிலாளர் விரோதப் போக்கையும், முதலாளித்துவ சர்வாதிகாரத்தையும் உணர்ந்து  தொழிலாளர் நலனுக்காக போராடுகிறான். இதுதான் ‘ஏழாவது  மனிதன்’ படத்தின் கதை . இதை பாரதியாரின் பாடல்களைக் கொண்டு, குன்னக்குடி வைத்தியநாதனின் இசையை வைத்து,  ஒரு சுவாரஸ்யமான  திரைப்படத்திற்கு  தேவையான விதத்தில் அவர் சொன்னதால்தான் ‘ஏழாவது மனிதன்’ வெற்றி பெற்றது. இன்றும் பேசப்படுகிறது.‘ஆடுவோமே பள்ளு  பாடுவோமே’, ‘அச்சமில்லை.. அச்சமில்லை..’  ‘காக்கைச் சிறகினிலே’, ‘மனதில் உறுதி  வேண்டும்’, ‘நல்லதோர் வீணை செய்தே’, ‘நெஞ்சில்  உரமும்  இன்றி’, ‘வீணையடி  நீ எனக்கு’ ஆகிய பாரதியார் பாடல்கள் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

படம் அந்த ஆண்டிற்கான சிறந்த  தமிழ்ப் படத்திற்கான தேசிய விருதை வென்றது. மாஸ்கோவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில்  திரையிடப்பட்டு பாராட்டுகளைக் குவித்தது. குழந்தைகளை வைத்தும், குழந்தைகளுக்காகவும் பல படங்கள் வந்தபோதும் இவர் இயக்கிய ‘வான்டட்  தங்கராஜ்’ படம் தமிழில் வெளிவந்த குழந்தைகள் படங்களின்  பென்ச் மார்க் படம் என்றே சொல்லலாம்.  நாகேஷ் ஹீரோவாக நடித்தார். இந்தப்  படத்தை அப்போது குழந்தைகள் திரைப்பட நலச் சங்கத்தின் தலைவராக இருந்த வி.சாந்தாராம் தயாரித்தார். அதன்பிறகு ‘முதலையின் நண்பன்’,  ‘துபாஷி’ போன்ற படங்களை இயக்கினார்.

இதில் ‘துபாஷி’, தஞ்சாவூர் பகுதியில் வாழும் சவுராஷ்டிரா மக்களைப் பற்றிய கதை. பிரபல கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதிய  ‘கரண்ட்’ என்கிற கதையை குஜராத்தியில் படமாக  உருவாக்கினார். இந்திய திரைப் படக் கழகம் தயாரித்த இந்தப் படத்தில் ஓம்பூரி நாயகனாக   நடித்தார். ஸ்பெயின், எடின்பரோவில் நடந்த சர்வதேசப் பட விழாக்களில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. ஹரிகரன் வெறும் இயக்குநர்  மட்டுமல்ல. சினிமா குறித்து மணிக் கணக்கில் தெளிவாக மேடையில் பேசக்கூடிய அபாரமான பேச்சாளர். உலக சினிமா குறித்து துல்லியமாக  அறிந்து வைத்திருப்பவர். அரசின் பல்வேறு வகையான திரைப்படத்துறை பொறுப்புகளை வகித்தவர். தற்போது சென்னையில் எல்.வி.பிரசாத் பிலிம்   இன்ஸ்டிடியூட்டை தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கிறார்.  இப்படி பல புகழுக்கு சொந்தக்காரராக அவர் இருந்தாலும் ஏழாவது மனிதன் படத்தை  இயக்கியவர் என்பதே அந்தப் புகழின் மகுடமாக இருக்கிறது. ஏழாவது மனிதனும் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படமாக அமைந்தது.

(மின்னும்)