இசை எதிலேருந்து வருது?



சமீபத்தில் வெளிவந்த ‘ஜாக்பாட்’ படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர். ஏற்கனவே இவர் ‘ஜில் ஜங் ஜக்’  படத்தில் இடம் பெற்ற ‘ஷூட்  தி குருவி’ பாடல் மூலம் அதிகம் கவனம் ஈர்த்தவர். இப்போது ‘ஜாக்பாட்’ படத்தின் இசைக்காக அதிகம் பேசப்பட்டுவரும் நிலையில் விஷால்  சந்திரசேகரைச் சந்தித்தோம்.

“யார் இந்த விஷால் சந்திரசேகர்?”

“பிறந்த ஊர் கொல்கத்தா. அப்பாவுக்கு நேவியில் வேலை.  ஆறேழு மாதம் கடலில் இருப்பார். மீதி நாட்களில் நிலத்தில் இருப்பார். அம்மா மத்திய  அரசு பள்ளி  ஆசிரியை. எனக்கு தமிழ், பெங்காலி, இந்தி, தெலுங்கு உட்பட ஐந்து மொழிகள் தெரியும். இந்தியா முழுவதும் உள்ள 17  பள்ளிகளில்  படித்துள்ளேன்.எங்கள் குடும்பத்துக்கு என்று இசைப் பின்னணி எதுவும் கிடையாது. சொந்த ஆர்வத்தால்தான் இசைத் துறைக்கு வந்தேன். என்னுடைய  மாமா ஒருவர் இசைக் கருவிகள் வாசிப்பதில் ஆர்வமிக்கவர். அப்போது அவர் ஒரு  தனியார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அவர்  வீட்டில் இல்லாத நேரமாகப் பார்த்து பீரோவுக்குக் கீழே இருக்கும்  ‘புல்புல் தாரா’ இசைக் கருவியை எடுத்து வாசிப்பேன். மாமா வீட்டுக்குத்  திரும்புவதற்கு முன் அவர் எப்படி வைத்திருந்தாரோ அதே பொசிஷனில் வைத்துவிடுவேன்.

ஒரு நாள் எங்கள் வீட்டில் கரண்ட் கட்டாகிவிட்டது. அந்த சமயத்தில் டைம்பாஸுக்காக ஒருத்தர் பாட, இன்னொருவர் தபேலா வாசிக்க, நான் ‘புல் புல்  தாரா’வை  வாசிக்க ஆரம்பித்தேன். உடனே உறவினர்கள் ஆச்சர்யப்பட்டு கேள்வி எழுப்பினார்கள். ஒரு வருடமாக நான் திருட்டுத்தனமாக பயிற்சி  எடுத்தது அவர்களுக்குத் தெரியாது. என்னுடைய ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அம்மா அப்பா வேலை முடிந்து திரும்பும்போது கீ போர்டு வாங்கி வரச்  சொன்னார். கீ போர்டு கிடைத்த பிறகு அதில் பயிற்சி எடுத்துக்கொண்டேன். ஆறேழு வயதிலேயே கொல்கத்தா தமிழ்ச் சங்கம் நடத்தும் விழாக்கள்,  கோயில் நிகழ்ச்சிகளில் வாசிக்க ஆரம்பித்தேன்.இசையை நான் முறையாகக் கற்றுக்கொள்ளவில்லை. படிக்கும்போதே என்னுடைய எதிர்காலம்  இசைத்துறையில் சவுண்ட் என்ஜினியர் உட்பட ஏதோ ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்று நினைத்து எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸில்  மாஸ்டர் டிகிரி பண்ணினேன். அந்த சமயத்திலேயே ஆல்பங்கள்,  குறும்படங்கள், கமர்ஷியல்ஸ், ஜிங்கிள்ஸ்களுக்கு இசையமைக்க  ஆரம்பித்துவிட்டேன்.

‘ஊலலலா... ஊலலலா...’ என்று தொடங்கும் பிரபல மதுபான விளம்பர இசை என்னுடையதுதான். அப்படி சுமார் 400க்கும் மேற்பட்ட விளம்பரப்  படங்களுக்கு இசையமைத்துள்ளேன். இதற்கிடையே ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் இசைக் கல்லூரியில் முதல் பேட்ச்சில்  சேர்ந்தேன். அவருடைய  கல்லூரியில் பிராக்டிக்கலாக சொல்லித் தருவார்கள். இசையில் புரிந்து பண்ணும் விஷயங்களும் உண்டு, புரியாமல் பண்ணும் விஷயங்களும் உண்டு.  அங்கு போனபிறகுதான் எவ்வளவு விஷயங்களை புரியாமல் பண்ணுகிறேன் என்று தெரிந்தது. அது எப்படின்னா, நாம் பிறந்தவுடன் தமிழ் பேசுகிறோம்.  ஆனால் தமிழை இலக்கணத்தோடு பேசுவது வேறு. அப்படித்தான் ரஹ்மான் சாரின் கல்லூரி, இசையைப் புரிந்துகொள்ள உதவியாக இருந்தது.  அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் சாரிடம் பாராட்டு வாங்கியதை மறக்கமுடியாது. அங்கிருந்து வெளியே வந்ததும் ‘ரிதம் ஆஃப் மியூசிக்’ என்ற ஆல்பத்துக்கு  இசையமைத்தேன். அந்த ஆல்பத்துக்கு 2 மில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.”

“சினிமா வாய்ப்பு?”


“காஸ்டியூம் டிசைனர் அசோக்கின் நண்பர் ஒருவர் மூலமாகத்தான் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான சந்தோஷ் சிவன் சாரின் அறிமுகம் கிடைத்தது.  அசோக் இப்போது ‘தர்பார்’ படத்திற்கு காஸ்டியூமராக இருக்கிறார். சந்தோஷ் சார் இயக்கிய ‘இனம்’ தான் என்னுடைய முதல் சினிமா. தொடர்ந்து  ‘ஜில் ஜங் ஜக்’, ‘சிம்பா’ தெலுங்கு உட்பட ஏராளமான பட வாய்ப்புகள் வந்தது.”

“சக இசையமைப்பாளர்களை பாடவைப்பது உங்க ஆசையா?”

“ஆமாம். ‘ஜில் ஜங் ஜக்’ படத்தில் ‘ஷூட் தி குருவி’ பாடலை அனிரூத், ‘ரெட் ரோட்’ பாடலை சந்தோஷ் நாராயணன், ஷான் ரோல்டன் பாடினார்கள்.  ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தில் கங்கை அமரன், ஜி.வி.பிரகாஷ், பிரேம்ஜி, சிம்பு, அருண்ராஜ் உட்பட ஐந்து இசையமைப்பாளர்கள் பாடினார்கள்.   இப்போதுள்ள இசையமைப்பாளர்களுடன் எனக்கு தனிப்பட்ட முறையில் நல்ல கனெக்‌ஷன்  இருக்கிறது. மாமா, மச்சி என்னுமளவுக்கு நெருங்கிப்  பழகுகிறோம்.”

“ஜோதிகாவோடு பணியாற்றிய ‘ஜாக்பாட்’ அனுபவம்?”

“எதிர்பாராத வாய்ப்பு. பிப்ர வரியில் ஒப்பந்தம் நடந்தது. சூர்யா சார் ‘ஜில் ஜங் ஜக்’ படத்தின் பாடல்களைக் கேட்டுவிட்டு இந்த வாய்ப்பைக்  கொடுத்தார். இயக்குநர் கல்யாண் சார் கதையைச் சொன்னதும் பிடித்தது. இந்தப் படத்தில் எனக்கு நடந்த நல்ல விஷயம்என்னவென்றால் ஒரு அவசர  வேலையை எந்தவித குழப்பமும் இல்லாமல் சிறப்பாகப் பண்ண முடியும் என்பதைக் கற்றுக்கொண்டேன். அதற்கான ஆயத்தங்களை முன்பே  செய்திருந்ததால் பதட்டமில்லாமல் வேலை பார்க்க முடிந்தது, குறுகிய கால படைப்பாக இனிமேல் எந்தப் படம் வந்தாலும் அடிச்சி நொறுக்க முடியும்.  சூர்யா படம் பார்த்துவிட்டு செம ஹேப்பி. ஜோதிகா மேடம் சின்னச் சின்ன சவுண்டையெல்லாம் ஞாபகம் வைத்து பாராட்டினார். படத்துக்கு இசை  முகவரியாக இருந்ததாக சொன்னார்.”

“அடுத்து?”

“ஆர்.கே.சுரேஷ், சீமான் நடிக்கும் ‘அமீரா’ பாடல்கள் தனித்துவமாக இருக்கும். டேபிளைத் தட்டும்போது எழும் ஓசையை வைத்து ஒரு பாடலை  கம்போஸ் பண்ணியிருக்கிறேன். பேனா மூடி, சீப்பு என்று கையில் கிடைக்கும் பொருட்களை வைத்து இந்தப் பாடலை உருவாக்கியிருக்கிறேன். இந்தப்  பாடலுக்கான இன்ஸ்பிரேஷன்  சென்னை புறநகர் ரயிலில் கிடைத்தது. பல சமயங்களில் ரயில் பயணம் செய்பவர்கள் கையிலிருக்கும் பொருட்களை  வைத்து தாளம் போடுவதைப் பார்த்துள்ளேன். பாடல்களை வைரமுத்து எழுதி யிருக்கிறார். இதுதவிர யோகிபாபு நடிக்கும் படம், தெலுங்கில்  ‘சாணக்யா’ உட்பட சில படங்கள் கைவசம் உள்ளன.”

“தமிழ்ப் பாடல்களுக்கும் தெலுங்குப் பாடல்களுக்கும் என்ன வித்தியாசம்?”

“தமிழ்ப் பாடல்களில் மண்வாசத்துக்கு முக்கியத்துவம் இருப்பதைப் பார்க்கலாம். தெலுங்கு பாடல்களில் இந்தித் தாக்கம் இருக்கும். எனக்கு இந்தி  தெரியும் என்பதால் தெலுங்கு ஆடியன்ஸின் பல்ஸ் அறிந்து இசையமைக்கத் தெரியும். தமிழில் அப்படி இல்லை. ராஜா சார் மாதிரி மேதைகள்  தமிழுக்குன்னு தனித்துவமான திரை இசையை உருவாக்கி இருக்கிறார்கள். நான்  97ல் சென்னைக்கு வந்த பிறகுதான் தமிழ் கற்றுக் கொண்டேன்.  இங்கு வந்த பிறகு ராஜா சார் இசையைக் கேட்டுதான் தமிழுக்கான இசை இலக்கணத்தைப் புரிந்துகொண்டேன்.”

“ஓர் இசையமைப்பாளர் இசையமைக்கும்போது விஷுவல்சுக்கு ஏத்தமாதிரி பண்ணணுமா அல்லது கதையின் போக்கில் இசையமைக்கணுமா?”

“சினிமாவைப் பொறுத்தவரை இசை எப்போதும் கதையைச் சார்ந்தது. ஒரு மீசைக்காரரை டெர்ரரான ஆளாகவும் இசையில் காட்டலாம். அவரையே  நையாண்டியாகவும் இசையில் மாற்றலாம். சீரியஸா மியூசிக் போட்டு வில்லனாவும் சித்தரிக்கலாம். கதை என்ன சொல்லுது என்று ஃபாலோ பண்ணி  வாசிக்கும் போதுதான் இசையமைப்பாளரின் இசை பொருந்தும்.”

“கம்போஸிங்கிற்காக வெளிநாடு செல்லும் வழக்கம் அதிகரிக்கிறதே?”

“டிராவல் பண்ணா நல்லா ஐடியா வரும் என்பதை சமீபத்தில்தான் புரிந்து கொண்டேன். எனக்கு கல்யாணம் நடந்து ஐந்து வருடமாகிறது. நானும்  மனைவியும் எங்கும் வெளியில் சென்றதில்லை. அதனாலேயே வீட்ல சின்ன சின்னதாக  சண்டை நடக்கும். சமீபத்தில் சாய் பல்லவி நடித்த  தெலுங்குப் படத்துக்காக ஐதராபாத் போனேன். போகும்போது மனைவியையும் அழைத்துச் சென்றேன். மூன்று மாதம் அங்கேயே தங்கும் சூழ்நிலை  ஏற்பட்டது. அந்த மாதிரி புது இடங்களுக்குச் செல்லும்போது சின்னதாக பயம் இருக்கும். வசதியான இடத்தை விட்டுவிட்டு புதுசா வந்திருக்கிறோம்,   ஐடியா வருமா என்ற கவலை மனதுக்குள் வந்து போகும். அந்த பயத்தை முக்கியமாக பார்க்கிறேன். அது இருந்தால்தான் ரெஸ்பான்ஸிபிலிட்டியுடன்  வேலை செய்ய முடியும். அதுக்காக டிராவல் போய் டியூன் போடணும் என்ற அவசியம் இல்லை. பொதுவாக நான் என்னுடைய ஸ்டூடியோ  பால்கனியில் ஒரு டீயோடு உட்கார்ந்து கொஞ்சம் வேடிக்கை பார்த்தாலே புத்துணர்ச்சி கிடைத்துவிடும்.”

“எந்த மாதிரி படங்களுக்கு இசையமைப்பது எளிது?”

“சீரியஸ் படம்தான் ஈஸி. ஏன்னா, திரைக்கதை க்ளியராக இருக்கும். காமெடி படங்களுக்கு வாசிக்கும்போது ஜாலியா இருக்கும். ஆனால், வேலை  அதிகம். ஏன்னா சும்மா வெல்லாம் சுற்றிக் கொடுக்க முடியாது. ‘காமெடி இஸ் சீரியஸ் பிசினஸ்’ என்று சொல்வார்கள். அதை நாம் சீரியஸாக எடுத்து  பண்ணித்தான் ஆகவேண்டும். காமெடி படங்களில் நிறைய வித்தியாசங்களைக் காண்பிக்க வேண்டும். நிறைய பேர்  டொய்ன்... டொய்ன்... என்று  எஃபெக்ட் கொடுப்பார்கள். அப்படி பண்ணக் கூடாது. மியூசிக்கலாக இருக்கணும். மொத்தத்தில் இரண்டு ஜானரும் பேர் வாங்கித் தரும். அதே சமயம்  நாம் தேர்வு செய்யும் கதையும் பேர் வாங்கித் தரும். காமெடி படத்தில் லாஜிக்,  எமோஷன் இருக்காது. அந்த மாதிரி கதைகளுக்கு நல்லா  வாசிக்கும்போது பேர் கிடைக்கும். படத்துக்கும் மதிப்பு கூடும்.”

“இசையமைப்பாளர்கள் அடுத்தடுத்து ஹீரோ ஆகுறாங்க. நீங்க எப்போ?”

“நடிக்கிற ஐடியாவே சுத்தமா இல்லை. ‘ஜாக்பாட்’ படத்தில் நடிக்க இயக்குநர் கல்யாண் அழைத்தார். மறுத்துவிட்டேன். என் கவனம் முழுவதும்  இசையில் மட்டுமே.”

“உங்களுக்கு பிடித்த இசையமைப்பாளர்?”

“ரஞ்சித் பரோட். பிரபுதேவா, அப்பாஸ் நடித்த ‘விஐபி’ படத்துலே பிரமாதமான இசை கொடுத்திருப்பார். அதன் பாடல்கள் வெளிவந்தபோது எல்லோரும்  ஏ.ஆர்.ரஹ்மான் என்றே நினைத்தார்கள். அப்போ ஏ.ஆர்.ரகுமான் திரையிசைத் துறையில் பீக்கில் இருந்தார். அவருடைய இசைக்கு இணையாக ‘விஐபி’  பேசப்பட்டது. டெக்னாலஜியில் அப்டேட்டாக இருந்தால் உயர்தர இசை கொடுக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் ரஞ்சித்.”

- சுரேஷ்ராஜா