பசங்கசிவக்குமார்

டைட்டில்ஸ் டாக் 126


எனக்கு சொந்த ஊர் கும்பகோணம் பக்கத்திலுள்ள குடவாசல். அப்பா ஆறுமுகம். டைலர் கடை வைத்திருந்தார். சிறந்த மேடைப் பேச்சாளர் கூட.  எங்கள் வீட்டின் அருகில் உள்ள தொடக்கப் பள்ளியில் படித்தேன். பிறகு எங்க ஊர் எல்லையில் உள்ள பள்ளியில் மேல்நிலை படித்தேன். தஞ்சாவூரில்  பி.எஸ்ஸி. விலங்கியல் படித்தேன். பள்ளி நாட்களில் நான் பண்ணாத சேட்டைகள் கிடையாது. அது பசங்களுக்கே உரித்தான குணம் என்று  சொல்லலாம். ஆறு, குளம் என்று ஒரு இடம் விடாமல் நானும் நண்பர்களும் ரவுண்ட் அடிப்போம். மாந்தோப்பில் மாங்காய் பறித்து விற்பது,  தென்னந்தோப்பில் தேங்காய் பறித்து விற்பது என்று ரகளை பண்ணுவோம்.

ஒருமுறை நண்பர்களுடன் சேர்ந்து மீன் பிடிக்கும்போது பரீட்சையை மறந்து கோட்டை விட்டிருக்கிறேன். இரண்டு நாள் கழித்து விஷயம் வீட்டுக்கு  தெரிந்ததும் டின் கட்டினார்கள்.பருவ வயதில் பசங்களுக்கு பெண்கள் மீது இனக்கவர்ச்சி வருவது இயல்பான விஷயம். அதில் நான் மட்டும் விதிவிலக்கா என்ன? அப்போது நவீன தொலைத்தொடர்பு வசதிகள் எதுவும் இல்லை. ப்ளஸ் டூ படிக்கும் போது எங்கள் உறவுப் பெண் ஒருவருக்கு  நாகரீகமாக காதல் கடிதம் கொடுத்தேன். மறுநாள் அந்தப் பெண்ணின் அம்மா எங்க வீட்டுக்கு வந்து அப்பாவிடம் விஷயத்தைப் போட்டு உடைத்து  விட்டார். எங்கள் வீட்டில் லவ் மேட்டருக்கு எதிர்ப்பு இல்லை என்றாலும் பெண் தரப்பிலிருந்து சிக்னல் வீக்காக இருந்ததால் அது நடக்கவில்லை.  அதுவரை நான் யாரிடமும் புரபோஸ் பண்ணியதில்லை. முதல் காதல் தோல்வி கொஞ்ச நாளுக்கு வலியைக் கொடுத்தது.

என்னுடைய வாழ்க்கையில் நண்பர்களுக்கு என்று தனி இடம் உண்டு. விடுமுறை நாட்களில் நானும் நண்பர்களும்  சாயங்காலம் வீட்டைவிட்டு  கிளம்பினால் சினிமாவுக்கு போய்விட்டு நடுராத்திரிதான் வீட்டுக்குத் திரும்பு வோம்.டிகிரி முடித்தவுடன் தஞ்சாவூரில் ஆயில் அண்ட்  நேச்சுரல் கேஸ்  கமிஷன் நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவில் தற்காலிக வேலை கிடைத்தது. அந்த வேலை அப்பாவின் நண்பர் மூலமாகக் கிடைத்தது. அங்கு  சூப்பர்வைசராக வேலை பார்த்தேன். போலந்து நாட்டைச் சேர்ந்த கம்பெனி எண்ணெய் வளம் இருக்கிறதா என்பதை ஆராய்ச்சி செய்தார்கள். ஆய்வு  முடிந்ததும் அந்தக் கம்பெனி ஆந்திராவுக்கு ஷிப்ட்டானது. அந்த ஜாப்பை கான்டிராக்ட் எடுத்த முதலாளி என்னை ஆந்திராவுக்கு அழைத்தார். வர  விருப்பம் இல்லை என்று மறுத்துவிட்டேன். ஆனால் அந்த முதலாளி சென்னை வந்தால் தன்னைச் சந்திக்கும்படி சொன்னார்.

அந்தச் சமயத்தில் என்னுடைய நண்பர் வெங்கடேஷ் இயக்கிய ‘மன்னவா’ என்ற படம் வெளியாகியிருந்தது. நண்பனைப் போல் எனக்கும் சினிமாவில்  சேர வேண்டும் என்ற ஆசை வந்தது. வீட்டில் சினிமா என்றால் அனுமதி கிடைக்காது என்பதால் எண்ணெய் கம்பெனி வேலைக்காக சென்னை  போகிறேன் என்று சொல்லிவிட்டு மனதுக்குள் சினிமா கனவுகளுடன் சென்னை வந்தேன்.சென்னையில் என் நண்பர்  வெங்கடேஷ், பாக்யராஜ் சார்  அலுவலகத்தில் அக்கவுண்டன்ட்டாக வேலை பார்த்துவிட்டு பிறகு இயக்குநராகி ‘மன்னவா’, ‘நீ வேணுமடா செல்லம்’ ஆகிய இரண்டு படங்களை  டைரக்‌ஷன் பண்ணியிருந்தார். ஒரு நாள் நண்பர் வெங்கடேஷைச் சந்திக்க பாக்யராஜ் சார் ஆபீஸுக்கு போனேன். நண்பர் மூலமாக பாக்யராஜ் சார்  அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தேன். படிக்கும் காலத்தில் நான் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வாங்கியிருக்கிறேன். அப்பா பேச்சாளர் என்பதால்  எனக்கும் அந்த ஆற்றல் இருந்திருக்கலாம். நான் வாங்கிய பரிசுகள், சான்றிதழ்களை பாக்யராஜ் சாரிடம் காண்பித்தபோது ‘இதெல்லாம் உங்கிட்டேயே  இருக்கட்டும். நீ டேலண்ட்’ என்று சொல்லிவிட்டார். ‘வேலையைப் பார்’ என்றார்.

பாக்யராஜ் சாரிடம் உதவி இயக்குநராக சேரவேண்டும் என்பதுதான் என்னுடைய திட்டம். ஆனால் நான் காத்திருந்தது தான்  மிச்சம். ஏன்னா, எனக்குப்  பின்னாடி வந்தவர்கள் உதவி இயக்குநராக பாக்யராஜ் சார் படங்களில் பணிபுரிய ஆரம்பித்துவிட்டார்கள். அப்போது பாக்யராஜ் சார் நடித்த ‘ஞானப்  பழம்’  படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க அழைப்பு வந்தது. ‘என்னை உதவியாளராக சேர்த்துக் கொண்டால்தான் நடிப்பேன்’ என்றேன். பிறகு  உதவியாளராக சேர்த்துக் கொண்டார். பிறகு பாக்யராஜ் சார் நடத்திய பத்திரிகையில் வேலை செய்தேன். ‘சுந்தர காண்டம்’ படத்தில் நாயகியையும்  என்னையும் வைத்து டெஸ்ட் ஷூட் எடுத்தார்கள். இதற்கிடையே ஒரு பிரபல நாளிதழில் சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன் சார் எழுதிய  தொடருக்கு பொறுப்பாளராக இருந்தேன். அப்படி இரண்டு மூணு வருடங்கள் சாருடன் இருந்திருப்பேன். அந்தத் தொடருக்கு நல்ல வரவேற்பு  கிடைத்தது. என் வேலை கார்த்தி கேயன் சாருக்கு பிடித்திருந்தது. அப்போது சினிமாவே வேண்டாம் என்ற முடிவில் இருந்தேன். மனைவியுடன்  டெல்லியில் சில காலம் வசித்தேன். தொடர் முடிந்ததும் கார்த்திகேயன் சாரிடம் பர்சனல் உதவியாளராக வேலை பார்த்தேன்.

ஒரு கட்டத்தில் மீண்டும் சினிமாவுக்கு போகலாம் என்ற முடிவுடன் சென்னைக்கு வந்தேன். இயக்குநர் லிங்குசாமி எங்க ஊர்க்காரர் என்பதால்  அவருடன் பரிச்சயம் இருந்தது. அப்போது அஜித் நடித்த ‘ஜி’படத்தின் டிஸ்கஷன் நடந்துகொண்டிருந்தது. ஆனால் லிங்குவுடன் சேர்ந்து வேலை  செய்யுமளவுக்கு சூழ்நிலை செட்டாகவில்லை. லிங்கு சாமியிடம் வேறு யாரிடமாவது சேர்த்துவிடச் சொன்னேன். அவரும் இயக்குநர் பாலாஜி  சக்திவேல் சாரிடம் அனுப்பி வைத்தார். அவரிடம் ‘காதல்’, கல்லூரி’, ‘வழக்கு எண் 18/9 ’ போன்ற படங்களில் வேலை செய்தேன்.பாலாஜி சாரிடம்  வேலை பார்த்த அனுபவம் அலாதியானது. ‘காதல்’ படத்தில் நாயகிக்காக பெரிய தேடுதல் வேட்டை நடந்தது. ‘பத்தாம் வகுப்பு படிக்கும் பெண்  வேண்டும். நீங்க ஸ்கூல் பக்கமாய் போய் நம்முடைய படத்துக்கு ஏற்ற மாதிரி பெண் கிடைக்கிறாரா என்று தேடுங்கள்’ என்று இயக்குநர்  சொல்லிவிட்டார். நானும் ஸ்கூல் ஸ்கூலாகப் போய் தேடுதல் வேட்டை நடத்தினேன். அப்போது ஈவ் டீசிங் சட்டம் கடுமையாக அமுலில் இருந்தது.  ஸ்கூல் முயற்சி எதுவும் ஒர்க்கவுட்டாகவில்லை.

பிறகு அழகு நிலையங்களுக்கு படை எடுக்கலாம் என்று ஐடியா போட்டேன். அங்கு புதுமுக நடிகைகள், நடிகைகளின் வாரிசுகள் யாராவது வந்தால்  அப்படியே அவர்களின் விருப்பத்தைக் கேட்கலாம் என்று முடிவு பண்ணி அங்கு போய் நிற்க ஆரம்பித்தேன். அது கொஞ்சம் ஒர்க் அவுட்டானது.  வடபழனியில்  பிரபல மருத்துவமனை அருகில் ஒரு பார்லர் இருந்தது. அங்கேயும் அடிக்கடி விசிட் அடிப்பேன். அங்கிருந்த பணிப்பெண், என்னுடைய  முதலாளியம்மாவின் மகள் சினிமாவில் நடிக்க ஆர்வம் உள்ளவர் என்று சொன்னார். உடனே பார்லர் ஓனரைச் சந்திக்க அவருடைய வீட்டுக்குப்  போனேன். அன்று நான் சந்தித்த அந்தப் பெண்தான் பிறகு ‘காதல்’ சந்தியாவாக அறியப்பட்டார். ஆக்சுவலாக நாயகி கேரக்டருக்கு ‘அம்முவாகிய நான்’  பாரதியை செலக்ட் பண்ணிவைத்திருந்தார் இயக்குநர். சந்தியாவுக்கு டெஸ்ட் எடுத்தபோது அவருடைய  பெர்ஃபாமன்ஸ் சூப்பராக இருந்ததால்  சந்தியாவை ஃபைனல் பண்ணினார் இயக்குநர்.

அடுத்து ‘கல்லூரி’ படம். அந்தப் படத்துக்காக ‘கை இல்லாத ஆள் வேண்டும். தேடுங்கள்’ என்ற கட்டளை வந்தது. உத்தரவு என்று சொல்லிவிட்டு  மருத்துவமனை வாசல்களில் நிற்க ஆரம்பித்தேன். யாரும் சிக்கவில்லை. கடைசியில் ஊனமுற்றோர் சங்கம் மூலம் சிலருடைய புகைப் படங்களை  வாங்கி டைரக்டர் சாருக்கு காண்பித்தேன். அப்படி செலக்ட்டானவர்களில் ஒருவருக்கு படத்தில் நல்ல ரோல் கிடைத்தது. அந்தப் படத்தில்  ‘நாடோடிகள்’  பரணியை நான்தான் நடிக்க வைத்தேன். பரணி உதவி இயக்குநர் வாய்ப்பு தேடி வந்தார். ‘வழக்கு என் 18/9’ படத்தில் வேலை  செய்யும்போதுதான் ‘பசங்க’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. நானும் பாண்டிராஜும் ஒரே காலகட்டத்தில் பாக்யராஜ் சார் ஆபீஸில் வேலை  பார்த்துள்ளோம். ‘ஸ்டில்ஸ்’ விஜி, ‘மூடர் கூடம்’ நவீன் ஆகிய இருவரும்தான் ‘பசங்க’ படத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சஜஷன்   சொல்லியிருக்கிறார்கள். பாண்டிராஜிடம் என்னுடைய  சூழ்நிலையைச் சொன்னேன். உடனே பாண்டிராஜ்,  இயக்குநர் பாலாஜி சாரிடம் அனுமதி  கேட்டார். 10 நாள் படப்பிடிப்பு என்று போனேன்.

ஆனால் 40 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன்.  ‘பசங்க’ பெரிய ஹிட்டடித்தது. அந்தப் படத்துக்குப் பிறகு 30க்கும் மேற்பட்ட படங்களில்  நடித்துவிட்டேன். ‘பசங்க: படத்துக்கு முன்பு நான் ‘காதல்’ படத்தில் சந்தியாவின் கணவனாகவும், ‘கல்லூரி’ படத்தில் பேராசிரியராகவும்  நடித்திருக்கிறேன். இந்தப் பட வாய்ப்புகள் எல்லாம் உதவி மற்றும் அசோசியேட்டாக வேலை செய்த போது கிடைத்த வாய்ப்புகள். ஒரு நடிகனாகக்  கலந்துகொண்டு நடித்த படம் ‘பசங்க’. இதற்கிடையே பாலா சாரிடம் ‘தாரை தப்பட்டை’, செழியனின் ‘டுலெட்’  படங்களில் துணை இயக்குநராக  வேலை பார்த்துள்ளேன்.சினிமாவில் சில விஷயங்கள் நடக்கிற மாதிரி இருக்கும். ஆனால் நடக்காது. ஆனால் நடக்காது என்று நினைக்கும் விஷயம்  நடந்துவிடும். அப்படி என்னுடைய கணக்குப்படி நடந்திருந்தால் இந்நேரம் நான் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கியிருப்பேன்.

‘வழக்கு எண் 18/9’ படத்தில் முதலில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்தார். சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை. அப்போதிலிருந்து சிவாவுடன்  நல்ல பழக்கம் இருந்தது. சிவாவுக்காக கதையும் ரெடி பண்ணிவைத்திருந்தேன். அந்தச் சமயத்தில் என்னுடைய அப்பாவின் மரணம் நிகழ்ந்ததால்  என்னால் சிவாவை ஃபாலோ பண்ணமுடியவில்லை. எல்லாம் முடிந்து சிவாவை தொடர்பு கொள்ள நினைத்தபோது சிவாவின் வளர்ச்சி ராக்கெட்  வேகத்தில் இருந்தது. எனக்கு ஒரு மகள், மகன் இருக்கிறார்கள். மகள் கல்லூரி படிக்கிறார். மகன் 8ம் வகுப்பு. இவர்கள்தான் என்னுடைய  வாழ்க்கையில் கிடைத்த பரிசு. குடும்பத்துக்கு நடிப்பு மூலம் வரும் வருமானம்தான் சோறு போடுகிறது என்பதால் தொடர்ந்து நடித்து வருகிறேன்.  ஆனால் படம் பண்ண வேண்டும் என்ற லட்சியம் மட்டும் நெஞ்சை விட்டு நீங்காமல் உள்ளது. ‘பசங்க’ சிவக்குமாரை இயக்குநர் சிவக்குமாராக  பார்க்கணும் என்பதுதான் என்னுடைய அப்பாவின் ஆசை. என்னுடைய லட்சியத்துக்கு உறுதுணையாக என் மனைவி இருக்கிறார். நான் நம்பி வந்த  சினிமா என்னைக் கைவிடவில்லை. நம்பிக்கையுடன் போராடினால் நீங்களும் ஜெயிக்கலாம்.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)