கடலில் நடக்கும் கதை!‘துருவங்கள் 16’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரகுமான் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘ஆபரேஷன் அரபைமா’. இந்தப்  படத்தை அறிமுக இயக்குநர் ப்ராஷ் இயக்குகிறார். இவர் பிரபல இயக்குநர்கள் டி.கே.ராஜிவ்குமார், ‘அரண்’ மேஜர் ரவி ஆகியோரிடம் சினிமா  பயின்றவர்.தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழிப் படங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்ட ப்ராஷ், இந்திய ராணுவத்தில்  அட்வெஞ்சர் பைலட்டாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தைப்பற்றி இயக்குநரிடம் கேட்டோம்...

‘‘இந்தப் படத்தில் நேவியில் நடக்கும் உண்மைச் சம்பவங்களை  சொல்லியுள்ளேன். ‘அரபைமா’ என்பது ஃப்ரெஷ் வாட்டரில் இருக்கும் ஒருவகை மீன்.  இவ்வகை மீன்கள் அமேசான் நதியில் அதிகமாகக் காணப்படும். 8 அடி நீளமும் 4 அடி அகலமும் இருக்கும். அதன் கேரக்டர் கொஞ்சம்   மூர்க்கத்தனமானது. அந்த மீனிடம் யாராவது வாலாட்டினால் அவர்களுக்கு தன்ணியிலே கண்டம் நிச்சயம். என்னுடைய ஹீரோவும் அப்படிப்பட்ட  கேரக்டர் என்பதால் படத்துக்கு ‘ஆபரேஷன் அரபைமா’ என்று பெயர் வைத்தேன்.2012ல் ஆஸ்திரேலியா, தாய்லாந்து,  இந்தோனேஷியா, மலேஷியா  ஆகிய நாடுகளில் பெண் கடத்தல், போதை மருந்து கடத்தலுக்கு எதிராக ஒரு ஆபரேஷன் நடத்தினார்கள். அந்த ஆபரேஷனின் பெயர்தான் ‘அரபைமா’.  பொதுவாக  ஒரே பெயரில் டிபன்ஸ் ஆபரேஷன் பண்ணமாட்டார்கள். ஒரே பெயரில் நடத்திய ஆபரேஷனில் அரபைமா ஆபரேஷனும் அடங்கும்.

இந்தப் படத்துக்கு கதை நாயகனாக ரகுமான் கிடைத்தது பெரிய பலம். நான் கற்பனை செய்து வைத்திருந்த கதாபாத்திரத்தை அச்சு அசலாக கண் முன்  கொண்டுவந்து நிறுத்தினார். ரகுமான் சார் நேவல் ஆபீஸர் கேரக்டர் பண்ணியிருக்கிறார். கார் கவிழ்ந்து விழும் காட்சியில் டூப் இல்லாமல் நடித்தார்.  அபிநயா நியூஸ் ரீடராக வர்றார். மிக அழகாக நடித்துக் கொடுத்தார். ராகேஷ் பிரம்மானந்தம் இசையமைத்துள்ளார். ஐந்து கேமராமேன்கள் வேலை  பார்த்துள்ளார்கள். அதில் பெரும் பகுதியை ஃபீனிக்ஸ் உதயன் பன்ணியிருக்கிறார். அந்தமான், சென்னை, திருவனந்தபுரம் உட்பட இந்தியாவில் உள்ள  முக்கிய துறைமுகங்களில் படம்பிடித்துள்ளோம். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் டைம் அண்ட் டைடு ப்ரேம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப்  படத்தில் கடலில் நடக்கும் ஆபரேஷனைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். கதை ஒரே நாளில் நடப்பதால் விறுவிறுப்பாக இருக்கும்’’ என்றார்.

- எஸ்