ரிஸ்க்குன்னா நம்பளுக்கு ரஸ்க் சாப்புடுற மாதிரி!பிஜிலி அலப்பறை

தமிழ் சமூக வலைத்தளங்களில் பிஜிலி ரமேஷ் ஒரு சூப்பர் ஸ்டார். யூட்யூப் மூலமாக வைரல் ஆனவர். அடுத்து டிவி நிகழ்ச்சிகளில் கலக்கியவர்,  இப்போது சினிமாவுக்கு படையெடுத்திருக்கிறார். ‘நட்பே துணை’, ‘ஏ 1’ ஆகிய படங்களில் தலைகாட்டி இருக்கிறார். இவரது முகம் தெரிந்ததுமே  ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்கிறார்கள். சமூகவலைத்தளங்களில் ‘பிஜிலி ரமேஷ் ஃபேன்ஸ்’, ‘பிஜிலி ரமேஷ் ஆர்மி’ என ஒரு பெரும்  கூட்டத்தை தன் பின்னே திரட்டி வைத்திருக்கிறார் இந்த மனிதர். ரஜினியின் அதிதீவிர ரசிகரான இவருடைய ப்ராங் வீடியோ சமூக  வலைத்தளங்களில் வெளியானபோது கோலிவுட் இயக்குநர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இவர் வசிக்கும் சென்னை எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில்  ரமேஷ் வீடு எங்கு இருக்கிறது என்று கேட்டால் நாலு பேருக்குத்தான் தெரிகிறது. ‘பிஜிலி’ வீடு எங்கிருக்கிறது என்றால் சின்னக் குழந்தைகூட அட்ரஸ்  சொல்கிறது. பக்திப் பழமாக ‘பளிச்’ உடையில் நம்முன் ஆஜரான ‘பிஜிலி’ ரமேஷிடம் பேசினோம்.

“யார் சார் நீங்க? இவ்வளவு நாளா பம்பாயில் என்ன செய்து கிட்டிருந்தீங்க?”

“என்ன தலைவா. எனக்கே ‘பாட்ஷா’ டயலாக்கா? அந்தப் படம் வந்தப்போ எங்க பகுதி உதயம் தியேட்டருலே என் தலைவன் சூப்பர்ஸ்டாரை  தரிசிக்கிறதுக்காக எத்தனை வாட்டி போயிருப்பேன்னு கணக்கு வழக்கே கிடையாது. நான் பிறந்தது, வளர்ந்தது இதே எம்.ஜி.ஆர்.நகர்தான். அப்பா  தவறிட்டார். அம்மா இருக்கிறாங்க. இரண்டு அண்ணன்கள், ஒரு தம்பி, ஒரு அக்கா என்று என்னுடையது பெரிய குடும்பம். மனைவி இல்லத்தரசி.  எனக்கு ஒரே ஒரு பையன். ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். நான் பத்தாம் வகுப்பு வரை படிச்சிருக்கிறேன். ப்ளஸ் ஒன்ல வெக்கேஷன் குரூப் எடுத்தேன்.  பத்தாம் வகுப்பில் என்னுடன் படித்த சக நண்பர்கள் ஃபெயிலாகிவிட்டதால் தனியாகப் படிக்க எனக்கு விருப்பமில்லை. படிக்கும் போது எனக்கு பெரிய  ஆசை இருந்ததில்லை. என்னுடைய விருப்பத்துக்கு அப்பா முழுச் சுதந்திரம் கொடுத்தார். எங்க அண்ணன்களுக்குத்தான் நான் ரொம்ப பயப்படுவேன்.  ஒரு கட்டத்தில் படிப்புக்கு குட்பை சொல்லிட்டு எங்க ஏரியாவில் இருக்கும் ஒரு  டிவி விற்பனைக் கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்த  வேலைக்குப் பிறகு  ஃபால்ஸ் சீலிங் வேலைக்குப் போனேன். சினிமாவில் நடிக்க வரும்வரை எனக்கு பிழைப்பே அதுதான். ஒரு நாளைக்கு 550 ரூபாய்  கூலி கிடைக்கும். ஃபைட் மாஸ்டர் கனல்கண்ணன் வீடு, கிண்டியில் உள்ள பெரிய ஐ.டி.கம்பெனி என்று ஏராளமான இடங்களில் ஃபால்ஸ் சீலிங்  பண்ணியிருக்கிறேன். எல்லாமே சப்-கான்டிராக்ட் அடிப்படையில் கிடைத்தது.”

“அப்பவே சினிமாவில் நடிக்கிற எண்ணம் இருந்ததா?”

“சத்தியமா இல்லை. சூப்பர் ஸ்டார் படத்தைப் பார்க்கிற வெறி மட்டும்தான் இருந்தது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஐடியாவெல்லாம் எனக்கு  இல்லை. அது ஆண்டவனா கொடுத்தது. நான் சினிமாவுக்கு வந்தது தற்செயலாக நடந்த விஷயம். சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ள  ‘ப்ளாக்‌ஷிப்’ என்ற யூடியூப் சேனல் எனக்கு தெரியாமல் என்னை பிராங் பண்ணி வீடியோ எடுத்தார்கள். அந்த வீடியோ பெரியளவில் வைரலானதால்  சமூக வலைத் தளங்களில் பிரபலமானேன். அப்படிதான் எனக்கு என்று ஃபாலோயர்ஸ் கிடைத்தார்கள்.சமூக வலைத்தளத்தில் வந்த என்னுடைய  வீடியோவைப் பார்த்துவிட்டுத்தான் ‘நட்பே துணை’ படத்தில் நாயகன் ஹிப் ஹாப் ஆதியின் மாமா கேரக்டர் கொடுத்தார்கள். இயக்குநர் பார்த்திபன்  தேசிங்கு என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு படம் முழுவதும் வருகிற மாதிரி என்னுடைய கேரக்டரை டெவலப் பண்ணினார்.  ”

“அந்தப் படத்துலே நல்லா நடிச்சிருந்தீங்களே! நடிப்பை எங்கே கத்துக்கிட்டீங்க?”

“எனக்கு நடிப்பு சுத்தமாகத் தெரியாது. ‘நட்பே துணை’ இயக்குநர் பார்த்திபன் சார் என்ன சொன்னாரோ அதை அப்படியே பண்ணினேன். முதல் நாள்  கொஞ்சம் கூச்சமாகவும், பயமாகவும் இருந்தது. கேமராவைப் பார்த்தவுடன் கை, கால் ஆட்டம் கண்டது. ஆனால் கேமராமேன் அரவிந்தசிங் என்னை  கூல் பண்ணி இயல்பாக நடிக்கவைத்தார். ஆனால் நான் இரண்டாவதாக நடித்த ‘எல்.கே.ஜி’ படம் முதலில் வெளியானது. அதன்பிறகு ‘ஆடை’, ‘ஏ  1’  உட்பட சில படங்களில் நடித்தேன்.”

“சந்தானம் என்ன சொல்லுறார்? கலாய்ச்சித் தள்ளி இருப்பாரே?”

“அவரு நம்மளை மாதிரி ஜாலி பார்ட்டிதான். சோஷியல் டைப். செட்ல சந்தானம் சார் இருந்தாலே அவ்வளவு குஷியா இருக்கும். முதன்முறையாக  சந்தானம் சாரை சந்தித்தபோது ‘முதல்ல கையைக் கொடு’ என்றார். அவ்வளவு பெரிய ஹீரோ சகஜமாகப் பேச ஆரம்பித்ததும் எனக்கு கையெல்லாம்  உதற ஆரம்பித்தது. பிறகு நாயகி தாரா அலிசா பெரியிடம் ‘இவர் ஃபேமஸான ஆள்’ என்று அறிமுகம் செய்து வைத்தார். நான் வெட்கப்பட்டுக்கிட்டே  அந்தப் பொண்ணுகிட்டே கை கொடுத்தேன்.”

“இப்போ ‘கோமாளி’யிலும் நடிச்சிருக்கீங்க...”

“உண்மையைச் சொல்வதாக இருந்தால் அந்தப் படத்தில் நடித்தது செம அனுபவம். இயக்குநர் ப்ரதீப் ரங்கநாதன் ரொம்ப சின்ன வயசுக்காரர். ஆனால்  திறமையில் பெரிய மனிதர். எனக்கு கே.எஸ்.ரவிக்குமார் சார் வீட்டு வாட்ச்மேன் ரோல். இந்தப் படமும் எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தரும்.”

“அடுத்து என்னென்ன படம் பண்ணுறீங்க?”

“சசி சார் இயக்கத்தில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’. ஜி.வி.பிரகாஷ், சித்தார்த் ஹீரோ. எனக்கு குடிகாரன் வேடம். சசி சார் நடிகர்களிடம் வேலை  வாங்கும்விதம் சூப்பராக இருக்கும். படப்பிடிப்பில் தன்னை ஒரு இயக்குநராக வெளிப்படுத்தாமல் ரொம்ப சாதாரண மனிதராக நடந்துகொள்வார்.  காட்சிகளைச் சொல்லும்போது குழந்தைகளுக்கு சொல்வது போல் நல்லா புரியும்படி பொறுமையாக சொல்லிக்கொடுப்பார். மனு பார்த்திபன் தயாரித்து  இயக்கி ஹீரோவாக நடிக்கும் ‘டைம் இல்ல’. இதில் ரஜினி சார்   ஸ்டைலில் நடித்திருக்கிறேன். ‘மரிஜுவானா’ என்ற படம்.
‘அட்டு’ ரிஷி ஹீரோவாக  நடிக்கும் படம். இதுல ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறேன். ‘ஜாம்பி’ படத்தில் யாஷிகா, சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ள  கோபி,  சுதாகர், கார்த்திக் ஆகியோருடன் நடித்துள்ளேன். இந்தப் படம் எனக்கு மிகப் பெரிய திருப்புமுனையைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.  இயக்குநர் புவன் நல்லான் சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏன்னா, நிறைய இடங்களில் என்னால் டயலாக் பேசமுடியவில்லை. இயக்குநர்தான்  உடன் பிறந்த சகோதரரைப் போல் பொறுமையாகச் சொல்லிக்கொடுத்தார். படத்துல எனக்கு காமெடி ரோல். எனக்கான ஸ்கோப் அதிகமாக இருக்கும்.”

“நீங்க ரிஸ்க் எடுத்து நடித்த படங்கள்?

“ரிஸ்க்குன்னா நம்பளுக்கு ரஸ்க் சாப்புடுற மாதிரி. ஆனா, நான் ரிஸ்க் எடுத்திருக்கிறேனா என்பதை ரசிகர்கள்தான் சொல்லணும். எனக்குத் தெரிந்து  ‘நட்பே துணை’ படத்திலும், ‘ஜாம்பி’ படத்திலும் கஷ்டப்பட்டு நடித்தேன் என்று சொல்லலாம். ‘ஜாம்பி’யில் டோட்டல் பாடியில் அடி வாங்காத இடமே  இல்லை.”

 “அது என்ன சார் ‘பிஜிலி’ன்னு குஜாலா ஒரு பட்டப் பேரு?”

“அது ஒரு வரலாறு. இருபத்தஞ்சி வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயம். நானும் என்னுடைய நண்பர்களும் ஒவ்வொரு வருடமும் எங்கள்  தெருவில் விநாயகர் சிலை வைப்போம். அப்படி ஒரு முறை விநாயகர் சிலை  எடுக்க புறப்பட்டோம். திரும்பி வரும்போது என்னுடைய நண்பன்  பிரேம் சும்மா யதார்த்தமா ‘பிஜிலி சார்பாக 40 ஆட்டோக்கள் வருகிறது’ன்னு மைக்லே அலப்பறை கொடுத்தார். அவன் என்னை கலாய்க்க யதார்த்தமா  சொன்னது பதார்த்தமாகி அன்னிலேருந்து ஏரியாவே என்னை பிஜிலின்னுதான் கூப்பிடுது.”

“ரஜினியின் தீவிர ரசிகரான நீங்க அவரை மீட் பண்ணியிருக்கீங்களா?”

“ரசிகன் என்கிற லெவலையெல்லாம் தாண்டியாச்சி. தலைவர்னா நான் தற்கொலைப் படையா மாறுவேன். அவரை எந்தளவுக்கு பிடிக்கும்னு கேட்டால்  அதற்கு அளவே இல்லை என்று சொல்வேன். தலைவர் படத்தை ஒண்ணுவிடாமல் பார்த்திருக்கிறேன். ‘மூன்றுமுகம்’, ‘பாட்ஷா’ படங்களை எத்தனை  தடவை பார்த்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. தலைவர் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகிவிட்டார் என்றால் அந்தப் படத்தில் யார் ஹீரோயின்,  யார் வில்லன், யார் காமெடி பண்றார் என்பது போன்ற தகவல்களை ஒரு பேப்பர் விடாமல் படித்து அப்டேட்ல இருப்பேன்.

நான் ஆரம்பத்தில் வேலை செய்த நிறுவனத்தின் முதலாளி லக்‌ஷ்மண். அந்த அண்ணன் எங்க ஏரியா ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி. அந்த  அண்ணனுடன் சேர்ந்து என்னுடைய பன்னிரெண்டாவது வயதில் தலைவரை முதன்முதலா மீட் பண்ணினேன். அப்போது நான் ஏழாம் வகுப்பு. காக்கி  டவுசர், வெள்ளை சட்டையுடன் தலைவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இப்போதும் பத்திரமா வெச்சிருக்கேன். அப்போ தலைவர்  காலில் விழுந்தேன். என்னைத் தடுத்த தலைவர் ஒரு வாசகம் சொன்னார். அது திருவாசகம்.‘பெத்த தாய், தகப்பன் காலில் மட்டும்தான் விழவேண்டும்.  மத்தவங்க காலில் விழக்கூடாது’ன்னு அவர் சொன்னது இப்போ கூட அசரீரி மாதிரி கேட்டுக்கிட்டே இருக்கு. அதன்பிறகு பலதடவை தலைவரை மீட்  பண்ணியிருக்கிறேன்.”

“லட்சியம்னு ஏதாவது?”


“சூப்பர் ஸ்டார் நடிக்கிற படத்துலே ஒரு சீன்லேயாவது தலையைக் காட்டணும். ஒரு ரசிகனுக்கு அதைவிட வேறு என்ன எதிர்பார்ப்பு இருக்கும். அப்படி  ஒண்ணு நடந்தபிறகு என் உயிர் என்னைவிட்டுப் பிரிந்தாலும் கவலையில்லை. உயிர் பிரியறதுக்கு முன்னாடி பர்சனலா ஒரு லட்சியம், ஆசை  இருக்கு. சொந்த வீடு வாங்கி என் தாயை அதில் உட்காரவெச்சு அழகு பார்க்கணும்.”

“நீங்க உங்களை ரொம்பவே விளம்பரப்படுத்திக்கிறதா சொல்லுறாங்களே?”

“நானென்ன காசு, பணம் கொடுத்து என்னை போஸ்டர் ஒட்டி பிரபலப்படுத்திக்கிட்டேனா? அந்த வேலையை நான் செய்யவில்லை. அதற்கு விதை  போட்டவர்கள் சித்து, நிஷாந்த் என்ற இரண்டு தீயசக்தி இளைஞர்கள். என்னை கலாய்க்கிறதா நெனைச்சு உலகம் முழுக்க என்னைப் பிரபலப்படுத்திய  என் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தம்பிகள். அவர்கள் இல்லை என்றால் இந்த ‘பிஜிலி’ இல்லை. இதை எந்த நிலையிலும் அடிச்சுச் சொல்வேன்.  அவர்கள் பண்ணிய வீடியோவால்தான் யூடியூப், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என்று எல்லா தளங்களிலும் என்னை லைக் பண்றாங்க,  ஷேர் பண்றாங்க. இதெல்லாம் அதுவாக நடக்குது. நானாக எதுவும் பண்ணவில்லை.”

“காமெடியன்கள் எல்லாம் ஹீரோவாகுறாங்க. நீங்க எப்போ?”

“நோ. நோன்னு சொன்னா நோதான்னு ‘நேர்கொண்ட பார்வை’ படத்துலே தலயே சொல்லியிருக்காரு. என்னோட ஆசை காமெடியனாக பெயர் வாங்க  வேண்டும். சந்திரபாபு, நாகேஷ், தங்கவேலு மாதிரி. டான்ஸ், சண்டை எனக்கு வராது. சென்டிமென்ட் சீன் ஓக்கே. ஹீரோ ஆகணும்னு நெனைச்சு ஜீரோ  ஆயிடக்கூடாது.”

“மறக்க முடியாத பாராட்டு?”

“நிறைய இருக்கு. மறக்க முடியாதது ‘நட்பே துணை‘ படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் ‘யார்டா எங்க பிரபா மேல கையை வெச்சது... அஞ்சு  வருஷத்துக்கு முன்னாடி என்ன பண்ணியிருந்தான் தெரியுமா’ என்று எமோஷனலாக  டயலாக் பேசணும். அந்தக் காட்சியை ஒரே டேக்லே நடித்த  பிறகு ஆதி ப்ரோ ஸ்பாட்ல வைத்தே பாராட்டினார். சுந்தர்.சி சாரும் பாராட்டினார். ஆடியோ விழாவில் பார்வையாளர்கள் வரிசையில் உட்கார்ந்திருந்த  என்னை மேடையில் அவர் பக்கத்தில் உட்காரவைத்து கெளரவப் படுத்தினார். அந்த பாராட்டை வாழ்நாளில் மறக்கமுடியாது.’’

- சுரேஷ்ராஜா