மண்ணில் உதிர்ந்த மின்னிய நட்சத்திரம்!பாலிவுட் நடிகர் சுனில்ஷெட்டிதான் காரணம்.அது 1990களின் இறுதி. அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் நடந்த நட்சத்திர இரவு. வேடிக்கை பார்க்க  வந்த குஜராத்தி குடும்பத்தில் அந்த பதினான்கு வயது சிறுமி படு சூட்டிகையாக இருந்தாள்.“யாராவது என்னோடு மேடைக்கு வந்து ஆடுகிறீர்களா?”  சுனில் கேட்டார்.கூட்டம் ஆர்ப்பரித்தது. ஆனாலும் யாரும் மேடைக்கு வரவில்லை. சுனிலாகவே ஒவ்வொரு பெண்ணாக விரல் நீட்டி, “நீ வருகிறாயா,  நீ வருகிறாயா?” என்று கேட்க ஆரம்பித்தார். அவரது விரல் இந்த சிறுமியை நோக்கித் திரும்பியது. எந்த தயக்கமும் இல்லாமல் மேடை ஏறினாள்.இசை ஒலிக்கத் தொடங்கியது. சிறு பெண்ணாயிற்றே, சுமாராகத்தான் ஆடுவாள் என்று லேசாக அவளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தன்னுடைய  நடன வேகத்தை குறைத்தார் சுனில். ஆனால் சிறுமியோ பம்பரமாக சுழலத் தொடங்கினாள். அவளது வேகத்துக்கு தன்னால் ஆடமுடியாமல் சுனில்  திணறினார். பாட்டு முடிந்தது.

“பாப்பா, வெல்கம் டூ பாலிவுட். உனக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது” என்று பாராட்டும் முகமாக சுனில் ஷெட்டி மைக்கில்  சொன்னார்.அவர் விளையாட்டுக்காக சொன்னாரா, சீரியஸாக சொன்னாரா என்று தெரியவில்லை.அன்றே அந்த சிறுமியின் நெஞ்சில் தீப்பொறி எழுந்தது.  அது கனன்றுகொண்டே இருந்தது.2001ல், தன்னுடைய பதினேழாவது வயதில் ‘பாகல்பான்’ என்கிற இந்திப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்  அந்தப் பெண். ஆர்த்தி அகர்வால். சுனில் ஷெட்டி சொன்ன அந்த ஒரு வார்த்தைதான் அவரை நடிகை ஆக்கியது.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு  அமெரிக்காவில் மரணமுற்றார் என்று செய்தித்தாள்களில் வாசித்திருப்பீர்களே, டிவி செய்திகளில் பார்த்திருப்பீர்களே, அதே ஆர்த்தி அகர்வால்தான்.  தமிழில் ஸ்ரீகாந்த் ஜோடியாக ‘பம்பரக் கண்ணாலே’ படத்தில் நடித்திருந்தாரே, அவரேதான்.

அவர் அறிமுகமான இந்திப்படம் படுதோல்வி.ஆனால்-தெலுங்கு அவரை வாரி அணைத்துக் கொண்டது. வெங்கடேஷ் ஜோடியாக அவர் அறிமுகமான  ‘நுவ்வு நாக்கு நச்சாவு’ (தமிழில் விஜய் நடிப்பில் ‘வசீகரா’வாக வெளிவந்தது) வெள்ளிவிழா கண்டது. தொடர்ச்சியாக இளம் நடிகர்கள் தருண், ஜூனியர்  என்.டி.ஆர் ஆகியோரோடு ஜோடி சேர்ந்தார்.ஆந்திரா முழுக்க ஆர்த்தி அகர்வால் அலை அடிக்க, மெகாஸ்டார் சிரஞ்சீவியின் ‘இந்திரா’ படத்தில்  வித்தியாசமான வேடம். மீண்டும் வெங்கடேஷோடு அவர் இணைந்த ‘வசந்தம்’ (தமிழில் மாதவன் நடிப்பில் ‘பிரியமான தோழி’) படமும் சூப்பர்ஹிட்.  ‘தூள்’ படத்தின் ரீமேக்கான ‘வீடே’ படத்தில் ஜோதிகா நடித்த வேடத்தில் ஆர்த்திதான் ரவிதேஜாவுக்கு ஜோடியாக நடித்தார்.இப்படியாக தெலுங்கில்  அவரது கொடி உச்சத்தில் பறந்து கொண்டிருக்க, இந்த நட்சத்திர பிரபலத்தை அவரால் சரிவர கையாள முடியவில்லை. வயது ஒரு காரணமாக  இருந்திருக்கலாம். அப்போதுதான் இருபதையே தொட்டிருந்தார். ஆனால் டோலிவுட்டில் நெம்பர் ஒன்.

சுந்தரத் தெலுங்கு பேசும் ஆந்திரப் பிரதேச இளம்பெண்களின் இதயங்களை கொள்ளை கொண்டவராக அப்போது இருந்த ‘மோஸ்ட் வாண்டட் யங்  ஹீரோ’ தருணுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார். இந்த வதந்தியை மறுக்கவோ, மறைக்கவோ ஆர்த்தி எந்த முயற்சியும் எடுக்கவில்லை.திடீரென ஒரு நாள்...பாத்ரூம் கழுவுவதற்காக வைத்திருந்த ஆசிட்டை ஆர்த்தி குடித்துவிட்டதாக செய்தி. தருணுக்கும் அவருக்கும் காதல் முறிந்ததால்  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்று ஊடகங்கள் பரபரத்தன. அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்து வந்த  ஆர்த்தி, “தருண் என்னுடைய சக நடிகன், அவ்வளவுதான்” என்று மறுத்தார். அவருடைய தற்கொலை முயற்சிக்கான காரணத்தைச் சொல்லவில்லை.அன்றே ஆர்த்தியின் நட்சத்திர அந்தஸ்து பாதாளத்துக்கு வீழத் தொடங்கியது. 2001ல் தொடங்கிய அவரது கலைப்பயணம் நான்கு ஆண்டுகளில் 2005ல்  உச்சத்தைத் தொட்டது. அதே ஆண்டுதான் அவரது தற்கொலை முயற்சியும். அடுத்து அப்படியே graph கீழே இறங்கிக்கொண்டே வந்து அடுத்த நான்கு  ஆண்டுகளில் 2009க்குப் பிறகு அவருக்கு படமேயில்லை.

ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாமல் மஞ்சள் விளக்கு வெளிச்சத்தில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு வீட்டில் சும்மா இருக்க முடியாமல்  உளவியல் சிக்கல்களுக்கு ஆளானார். அடுத்தடுத்து மேலும் சிலமுறை தற்கொலைக்கு முயற்சித்து காப்பாற்றப்பட்டார் என்றுகூட சொல்கிறார்கள்.கல்யாணம் ஆனால் எல்லாம் சரியாகிவிடும் என்று சுற்றமும் நட்பும் இலவசமாக ஆலோசனைகளை அள்ளிவிட, 2007ஆம் ஆண்டு ஆர்த்திக்கும்,  அமெரிக்கவாழ் சாஃப்ட்வேர் என்ஜினியர் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. இல்லற வாழ்க்கை இரண்டே ஆண்டுகள்தான். விவாகரத்து.தான் மகிழ்ச்சியை தொலைத்த இடத்திலேயேதான் அதை திரும்பப்பெற முடியுமென்று ஆர்த்தி நினைத்தார். மீண்டும் சினிமா வாய்ப்புகளை  எதிர்பார்த்து தூது விட்டார். ‘அக்கா ரோல், அண்ணி ரோல், அம்மா ரோல்’ என்று அழும்பு செய்தார்கள் இயக்குனர்கள். “முப்பது வயசுகூட ஆகலைங்க.  அதுக்குள்ளே இப்படி கேட்குறீங்களே. நியாயமா?” என்று கதறினார் ஆர்த்தி.

“லேசா சதை போட்டுட்டீங்க. ஆடியன்ஸ் உங்களை க்ளாமரா ஏத்துக்க மாட்டாங்க. கொஞ்சம் ஸ்லிம் ஆனீங்கன்னா, குறைஞ்சது செகண்ட் லெவல்  ஹீரோக்களோடாவது நடிக்கலாம்” என்று கருத்து சொன்னார்கள்.2009 தொடங்கி 2015 வரை ஆறு ஆண்டுகள் ஒரே ஒரு படவாய்ப்புக்காக அலைந்து  திரிந்து ஓய்ந்தார் ஆர்த்தி. ஜிம்மிலேயே கதியாகக் கிடந்தும் உடலில் கொழுப்பு கரைவதாக இல்லை. செயற்கையாக கொழுப்பினை உறிஞ்சியெடுக்கும்  liposuction அறுவை சிகிச்சை செய்துகொள்ள அவர் முடிவெடுத்தபோது, ஹைதராபாத்தில் இருந்த டாக்டர்கள் ஆட்சேபித்தார்கள்.ஒருவழியாக  ‘ரணம்-2’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த கொம்பை பலமாக பற்றிக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தில், ஹைதராபாத்தில்  தனக்கு மறுக்கப்பட்ட சிகிச்சையை ரகசியமாக அமெரிக்கா சென்று செய்துகொண்டு வந்துவிடலாம் என்று முடிவெடுத்தார். Liposuction செய்து மூன்றே  வாரத்தில், ஹார்ட் அட்டாக்கில் அநியாயமாக தன்னுடைய முப்பத்தி ஒன்றாவது வயதில் கண்ணை மூடினார் ஆர்த்தி அகர்வால்.

இதை இயற்கையான மரணம் என்றா சொல்ல முடியும்?அறுபது வயது கிழவர்கள் டீனேஜ் இளைஞர்களாக இன்னும் நடித்துக் கொண்டிருக்கும்  இந்தியத் திரையுலகில் முப்பதைக் கூட எட்டாத நடிகைகளுக்கு ‘அம்மா வேடம், ஆயா வேடம்’ என்று ஒதுக்கும் போக்குதான் ஆர்த்தி போன்ற  நடிகைகளின் அகால மரணத்துக்குக் காரணம். உச்ச நட்சத்திரமாக இருந்து உடனடியாக வீழ்ந்து துணைபாத்திரங்களில் நடிக்க வேண்டிய அவலத்தை  எதிர்கொள்ள முடியாமல்தான் தற்கொலை முடிவுக்கும் செல்கிறார்கள்.ஆர்த்தி மரணமடைந்ததற்கு முந்தைய நாள்தான் அவர் நடித்த கடைசிப்படம்  வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

- யுவகிருஷ்ணா