‘நோ’ என்றால் ‘நோ’ தான்!நேர்கொண்ட பார்வை விமர்சனம்

அஜித் படம் என்கிற ஆரவாரம் இல்லை. ஆட்டத்தில் துவங்கும் ஆரம்பக்காட்சியின் முடிவிலேயே வில்லங்கமும் தொடங்குகிறது. ஷ்ரத்தா ஸ்ரீநாத்,  அபிராமி, ஆண்ட்ரியா தாரங் ஆகிய மூன்று இளம்பெண்களும் குடும்பச் சூழ்நிலை காரணமாய் ஒன்றாக ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார்கள். இந்த மூவர்  அணி கலந்துகொண்ட ஒரு பார்ட்டியில் சிறிய அடிதடி. அரசியல்வாதி ஒருவரின் மருமகனை பலமாகத் தாக்கிவிடுகிறார் ஷ்ரத்தா. தன்னை பாலியல்  பலாத்காரம் செய்ய வந்தவனையே தாக்கினேன் என்கிறார் ஷ்ரத்தா.

அரசியல்வாதியான ஜெயப்பிரகாஷ், தன் மருமகனைக் காப்பாற்றுவதற்காக ஆள்பலம், பண பலத்தைக் கொண்டு இளம் பெண்களை மிரட்டுகிறார்.  ஒருகட்டத்தில் பிரச்சனை நீதிமன்றம் செல்கிறது. அரசியல்வாதி களுடன் மோதும் அளவுக்கு பலமில்லாத இளம் பெண்களுக்கு வக்கீல் அஜித்  உதவுகிறார். அவர்களுக்கும் அஜித்துக்கும் என்ன தொடர்பு, அன்வான்டட்டாக அஜித் உதவ என்ன காரணம் போன்ற கேள்விகளுக்கான விடையைச்  சொல்வதுதான் ‘நேர்கொண்ட பார்வை’.

அஜித்தின் அறிமுகக் காட்சி ஒரு பூங்காவில் அமைதியாகத் துவங்குகிறது. ஆனால் அந்த அமைதிக்குள்ளாக ஓர் எரிமலை உறங்கிக் கொண்டிருக்கிறது  என்பதை அழுத்தமாகக் காண்பிக்கிறார்கள். மனரீதியாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுக்கும் வேடம் அஜித்துக்கு. அதிக அலட்டல் இல்லாமல்  நடித்திருக்கிறார். ஒவ்வொரு முறை அஜித் உற்றுப் பார்க்கும்போதும் கத்தி மாதிரி பளீரிடுகின்றனஅவரது கண்கள்.‘தம்பி நீங்க யாருன்னு எனக்குத்  தெரியாது, ஆனா இப்ப அவர் முன்னாடி நிக்காதீங்க’ என்று மருத்துவர் அடியாள் ஒருவருக்கு போனில் அறிவுரை சொல்லும் காட்சி, அஜித்தின்  ஹீரோயிசத்தை நூறுமடங்கு உயர்த்துகிறது. படத்தின் இடைவேளைக் காட்சி அஜித் ரசிகர்களுக்கு ஆயிரம் வாலா சரவெடி.

இளம் பெண்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்குத்தான் அதிக முக்கியத்துவம். ஓடும் காரில் அவர் மீது நடக்கும் அத்துமீறல் காட்சியில் ஆகட்டும்,  போனில்  கெத்து காட்டுவதாக இருக்கட்டும், படம் முழுவதும் ஜஸ்ட் லைக் தட் எனுமளவுக்கு ஸ்கோர் பண்ணுகிறார். அபிராமி, ஆண்ட்ரியா தாரங் ஆகியோரும்  தங்கள் பங்கை சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறார்கள். ஓரிரு காட்சிகளில் மட்டும் வருகிறார் வித்யா பாலன்.வில்லன்களாக நடித்திருக்கும்  ஜெயப்பிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்திரன், அஸ்வின்ராவ், சுஜித்சங்கர் ஆகியோர் கச்சிதம். வக்கீல்களாக நடித்திருக்கும் ரங்கராஜ்  பாண்டே, மை.பா.நாராயணன் ஆகியோரில் மை.பா. பக்காவாகப் பொருந்துகிறார். பாண்டே கலை ஆர்வத்தோடு நடித்திருக்கிறார்.

நீதிமன்றக் காட்சிகளில் நீந்தி விளையாடியிருக்கிறார் ஒளிப் பதிவாளர் நீரவ்ஷா. அஜித் மாதிரி பெரிய ஹீரோ படங்களில் மியூசிக் டைரக்டர்களுக்கு  பெரிய சவால் காத்திருக்கும். அதை முடிந்தளவுக்கு சிறப்பாகப் பண்ணியிருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தைத்தான்  தமிழில் எடுத்திருக்கிறார்கள். அஜித்துக்காக ஒரு சண்டை, ஒரு பாடல் சேர்த்திருக்கிறார்கள். பெண்கள், ஆண் நண்பர்களுடன் சுற்றலாம், மது  அருந்தலாம், அரைகுறை ஆடை அணியலாம், ஏ ஜோக் சொல்லலாம். ஆனாலும் அவர்கள் வேண்டாமென்றால் அவர்களைத் தொடக்கூடாது என்ற  கருத்தை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது படம். இந்தியில் சொன்ன கருத்தை தமிழிலும் நேர்மையாகச் சொல்லியிருக்கிற இயக்குநர் வினோத்  பாராட்டுக்குரியவர்.அதே சமயம், பெண்கள் ஒழுக்கம் சம்பந்தமான வெகுஜன மனோபாவத்துக்கு எதிராக படத்தில் பெண்கள் இருப்பது சற்றே நெருடல்.  மொத்தத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ பார்க்கவேண்டிய படம்.