பிரான்மலை



ஆணவக்கொலைகள் ஒழியட்டும்!

ஊரின் பெரும் புள்ளி வேல.ராமமூர்த்தி. கந்துவட்டி கல்நெஞ்சக்காரர். அவருடைய மகன் வர்மாவோ அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் ஈர நெஞ்சுக்காரர். சமூக சேவகியான நாயகி நேகாவைக் கண்டதும் காதலில் வீழ்கிறார். வீட்டுக்குத் தெரியாமல் இருவரும் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இந்நிலையில் பெண்கள் விடுதியில் நடக்கும் பாலியல் வன்முறை செய்யும் விடுதி நிர்வாகியை காவல் துறையிடம் ஒப்படைக்கிறார்கள் புதுமண ஜோடி. வேல.ராமமூர்த்தி ஜோடியைப் பிரிக்கப் பார்க்க, இன்னொரு பக்கம் ஜெயிலுக்குப் போன விடுதி நிர்வாகி இவர்களைக் கொலை செய்யத் துடிக்கிறார். என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

புதுமுக நாயகன் வர்மா ஆக்‌ஷன், ரொமான்ஸ், சென்டி மென்ட் என்று தேர்ந்த நடிகரைப் போல் முத்திரை பதிக்கிறார். நாயகி நேகா சிநேகாவுக்கு சிஸ்டர் மாதிரி இருக்கிறார். வேல.ராமமூர்த்தி ஊர் பெரியவர் கேரக்டருக்கு கச்சிதமாக இருக்கிறார். கஞ்சா கருப்பு, பிளாக் பாண்டி இருவரும் அரும்பாடு பட்டுச் சிரிக்க வைக்கிறார்கள்.

படத்தின் ஆகச் சிறந்த பலம் ஒளிப்பதிவாளர் எஸ்.மூர்த்தி. பாரதி விஸ்கார் இசையில் பாடல்கள் இனிமை. வைரமுத்துவின் வரிகளும் சிறப்பு. ஆணவக்கொலைகளுக்கு எதிராக சமூக அக்கறையுடன் படம் எடுத்துள்ள இயக்குநர் அகரம் காமுராவுக்கு பாராட்டு.