லைட்மியூசிக்கில் இருந்து சினிமா வரை...



‘சின்ன மச்சான்’ ரேஞ்சுக்கு ‘சார்லி சாப்ளின்-2’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஐ வான்ட் டூ மேரி’ பாடலும் ஹிட்டடித்துள்ளது. இப் பாடலைப் பாடியிருக்கும் ஜகதீஷ், ஆர்க்கெஸ்ட்ரா பின்னணியில் இருந்து வந்திருப்பவர்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கல்லூரியில் பயின்றவர். அவரிடம் பேசினோம்.‘‘பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னை. என்னுடைய குடும்ப உறவு களில் பலர் மேடைப் பாடகர்கள். சினிமாவுக்கு பாடவில்லை என்றாலும் ஸ்ருதியுடன் பாடுமளவுக்கு இசை ஞானம் உள்ளவர்கள்.

மரபு வழியாக எனக்கும் அப்படி ஒரு வரம் கிடைத்திருப்பதாக நினைக்கிறேன். பிளஸ் ஒன் படிக்கும் போது மேடையில் ஏறி பாட ஆரம்பித்தேன். சுமார் பதினோரு வருடம் மேடைப்பாடகனாக வலம் வந்தேன். லயோலாவில் விஸ்காம் முடித்ததும் ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் இன்ஸ்டிடியூட்டில் முறைப்படி இசை கற்றுக் கொண்டேன். அவ்வகையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மாணவன் என்பதில் எனக்கு பெருமை.

ஆரம்பத்தில் விளம்பரப் படங்களுக்கு பின்னணி பாடியிருக்கிறேன். ‘மிர்ச்சி’ சிவா நடித்த ‘சொன்னால் புரியாது’ படத்தில் தான் முதன் முதலாக பின்னணி பாட ஆரம்பித்தேன்.‘காஞ்சனா-2’ படத்தில் இடம்பெற்ற ‘சில்லாட்டா... சில்லாட்டா...’, ‘முத்தின கத்திரிக்காய்’ படத்தில் ‘சும்மா சொல்லக் கூடாது’, ‘கொடி வீரன்’ படத்தில் ‘அய்யோ அடி ஆத்தே’, ‘ஜுங்கா’வில் ‘அம்மா மேல சத்யம்’ , ‘காளி’யில் ‘மனுஷா மனுஷா’ போன்ற ஹிட் பாடல்களைப் பாடும் வாய்ப்புகள் அமைந்தன.

‘சார்லி சாப்ளின்- 2’ படத்தில் ‘ஐ வான்ட் டூ மேரி’ பாடலுக்கு ரிலீஸான இரண்டு வாரங்களில் இரண்டு மில்லியன் ஹிட்ஸ் கிடைத்தது. பள்ளி நாட்களில் இசை மேடைகளில் ‘முக்காபுலா’ பாடலுக்கு பிரபுதேவா மாதிரி நடனம் ஆடியிருக்கிறேன். இப்போது என் பாட்டுக்கு அவர் நடனமாடியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்த வாய்ப்பை வழங்கிய இசையமைப்பாளர் அம்ரேஷ், இயக்குநர் ஷக்தி சிதம்பரம், தயாரிப்பாளர் சிவா ஆகியோருக்கு நன்றி.தமிழில் ஏராளமான இசையமைப்பாளர்கள் இசையில் பாடியுள்ளேன். ஏ.ஆர்.ரஹ்மான் சார் இசையில் ‘நறுமுகையே’ ரீவெர்ஷன் பாடியது மறக்க முடியாத அனுபவம்.

பாடுவதோடு மட்டுமில்லாமல் மியூசிக் அரேஞ்சராகவும் இருக்கிறேன். லைட் மியூசிக் பின்னணியில் இருந்து வந்திருப் பதால் கர்நாடகம், வெஸ்டர்ன், நாட்டுப் புறப் பாட்டு என்று எல்லா வெரைட்டியிலும் என்னால் பாட முடியும். எல்லா பாடகர் களின் வாய்ஸ் ரேஞ்சும் எனக்குத் தெரியும். அப்சர்வேஷன் இருந்தால் அப்படி பண்ணமுடியும்.

பேவரைட் சிங்கர் என்று யாரும் இல்லை. ஒவ்வொருவரிடமும் தனித்துவமான திறமை உள்ளது. அவர்களிடம் உள்ள பெஸ்ட்டை எடுத்து தான் நான் பாடகனாக உருவானேன்.அந்த வகையில் எஸ்.பி.பி, மனோ, கார்த்திக், ஸ்ரீநிவாஸ், ஷங்கர் மகாதேவன் போன்ற ஜாம்பாவான்களின் வாய்ஸ் பிடிக்கும்.இப்போது டெக்னாலாஜி வசதி இருப்பதால் சுமார் குரலையும் சூப்பராக பாட வைக்க முடியும். அந்தக் காலத்தில் இது செல்லாது.

பழைய காலத்து சிங்கர்ஸ் அசுர சாதகம் பண்ணியவர்கள், பிரம்ம முகூர்த்தத்தில் பயிற்சி எடுத்தவர்கள். அதனால் தான் அவர்கள் பாடல்கள்காலம் கடந்து நிற்கிறது. சீர்காழி கோவிந்தராஜன் போன்ற பாடகர்கள் மைக் இல்லாமலேயே நூறு பேர் உள்ள அவையில் உச்ச ஸ்தாயியில் பாடும்போது கம்பீரமாக ஒலிக்கும்.பாடகனுக்கு குரல்தான் மூலதனம் என்பதால் ஐஸ்கிரீம் போன்ற ஜில் ஐட்டங்களுக்கு தடா. முப்பொழுதும் வெந்நீர் குடிக்கப் பழகினால் நீங்களும் பாட வரலாம்’’ என்றார்.

- ராஜா