சினிமாவுக்கு வந்த கணக்கு வாத்தியார்!



சமீபத்தில் வெளியான அரை டஜன் படங்களுக்கு நடுவில் சத்தமில்லாமல் வெளியாகி பி அண்ட் சி ஏரியாக்களில், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற படம் ‘பயங்கரமான ஆளு’. இப்படத்தை இயக்கி நடித்தவர் அரசர் ராஜா. சினிமாவுக்காக வாத்தியார் வேலையை துறந்ததாகச் சொல்லும் அரசர் ராஜாவிடம் பேசினோம்.

‘‘சொந்த ஊர் சீர்காழி. அப்பா தமிழ் வாத்தியார். என்னையும் அவரைப் போலவே வாத்தியாராக்கி அழகு பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அப்பாவின் ஆசைக்காக சின்சியரா படிக்க ஆரம்பித்தேன்.எனக்கு சினிமா பின்னணி கிடையாது. லைப்ரரி, டீக் கடைகளில் இருக்கும் செய்தித் தாள்களில் சினிமா செய்திகளை விரும்பிப் படிப்பேன். அப்படித்தான் எனக்குள் சினிமா ஆர்வம் துளிர்விட்டது.

கல்லூரி முடித்த பிறகு சினிமாவில் முயற்சி செய்யலாம் என்று சென்னை வந்தபோது அப்பா ஊரில் இருந்து போன் பண்ணி உனக்கு வேலை கிடைச்சிருக்கு என்ற தகவல் சொன்னார். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதால் அப்பா விருப்பத்தின்படி கணக்கு வாத்தியராக வேலைக்குச் சேர்ந்தேன்.

தொடர்ந்து திருமணம், ஃபேமிலி கமிட்மென்ட் இருந்ததால் சினிமா பக்கம் எட்டிப் பார்க்க முடியாதளவுக்கு வேலையில் பிஸியாக இருந்தேன். போதுமான அளவுக்கு பொருள் ஈட்டினேன். மகளை டாக்டருக்கு படிக்க வைத்தேன். ஒருகட்டத்தில் குடும்ப சுமை, கமிட்மென்ட் குறைந்ததால் மீண்டும் சென்னைக்கு வந்தேன்.

தனியார் கல்லூரியில் டைரக்‌ஷன் கோர்ஸ் பண்ணினேன். சில குறும்படங்களை எடுத்தேன். ‘பயங்கரமான ஆளு’ கதை ரெடியானதும் பிரசாந்த் சாருக்கு கதை சொல்வதற்காக தியாகராஜன் சாரை சந்தித்தேன். அவர் ‘‘இந்தக் கதையில் நீங்களே நடித்தால் பொருத்தமாக இருக்கும்’’ என்று உற்சாகப்படுத்தினார். மிகப் பெரிய ஜாம்பாவன் சொன்னால் சரியாக இருக்கும் என்ற முடிவில் நானே ‘பயங்கரமான ஆளு’ படத்தில் நாயகனாக நடித்து இயக்கினேன்.

முதல் சினிமா அனுபவம் நான் எதிர்பார்க்காதளவுக்கு எளிதாக இருந்தது. நான் சினிமாவுக்கு புதுசு என்பதால் படத்தில் நடித்தவர்களுக்கு இந்தப் படம் வெளி வருமா, வெளி வராதா என்ற சந்தேகம் இருந்தது. பண ரீதியாக பிரச்சனை இல்லாததால் குறித்த சமயத்தில் படத்தை முடிக்க முடிந்தது.

படம் பார்த்துவிட்டு, இசையமைப்பாளர் தஷியின் பின்னணி இசை படத்துக்கு வலு சேர்க்கும்விதமாக இருந்தது என்றார்கள். சிலர் மேக்கிங் விஷயத்தில் இப்படி இருந்திருக்கலாம் என்று ஆலோசனை சொன்னார்கள். ஆனால் குறை சொல்லமுடியாதளவுக்கு எடுக்க என்னிடம் பட்ஜெட் இல்லை.

அடுத்து ‘அம்பாள்’ என்ற படத்தை இயக்கி நடிக்கிறேன். தமிழ்ப் பெண்களின் அடையாளம் பற்றிய இந்தப் படம் ‘அறம்’ மாதிரி நாயகிக்கான கதையாக இருக்கும்.என்னை மாதிரி சிறு பட்ஜெட்டில் படம் எடுக்கிறவர்களைப் பார்த்து எந்த தைரியத்தில் படம் எடுக்க வருகிறீர்கள். படம் ஓடவில்லை என்றால் தலையில் துண்டு தான் போட வேண்டும் என்ற கேள்வியை முன் வைக்கிறார்கள்.

சினிமாவுக்கு நான் ஆர்வக் கோளாறால் வரவில்லை. கெளரவமான வாத்தியார் வேலை பார்த்தாலும் சினிமா மீதுள்ள ஆர்வம் குறையவில்லை. சினிமாவில் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையில் வந்தேன். அதற்கு அத்தாட்சியாக இப்போது ஒரு படத்தை இயக்கி நடித்தேன். வரும் காலங்களில் கண்டிப்பாக ஜெயிப்பேன். அதற்காகவே வேலையைத்  துறந்தேன். வெற்றி கிடைக்கும் வரை என் போராட்டம் இருக்கும்’’ என்றார்.

- எஸ்