டைட்டில்ஸ் டாக்-97



இறுதிச்சுற்று பாடலாசிரியர் முத்தமிழ்

பல சுற்றுகளைத் தாண்டி முன்னேறி இறுதியாக வெற்றியா, தோல்வியா என்ற ஒரு முடிவை நிர்ணயிக்கும் சுற்றுதான் இறுதிச் சுற்று. இந்தத் தருணங்களை பல முறை அனுபவங்களாக விளையாட்டு வீரர்களிடமே நாம் நிறைய எதிர்பார்க்க முடியும்.சிறு வயதில் பள்ளிப் பருவத்தில் ஒவ்வொரு வகுப்பிலுமே இறுதியாக முழு ஆண்டுத் தேர்வு நடைபெறும். அதன் முடிவுகள் கோடை விடுமுறையில் வெளிவரும்.

எப்படியும் தேர்ச்சி பெற்றுவிடுவேன் என்று எனக்கும் எனது பெற்றோருக்கும் நம்பிக்கையுண்டு. ஆனாலும் அந்த தபால் அட்டையில் வரும் PROMOTED என்கிற வாசகத்தைக் கண்டு கொண்டாடுவதுண்டு. இப்படி ஒவ்வொரு ஆண்டும் இறுதிச் சுற்றை சந்தித்ததுண்டு. இப்படியாக வருடா வருடம் சந்தித்தது கல்லூரியில் பொறியியல் படிப்பு வரை தொடர்ந்தது.

ஒரு தனி மனிதனின் போராட்டம் என்பதை அடுத்து பலர் இணைந்து போராடும் போராட்டங்கள் என்பது உண்டு. அந்த குழுவிற்கு என்று ஒரு வெற்றி தோல்வி இறுதிச் சுற்றில் தீர்மானிக்கப்படுகிறது.பள்ளிப் பருவத்தில் நான் தமிழக விளையாட்டான கபடிப் போட்டியில் பல இறுதிச் சுற்றுகளைச் சந்தித்திருக்கிறேன். இந்த இறுதிச் சுற்றின் பாரம் ஒரு குடும்பத்தின் பொறுப்பு எப்படி ஒரு குடும்பத்தலைமையிடம் உள்ளதோ அதேபோல குழுவின் கேப்டன் என்ற ஒருவருக்கு பொறுப்புடன் கலந்த வெற்றியை ருசிபார்ப்பது வேறு அனுபவம்.

நாம் வாழ்வதைப் பார்த்து சந்தோஷப்படுவதை பெற்றோர்கள் மற்றும் நட்புகள் போலத்தான் இறுதிச் சுற்றில் நம் வெற்றியைக் கொண்டாட நம் குழுவினைச் சார்ந்த பயிற்சியாளர் முதல் பார்வையாளர் வரை ஆயத்தமாக இருப்பார்கள்.நம் வாழ்க்கையில் எப்பொழுதுமே ஒரு போராட்டத்தை சந்தித்தே ஆக வேண்டும். அப்படி சந்திக்கவில்லையென்றால் நாம் போட்டிக்களத்தில் இல்லை என்றே சொல்லவேண்டும்.

இந்தப் போராட்டத்தில் அவரவர் கொள்கைகள் மற்றும் அவரவர் பழக்கத்திற்கும் வழக்கத்திற்கும் இயல்பாக உதிக்கின்ற திறமைகளை வைத்து பயணிப்போம். இயல்பாக இல்லாத திறமையை வம்பாக இழுத்துக் கொண்டே பயணிப்பதும் ஓடவேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் தான்.

நானும் எனக்கு என் பெயருக்கு ஏற்றாற்போல் (இயல்+இசை+நாடகம்=முத்தமிழ்) இயல்பாக உதிக்கும் கலைத் திறமைகளை மற்றவர்களிடம் பரிமாறிக்கொள்ளவும், வளர்த்துக் கொள்ளவும் மிகவும் ஆசைப்பட்டேன். கற்கவும் செய்தேன். கற்றுக்கொள்ளுதல் என்பது நாம் அனுபவித்து அடிபட்டு கற்றுக்கொள்வது மற்றும் கற்றுக்கொண்டு அனுபவிப்பது என்று இரண்டு வகைகள் உண்டு. எப்படியோ கற்றுக் கொள்ள வேண்டும். எவ்வளவு விரைவில் கற்றுக்கொள்கிறோமோ அவ்வளவு முதிர்ச்சியும் தெளிவும் நமது பயணத்தில் உதவும்.

முதல் சுற்றே இறுதிச் சுற்றாக அறிவித்து அதில் வெற்றி பெறுவதும் உண்டு அல்லது முதல் சுற்றே இறுதிச் சுற்றாக அமைந்து தோல்வியுற்று வெளிவருவதும் உண்டு.இசையில் ஆர்வம் அதிகம் என்பதால் இசைக் கருவிகள் வாசிப்பதும், பாடுவதும் எனக்கு மிகவும் பிடித்தது. பல அனுபவங்களைப் பெற்றுள்ளேன். இப்படியாக ஆரம்பித்த எனது பயணம் ‘இறுதிச் சுற்று’ என்ற படத்தில் ‘வா மச்சானே’ என்ற பாடலை எழுதும் அளவிற்கு இழுத்துக் கொண்டு வந்துவிட்டது. இந்தக் கலைகளையெல்லாம் நான் கற்றுக்கொண்டது போட்டிக்காக இல்லை.

ஆர்வம் மிகுதி மட்டுமே. ஆனால் நாம் இந்த கலையை வைத்து புகழ் பெறவும், பணம் ஈட்டவும் வரும்பொழுது, களத்தில் இறங்கியே ஆகவேண்டும் என்பதே கடமை.‘உதயன்’ என்ற படத்தில்தான் முதல் பாடலை எழுதி உதயமானேன். தொடர்ந்து ‘அட்டகத்தி’யில் ‘ரூட்டு தலை’, ‘பீட்ஸா’வில் ‘நினைக்கவே’, ‘ஜிகர்தண்டா’வில் ‘கண்ணம்மா’, ‘வாயை மூடி பேசவும்’ படத்தில் ‘காதல் அறஒண்ணு விழுந்துச்சி’, ‘கல்யாண சமையல் சாதம்’, ‘மெல்லச் சிரித்தாய்’ ஆகிய பாடல்கள் எனக்கு வெளிச்சம் தர ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் ஐந்து பாடல்களையும் எழுத வாய்ப்பு கிடைத்தது. பிறகு ‘சூது கவ்வும்’, ‘சதுரங்க வேட்டை’, ‘எமன்’, ‘காஷ்மோரா’, ‘கோடிட்ட இடங்களை நிறப்புக’, ‘டிராபிக் ராமசாமி’ போன்ற படங்களில் பயணம் மேற்கொண்டேன். ‘இறைவி’ ‘காதல் கப்பல்’, ‘விக்ரம் வேதா’வில் ‘டஸக்கு டஸக்கு’ போன்ற பாடல்கள் அனைத்து மக்களுக்கும் என்னை தெரியப்படுத்தியது.

வேட்டையாடுபவருக்கு ஒவ்வொரு முறையும் கனியோ, கறியோ கிடைத்து விட்டால் வெற்றிதான். அடுத்த வேட்டையென்பதும் அடுத்த சுற்றுபோலத்தானே. அப்படி பலப்பல வேட்டைகளை ஆடி நான் சினிமா களத்தில் சின்ன சின்னச் கனிகளையும் கறிகளையும் பற்றிக் கொண்டு வருகிறேன். ஒவ்வொரு கனியும் பல இறுதிச் சுற்றுகளுக்குப் பின்னரே கிடைக்கும். ஏனென்றால் கலை அப்படி. உனக்கு தெரியும், தெரியாது, முடியும், முடியாது என்ற பல அச்சுறுத்தல்களை எல்லா சுற்றிலும் சந்தித்தாக வேண்டும்.

நம் அறிவை பயன்படுத்தவும், பக்குவப்படுத்தவும், பாழ்படுத்தவும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். நாம் பயன்படுவோம் என்ற நிலைமையில் மட்டுமே நமக்கு மதிப்பு அளிக்கப்படும். இப்படியாக எட்டாக்கனி ஒன்றை நான் பறித்து சுவைத்ததுண்டு. அது தான் ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற படத்தில் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு பாடல் எழுதி, அவரின் பாராட்டைப் பெற்றது.

நமது தாய் தந்தை உடன்பிறப்புகளை எந்த ஒரு போராட்டமும் இன்றி பெற்றுக்கொண்டோம். நட்புகளைக் கடந்து அடுத்து நம் உறவுகளை நாம்தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அல்லது அமையும் உறவுகளைப் பிடித்துக்கொள்ள வேண்டும். எனது வாழ்க்கைத் துணைவியை, எனது மனைவியை கரம்பிடித்தது காதல் திருமணத்தில். திருமணத்தைவிட காதல் திருமணத்தில் வெற்றி என ஒன்று உண்டு. இந்த வெற்றியும் பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே அமைந்தது. ஏனென்றால் நமது சமுதாயக் கட்டமைப்புக் களம் அப்படி.

மனதில் தோன்றும் ஆசைகள், நமது சுயநலப் பணிகள், இதையும் தாண்டி சக உயிர்கள், உணர்வுகள் என்று நாம் யோசிக்கும் பொழுதே சமுதாய அக்கறை தோன்றுகிறது. சமுதாய  உணர்வுகளை சந்தைப்படுத்தும் அரசியலில் இதுபோன்று இறுதிச் சுற்றுகள் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வருகிறது நமது நாட்டில். இதில் விசேஷம் என்னவென்றால் யார் ஜெயித்தாலும், ஜெயிக்க வைத்த மக்கள் தோல்வியையே சந்திக்கின்றனர். நல்ல விஷயங்களே நடக்கவில்லையா என்று கேட்டால், கெட்டவைகள் தான் அதிகமாக உள்ளது என்பேன். நல்லவை மட்டும் நடந்திருந்தால் நாடு என்றோ முன்னேறியிருக்கும்.

நல்ல தலைவனை தேர்ந்தெடுப்பதும் உருவாக்குவதுமே மக்களின் கடமை. நல்ல தலைமை வீட்டிலிருந்தே தொடங்குகிறது. நமது வருங்கால சந்ததிகளை நாம் எப்படி வளர்க்கிறோம் என்பதைப் பொறுத்தே, ஒவ்வொரு குழந்தையையும் எப்படி செதுக்குகிறோம் என்பதைப் பொறுத்தே எதிர்கால சமுதாயம் உருவாகும். நம் நாடும் உலகமும் வளம் பெறும்.

போட்டிகள், பிரிவுகள் என்பது விளையாட்டில் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். மற்ற விஷயங்களில் நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் போட்டிகளும், பொறாமைகளும், பாகுபாடுகளுமே உலக மக்களிடமும் மற்ற உயிரினங்களிடமும் துன்பத்தை விளைக்கின்றன.
   நான் கராத்தே கற்றவன். பல இறுதிச் சுற்றுகளை இந்திய அளவில் சந்தித்திருக்கிறேன், வெற்றிகளையும் பெற்றிருக்கிறேன்.

அதில் ஒரு போட்டியின்போது எதிரே இருப்பவர் பெரிய உருவமாகவும், முரட்டுத் தோற்றம் உள்ளவராகவும் இருந்தார். ஆனால் அவரை நமக்கு கிடைக்கும் இரண்டு நிமிடங்களில் வீழ்த்த வேண்டும். பல சுற்றுகளில் அவர் தொடர்ந்து சில நுட்பத்தை பயன்படுத்தி வருவதை கவனித்தேன். அதனை மட்டும் உபயோகப்படுத்தவிடாமல் பார்த்துக் கொண்டு தடுத்தேன்.

இறுதியில் நான் வெற்றி பெற்றேன். வெற்றியில் மகிழ்ச்சியென்பது ஒரு பக்கம் இருக்க, அன்று தோற்ற அவருக்கு சற்று பலமாக அடி பட்டிருந்தது. அதற்குக் காரணம் நான் என்பதால்... அவரது சகோதரி கோபமாகவும், முறைத்தும் என்னைப் பார்த்தது இன்னும் என் மனதில் இருக்கிறது. நம் வெற்றியில் இன்னொருவருக்கு மிகவும் வருத்தம் வருகிறதே!

இந்த விளையாட்டைத்தானே நாம் போர் என்ற ஒன்றை ஏற்படுத்தி பெரிய வக்கிரம் நிறைந்த வெற்றி தோல்வியை நிர்ணயிக்க நடத்திக்கொண்டிருக்கிறோம். எத்தனை பலிகள், எத்தனை விரயங்கள், அத்தனையும் ஈடுகட்ட முடியாதவைகள். அப்பாவிகள், அப்பாவி விலங்குகள், இயற்கை வளங்கள் அத்தனையும் அழித்துக்கொண்டிருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டுமென்றால் பிரிவுகளும் போட்டிகளும் விளையாட்டுப் போட்டிகளில் மட்டுமே இருக்க வேண்டும்.

ஒரு காலத்தில் விளையாட்டுப் போட்டியே போர்களை மைமாக வைத்து வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையாக இருந்தது. அந்த சூழலை மறந்துவிடுவோம். விளையாட்டுக்காக மட்டுமே வெற்றி தோல்விகள் இருக்க வேண்டும். திறமைக்காகவும், மனமகிழ்ச்சிக்காகவுமே இந்த விளையாட்டுப் போட்டிகள் அமையவேண்டும்.

இறுதிச் சுற்று என்பது கொண்டாட்டமாக மட்டுமே அமைய வேண்டும். இறுதியாக  நம் மனங்களிடையே இருக்கும் அன்பு ஒன்றே நிரந்தரம். அன்பை மட்டுமே கொண்டு மன நிம்மதி அடைய முடியும் என்பதை அன்பாக உணருங்கள். எவ்வளவு இடர்பாடுகள் வந்தாலும், அன்பு எனும் கயிற்றை இறுதியாக உங்கள் மனங்களில் கட்டிக் கொண்டும், சூடிக் கொண்டும் எந்த ஒரு இறுதிச் சுற்றுக்கும் பயணியுங்கள். ‘வண்ணத்திரை’ வாசகர்களுக்கு என் அன்பான புத்தாண்டு வாழ்த்துகள்.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)