நடிக்க வந்திருக்கும் காஸ்ட்யூம் டிசைனர்!



சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘கனா’ படத்தில் ஐஸ்வர்யாராஜேஷின் அண்ணனாக நடித்திருப்பவரை ‘யார் இவர்?’ என்று ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.அவர் சத்யா என்.ஜே.விஜய், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றிக் கொண்டிருந்தவர், ‘கனா’வுக்காக அரிதாரம் பூசியிருக்கிறார்.

“சொந்த ஊரு ராமநாதபுரம் மாவட்டத்துலே தேவிபட்டணம். முழுப்பெயர் சத்யராஜ். பள்ளி நாட்களில் சினிமா, கிரிக்கெட் பிடிக்கும். விஜய் சாரின் அதி தீவிர ரசிகன் நான். ஊருலே ‘திருப்பாச்சி’ விஜய் நற்பணி மன்ற செயலாளராக இப்போதும் இருக்கேன். அவரைப் பார்த்துதான் எனக்கு சினிமா ஆசை வந்தது. அவரை சந்திக்கணும் என் பதற்காகத்தான் சென்னைக்கே வந்தேன். ஸ்கூல் முடிந்தபிறகு வழக்கமான பாடங்களை படிக்காமல் காஸ்டியூம் படிக்கலாம் என்று முடிவு பண்ணினேன். அந்த கோர்ஸுக்கு இப்போ மவுசு அதிகமாயிடிச்சி. அப்போது அப்படி இல்லை.

படிக்கும் காலத்தில் சசிகுமார் போன்ற சினிமா நட்சத்திரங்களை கல்லூரி விழாவுக்கு அழைத்துவந்து சினிமா தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டேன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார்.“முதல் படம்?”“காலேஜ் முடிந்ததும் வாசுகி பாஸ்கர் மேடத்திடம் உதவியாளராக சேர்ந்தேன். பிறகு சில பிரபல காஸ்டியூம் டிசைனர்களிடம் நான்கு வருடம் உதவியாளராக இருந்தேன். காஸ்டியூம் டிசைனராக ‘மூன்று பேர் மூன்று காதல்’ படத்தில் அறிமுகமானேன்.

முதல் படத்திலேயே அர்ஜுன், சேரன், விமல் போன்ற பிரபலங்களுக்கு காஸ்டியூம் டிசைன் பண்ணும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து ‘ராஜா ராணி’, ‘மான் கராத்தே’, ‘ரஜினிமுருகன்’, ‘பிரம்மன்’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’, ‘நையாண்டி’ ‘பைரவா’, ‘தெறி’ உட்பட குறுகிய காலத்தில் 35 படங்களில் வேலை பார்த்துட்டேன்”“திடீர்னு நடிகர் ஆயிட்டீங்களே?”

“ஏற்கனவே ‘வெற்றிவேல்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளேன். ஆனா ‘கனா’ மூலமாதான் எல்லாரும் கவனிக்கிறாங்க. இந்த வாய்ப்பு இயக்குநர் அருண்ராஜ் மூலம் தான் கிடைத்தது. நானும் அவரும் கிரிக்கெட் விளையாடும்போதே நல்ல நண்பர்கள். அவர் வேகப்பந்து வீச்சாளர், நான் விக்கெட் கீப்பர். அப்போதிருந்தே எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது.

எனக்கு CCL விளையாடணும்னு ஆசை. அதுலே விளையாடணும்னா குறைஞ்சது 7 படத்துலேயாவது நடிச்சிருக்கணும். அதுக்காகவே நடிக்கிறேன். இப்போ CCL ஆடுறதுக்கு அனுமதி வாங்கிட்டேன்.”“சிவகார்த்திகேயன் உங்களுக்கு ரொம்ப சப்போர்ட்டா இருக்காரே?”
“அவரு அண்ணன் மாதிரிங்க. அவர் சப்போர்ட் எப்பவும் எனக்கு இருக்கு. என்னோட ஒவ்வொரு வளர்ச்சியிலும் அவர் பங்கு இருக்கிறது. ‘மான் கராத்தே’ அவர் கொடுத்த வாய்ப்பு. ‘ரஜினி முருகன்’ படமும் அவர்தான் வாங்கிக் கொடுத்தார். இந்த இரண்டு படங்களும் காஸ்டியூமராக எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படங்கள்.”

“இனிமே ஆக்டிங்தானா?”
“ஆமாம். அதுதான் ஆசை. விஜய் சார் படத்துல வேலை செய்யணும்னு நினைத்தேன். அது ‘பைரவா’, ‘தெறி’ படங்களில் நிறைவேறிவிட்டது. இனிமே திறமையை வெளிப்படுத்துமளவுக்கு வெரைட்டியான ரோல் பண்ணணும். காஸ்ட்யூம்தான் எனது அடையாளம் என்பதால் அதையும் விடமாட்டேன்.”
“நடிக்க விரும்பும் கேரக்டர்?”

“இப்போதான் என் மூஞ்சியே எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு. அதுக்குள்ளே ஸ்டார் கிட்டே கேட்குற கேள்வியை எல்லாம் கேட்டு கலாய்க்கறீங்களே பாஸ்! இன்னும் நான் நடிப்பில் ரொம்ப தூரம் போகணும். சவாலான கேரக்டர்களில் நடிக்கணும்னு விரும்பறேன்.”
“நெக்ஸ்ட்?”

“மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. காஸ்டியூம்ஸைப் பொறுத்தவரை ‘ரங்கா’,‘சார்லி சாப்ளின் 2’, ஜி.வி.பிரகாஷ், விஷ்ணு விஷால், ஜெய் படங்கள் என்று அரை டஜன் படங்கள் கைவசம் இருக்கு.”“காஸ்டியூம் சென்ஸ் அதிகம் உள்ள நடிகர், நடிகை யார்?”
“விஜய் சார், சூர்யா சார், நயன்தாரா மேடம், திரிஷா மேடம் ஆகியோரைச் சொல்லலாம்.

அனுபவம் அதிகம் என்பதால் அவங்க இன்புட் இருக்கிற மாதிரி சின்னச் சின்ன மாற்றங்கள் சொல்வாங்க. மற்றபடி நயன்தாரா, திரிஷா போன்ற நடிகைகள் மாடர்ன், வில்லேஜ் இரண்டிலும் பொருத்தமா இருப்பாங்க. ஐஸ்வர்யா ராஜேஷைப் பொறுத்தவரை மாடர்னைவிட ஹோம்லி லுக் அவங்களுக்கு பொருத்தமா இருக்கும். சசிகுமார் சாரை ஹிப்ஹாப் லுக்கில் காட்ட முடியாது. அந்த வகையில் அவரவர் இமேஜுக்கு ஏற்ற மாதிரிதான் உடைகளை வடிவமைக்கணும். லாரன்ஸ் மாஸ்டருக்கும் டிரெஸ்ஸிங் சென்ஸ் அதிகம்.”

“காஸ்ட்யூம் டிசைனில் வேலைவாய்ப்பு எப்படி இருக்கு?”

“போட்டி அதிகமாகி இருக்கு. ‘கனா’ வில் ‘ஊஞ்சலா... ஊஞ்சலா...' என்ற பாடலில் யூனிபார்ம் உடை அணிந்திருப்பார்கள். அந்தப் பாடலில் 80களில் வருவது மாதிரி வண்ண வண்ண உடைகளைப் பயன்படுத்தமுடியாது. கதைக்கு ஏத்தமாதிரி பண்ணணும். இப்போது தமிழ் சினிமாவில் யதார்த்தமாக படம் பண்ணுகிறார்கள். முன்பு ஃபேஷன் டெக்னாலஜி முடித்து உதவியாளராக வேலை செய்வார்கள். இப்போ அப்படி ஒரு அவசியம் இல்லை. யூடியூப் பார்த்தே தெரிந்துகொள்கிறார்கள். ஒரு வரியில் சொல்லணும்னா காஸ்ட்யூம் துறைக்கான மதிப்பு குறைவாகி வருகிறது.”

“ஒரு படத்தில் காஸ்ட்யூமரின் பங்கு என்ன?”

“உடைகளைப் பொறுத்தவரை 70 சதவீதப்பங்கு காஸ்டியூம் டிசைனரைச் சேரும். இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர் ஆகியோரின் பங்கும் இருக்கும். நல்லா இருந்தாலும் நல்லா இல்லைன்னாலும் எல்லாருக்கும் அதில் பங்கு உண்டு.”

- சுரேஷ்ராஜா