உத்தரவு மகாராணி!



‘உத்தரவு மகாராஜா’ படத்தின் மூலம் கோடம்பாக்கத்தை கலக்க வந்துள்ளார் பிரியங்கா. கன்னடம், தமிழ், தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் பிஸியாக இருக்கிறார். ஒல்லி தேக நடிகைகளுக்கு மத்தியில் கொழுக் மொழுக் நடிகையாக களமிறங்கியிருக்கும் பிரியங்காவிடம் பேசினோம்.
“உங்க சினிமா என்ட்ரி ஆக்சிடென்ட்டா, இன்சிடென்ட்டா...?”

“கர்நாடக மாநிலம் ஷிமோகாதான் எனது சொந்த ஊர். ஏழாவது படிக்கும் போதே அப்பா காலமாகிவிட்டார். அம்மா இல்லத்தரசி. ஒரு அண்ணன். என்னுடையது சாதாரண நடுத்தரக் குடும்பம். சினிமாவுக்கும் எங்களுக்கும் எந்தவிதத்திலும் சம்பந்தம் கிடையாது.பத்தாம் வகுப்பு முடித்தபிறகு டிப்ளமோ சேர்ந்தேன். எங்க வீட்டிலிருந்து கல்லூரிக்கு 20 கிலோமீட்டர் தூரம் பஸ்ல டிராவல். அந்த பயணத்தில் நகைக்கடை விளம்பரங்களை உன்னிப்பாக கவனிப்பேன்.

உடனே தோழிகள் ‘அந்த நகை டிசைன் நல்லா இருக்கா’ என்று கிண்டல் பண்ணுவார்கள். ‘நகை மீது ஆசை இல்லை. நகையை அணிந்திருக்கும் அந்த மாடலாக வரணும்’ என்று சொல்வேன். அப்படித்தான் எனக்குள் சினிமா துளிர்விட ஆரம்பித்தது. ஆக்சிடென்டலான இன்சிடென்டுன்னு சொல்லலாம்.”“கன்னடத்தில் சீரியல் எல்லாம் பண்ணியிருக்கீங்களாமே?”

“ஒரு முறை காலேஜ் விடுமுறையில் உறவினர் வீட்டுக்கு பெங்களூர் சென்றிருந்தேன். அந்தப் பயணத்தில் ஒரு நண்பர் என்னுடைய காஸ்டியூம், நெயில் பாலிஷ் நன்றாக இருக்கு என்று விஷ் பண்ணினார்.

நான் தேங்க்ஸ் தெரிவித்ததும் ‘உங்களுக்கு சினிமாவில் நடிக்க விருப்பமா’ என்று கேட்டார். மனதுக்குள் ஆனந்தக் கூத்தாடினாலும் முன்பின் அறிமுகம் இல்லாதவர் என்பதால் பட்டும்படாமல் பேசி வைத்தேன். அந்த நண்பர் போகும்போது விசிட்டிங் கார்டு கொடுத்தார். தோழிகளிடம் நடந்த விஷயத்தை சொன்னேன். அவர்கள் பயமுறுத்தினார்கள்.

சும்மா ட்ரை பண்ணி பார்ப்போம் என்று விசிட்டிங் கார்டுல உள்ள நெம்பருக்கு டயல் பண்ணினேன். சீரியல் ஷூட் போயிட்டிருக்கு. நடிக்கிறீங்களா’ என்றார் அந்த நண்பர். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று நானும் ஷூட்டிங் ஸ்பாட் போனேன். அங்கிருக்கிறவர்களும் ‘மீரா ஜாஸ்மின், நயன்தாரா மாதிரி நீங்க அழகாக இருக்கீங்க’ என்று இஷ்டத்துக்கு ஏத்திவிட்டார்கள்.

வீட்டுக்கு வந்ததும் அம்மா விடம் நடந்ததைச் சொல்லி அனுமதி கேட்டேன். அம்மாவுக்கு இஷ்டம் இல்லை என்று தெரிந்தது. சீரியல் இயக்குநர் பெண் என்பதால் அவரை பேசச் சொன்னேன். அப்புறம் அம்மா சமாதானம் அடைந்தார்கள். அந்த சீரியலில் என்னுடைய கேரக்டர் பெயர் குலாபி. ஒரு எபிசோடில் நடிக்கப் போய் 300 எபிசோட் நடித்துக் கொடுத்தேன். அதுதான் நான்  முதலும் கடைசியுமாக பண்ணிய சீரியல்.”

“சினிமாவுக்கு எப்படித்தான் வந்தீங்க?”

“அடுத்து என்ன என்று யோசித்தபோது பெங்களுரூவுக்கு ஷிஃப்ட்டாகி தீவிரமாக பட வாய்ப்பு தேடினேன். பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு கன்னடத்தில் ‘கனப்பா’ என்ற படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து கன்னடம், மலையாளம் என்று ஐந்தாறு படங்கள் முடித்தேன். சமீபத்தில் மலையாளத்தில் ஹிட்டடித்த ‘காயங்குளம் குச்சுன்னி’யில் கூட நடிச்சிருக்கேன்.”

“தமிழுக்கு எப்படி வந்தீங்க?”

“உண்மையை சொல்வதாக இருந்தால் தமிழில் நடிக்கவேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. மாஸ் ஹீரோ படங்களின் ஆடிஷனில் பலமுறை கலந்துகொண்டிருக்கிறேன். ஆனால் சொல்லும்படியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

அந்தச் சூழ்நிலையில் உதயா சார் ஆபீஸிலிருந்து ஆடிஷனுக்கு கூப்பிட்டாங்க. கதைக்குப் பொருத்தமாக இருந்ததால் எனக்கு ஹீரோயின் சான்ஸ் கொடுத்தார். அந்த சமயத்தில் சின்ன படம்,  பெரிய படம், கேரக்டர் வேல்யூ இருக்குமா என்று எதையும் யோசிக்கவில்லை. எனக்கு தமிழில் நடிக்கவேண்டும். ‘உத்தரவு மகாராஜா’ அதற்கான ஸ்பேஸ் ஏற்படுத்திக் கொடுத்தது.”

“பிரபு, உதயாவுடன் நடித்த அனுபவம்?”
“உதயாவுக்கும் எனக் கும் வேவ்லெங்க்த் கரெக்ட்டா இருந்தது. தமிழுக்கு நான் புதுமுகம் என்பதால் உதயா தமிழ் சினிமாவைப் பற்றி சொல்லிக் கொடுத்தார். பிரபு சார் காம்பினேஷன்ல நடித்தது சூப்பர் அனுபவம். பெரிய நடிகருக்கான பந்தா இல்லாமல் எளிமையாக பேசினார். சக நடிகர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் விதத்தில் அவருடைய ஆக்டிங் இருந்தது.

கஷ்டம் என்றால் அது மொழி மட்டுமே. பெங்களூருவில் எனக்கு தமிழ் நண்பர்கள், தமிழ்ப் படங்கள் மூலம் தமிழுடன் கனெக்‌ஷன் இருந்தது. ஸ்கூல் போனாலும் கற்க முடியாததை தமிழ் சினிமா பார்த்து தமிழ் கற்றுக் கொண்டேன். ஆனால் என்ன இருந்தாலும் சாதாரணமாகப் பேசுவது வேறு, டயலாக் பேசுவது வேறு. டயலாக் பேசும்போதுதான் சிறிது தடுமாறினேன். பிறகு பிக்கப் பண்ணிவிட்டேன்.”

“அடுத்து?”
“ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்கும் படத்தில் வித்தியாசமான கேரக்டர் பண்றேன். கன்னடத்துல ரவிச்சந்திரன் மகன் மனோரஞ்சன் படம் உட்பட மூன்று படங்கள் ரிலீஸுக்கு வெயிட்டிங்.”“கிளாமர்?”“நான் சப்பி கேர்ள். உடல்வாகு பொறுத்துதான் உடை அமையும். நான் ஒல்லியான தேகம் என்றால் பிகினி அணிந்து நடிக்கவும் தயார்.

கிளாமர் பண்ணும்போது உடம்பும் கனெக்ட் ஆகணும். குண்டுப் பொண்ணு பிகினி போட்டால் காண சகிக்காது. அதே ஸ்லிம் கேர்ள் ஸ்லிம் சூட் அணிந்தால் ‘வாவ்’ என்று ரசிப்பார்கள். எனக்கு இன்னும் அது போன்ற வாய்ப்பு  வரவில்லை. வரும்போது அதைப் பற்றி யோசிப்பேன்.”

- சுரேஷ்ராஜா