இயக்குநர்களின் நடிகர்!‘வடசென்னை’ படத்தில் அமீருக்கு நண்பராக, ஆண்ட்ரியாவுக்கு உதவும் போலீஸ் அதிகாரியாக நடித்து பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறார் ‘மூணார்’ ரமேஷ். இவர் ஏற்கனவே செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘புதுப்பேட்டை’ படத்தில் தனுஷுக்கு அப்பாவாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.

குறிப்பாக ‘கடவுள் இருக்கான் குமாரு’ என்று இவர் பேசிய வசனம் மிகவும் பிரபலமானது. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு இதுவரை நூறு படங்களைக் கடந்திருக்கும் ‘மூணார்’ ரமேஷ், தன்னுடைய சினிமா பயணத்தைப் பற்றிப் பேசினார்.

“சின்ன வயசுலேருந்து நடிப்புதான் லட்சியமா?”

‘‘எனக்கு நடிக்கணுங்கிற ஆசையெல்லாம் இல்லை. நான் நடிகனானது ஒரு விபத்துன்னுதான் சொல்வேன். டிராவல்ஸ், பெயிண்டிங்ஸ் என்று பல துறைகளில் சொந்தமாக தொழில் பண்ணினேன். ஒரு தொழிலும் எனக்கு செட்டாகல. வெற்றி பெறவும் முடியல. எனக்கு தெரியாத சினிமா தொழில்தான் இப்போது சோறு போடுது.

என் நண்பர்கள் ஒரு படம் பண்ணாங்க. அவங்களுக்கு நான் உதவியாக இருந்தேன். பிறகு மெல்ல மெல்ல எனக்கும் சினிமா மீது ஈர்ப்பு ஏற்பட்டது. நான் சினிமாவுல இருக்கிறேன்னு தெரிஞ்சிக்கிட்ட என் சொந்தக்காரங்க எல்லாம் ‘தெரிஞ்ச தொழில செய்தே இவன் உருப்படல, இப்ப சினிமாவுக்குப் போய்ட்டானா.... உருப்பட்ட மாதிரிதான்’னு என் காதுபடவே கிண்டல் பண்ணாங்க. ஆனால் எதையும் காதுல வாங்கிக்காம சினிமாவில் என்னுடைய தேடலைத்  தொடர்ந்தேன்.

‘புதுப்பேட்டை’ படத்தில் தனுஷ் அப்பா கதாபாத்திரத்திற்கு ஆள் கிடைக்காமல் புதுமுக நடிகரை செல்வராகவன் தேடுகிறார் என்ற செய்தி கிடைத்தது. உதவி இயக்குனர் மூலமாக செல்வராகவனைச் சந்தித்தேன். அவரும் என்னைப் பார்த்து ஓ.கே சொன்னார். ‘எனக்கு நடிப்பில் அனுபவம் இல்லை’ என்று சொன்னேன். அவர் ‘பார்த்துக் கொள்ளலாம்’ என்றார். முதல் படத்திலேயே எனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

அந்த கதாபாத்திரம் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியாது. படம் வெளியான பிறகுதான் அந்த கதாபாத்திரத்தின் வலிமை என்னவென்பது தெரிந்தது. மேலும் என் வாழ்வில் மறக்க முடியாத கதாபாத்திரமாகவே அது மாறிவிட்டது. நடிக்கவே தெரியாமல் ‘புதுப்பேட்டை’ படத்தில் நடித்ததுதான் எனக்கு மறக்கமுடியாத அனுபவம். முதலில் ஒரு சில காட்சிகளை எளிதாக முடித்து விட்டேன்.

நான் கொலை செய்யும் காட்சியில் இயக்குனர் என்னிடம் வேலை வாங்குவதற்கு ரொம்ப கஷ்டப்பட்டார். அரை நாளில் ஒரு ஷாட் கூட சரியாக வரவில்லை. செல்வராகவன் மனதில் என்ன கற்பனை செய்து வைத்திருக்கிறாரோ அதைக் கொண்டுவர மிகவும் உழைப்பார். யாராக இருந்தாலும் அந்தக் காட்சி சரியாக வரும் வரை விடமாட்டார்.

நான் கஷ்டப்பட்டு நடித்த காட்சி சரியாக வராதபோது ரொம்ப திட்டு வாங்கினேன். ஏண்டா நடிக்க வந்தோம் என்று தோன்றியது. பின்னர் படக்குழுவினர் அனைவரும் எனக்கு ஆறுதல் சொன்னார்கள். பின்னர் சாதாரணமாக நடித்த ஒரு ஷாட் ஓகே ஆகிவிட்டது. அந்த படத்துக்குப் பிறகுதான் நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது.”

“நீங்க வெற்றிமாறனோட குட்புக்கிலேயும் இருக்கீங்க...”“ஆமாம் சார். பாலுமகேந்திரா சார் ‘அது ஒரு கனாக்காலம்’ படம் பண்ணும்போதுதான் அவரோட அசிஸ்டென்டான வெற்றிமாறனின் அறிமுகம் கிடைத்தது. அவர் இயக்கிய ‘பொல்லாதவன்’ படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்தார். அவர் இயக்கிய அனைத்துப் படங்களிலும் எனக்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார். ‘வடசென்னை’ படத்தில் வெயிட்டான போலீஸ் கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கேன்.

வெற்றிமாறனுடன் பணியாற்றுவது சிறந்த அனுபவம். அவர் இயக்கிய எல்லா படத்திலும் எனக்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து அவர் இயக்கத்தில் நடிப்பதை சாதனையாக நினைக்கிறேன்.வெற்றிமாறனிடம் உடம்பையும் உருவத்தையும் கொடுத்தால் போதும், எப்படி வேலை வாங்குகிறார் என்று நமக்கே தெரியாது.

நம்மிடம் பேசும்போது நம்மிடம் என்ன இருக்கும் என்று கணிக்கக் கூடியவர். ஒவ்வொரு படத்திற்கும் கடின உழைப்பை கொடுப்பவர். தற்போது இயக்குனராக வரவிருப்பவர்களுக்கு அவர் ஒரு முன்னுதாரணம். சினிமா, சினிமா என்று இருப்பவர். அவர் இயக்கிய நான்கு படங்களும் தரமான படங்கள்.”

“சினிமாவில் உங்க சாதனை என்ன?”

“சாதனைன்னு சொல்லலாமான்னு தெரியலை. ரொம்ப குறுகிய காலத்தில் நூறு படத்துக்கும் மேலே நடிச்சிட்டேன். டப்பிங் கலைஞராகவும் பிஸியாக இருக்கேன். கமர்ஷியல் இயக்குனர்களான சுராஜ், சுந்தர் சி மற்றும் பிரபுசாலமன், வி.இசட்.துரை உள்ளிட்ட பல இயக்குநர்களுடன் பணியாற்றிவிட்டேன். ‘இயக்குநர்களின் நடிகர்’ என்று அனைவரும் சொல்கிறார்கள். அந்த பேரு ஒண்ணே போதுமே!”

- ராஜா