பயணம் குமரவேல்



டைட்டில்ஸ் டாக்-93

சினிமாக்காரங்க எல்லோரும் ஊரிலிருந்து சென்னைக்குப் பயணம் செய்த கதையில்தான் அவங்க வாழ்க்கைப் பயணத்தை விவரிப்பாங்க. எனக்கு ஊரே சிங்காரச் சென்னைதான். அப்பா இளங்கோவன், கல்லூரி பேராசிரியர் - அம்மா புனிதவள்ளி இளங்கோவன் ஆல் இண்டியா ரேடியோ நிகழ்ச்சி தயாரிப்பாளர். நியூ காலேஜ்ல கார்ப்பரேட் டிகிரி முடிச்சேன்.

மாஸ்டர் டிகிரி பண்ணுவதற்காக பாண்டிச்சேரிக்கு முதன்முதலாகப் பயணமானேன். சங்கரதாஸ் கல்லூரியில் ‘மாஸ்டர் இன் பெர்ஃபாமிங் ஆர்ட்ஸ்’ பிரிவில் சேர்ந்தேன். உலகளவில் கலைகளை சொல்லித் தரும் படிப்பு அது. எழுத்தாளர்  இந்திரா பார்த்தசாரதி சார்தான் எங்கள் துறைத் தலைவர்.  அப்போ சமீபத்தில் மறைந்த ‘கூத்துப்பட்டறை’ நா.முத்துசாமி அய்யா கெஸ்ட் லெக்சரரா எங்களுக்கு வகுப்புகள் எடுப்பார்.

கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகும் கலைத்துறை மீதுள்ள ஆர்வத்தால் கூத்துப்பட்டறையில் என்னை இணைத்துக் கொண்டேன். அங்கு ஆறு வருஷம் இருந்தேன். அங்கிருக்கும்போதுதான் பசுபதி போன்ற நண்பர்களின் அறிமுகம். நாசர் சார் அங்கே அடிக்கடி வருவார். 
அந்தச் சமயத்தில் என் நண்பன் ப்ரவீனுடன் சேர்ந்து மேஜிக் லேன்டர்ன் என்ற நாடகக் குழுவை ஆரம்பித்தேன். எங்கள் நாடகத்தில் நாசர் ஆதித்ய கரிகாலன் வேடம் ஏற்று நடித்தார். நாடகம் எங்கள் இருவருக்கிடையே அதிக நட்பை உண்டாக்கியது. அப்படித்தான் நாசர் ‘மாயன்’ படத்தில் என்னை நடிக்க அழைத்து என்னுடைய சினிமா பயணத்தை ஆரம்பித்து வைத்தார். சினிமாவில் நடித்தாலும் நாடகம் போடுவதை நிறுத்தவில்லை.

ஒருமுறை ‘மின்னல் ரவி’  என்ற நாடகம் போட்டோம். அந்த நாடகத்தைப் பார்த்த இயக்குநர் ராதாமோகனின் நண்பர் என்னை அவரிடம் அழைத்துச் சென்றார். அப்போது ராதா மோகன் ‘அழகிய தீயே’ படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். படத்தில் எனக்கு சிறிய வேடம் என்றாலும் கதை எனக்குப் பிடித்திருந்ததால் நடிக்க சம்மதித்தேன். அந்தப் படத்தில் சித்தப்பா கேரக்டர் பண்ணினேன்.

‘அழகி’, ‘சண்டக்கோழி’, ‘மதராசப்பட்டினம்’, ‘வாகை சூடவா’ உட்பட ஏராளமான  படங்களில் நடித்திருந்தாலும் திருப்புமுனை என்றால் ராதா மோகன் படங்களைச் சொல்லலாம். அவருடன் நான் பயணித்த படங்கள்  சினிமாவில் எனக்கான அடையாளத்தை சீக்கிரமாகவே கொடுத்தது. அவருடன் இணைந்து நான் பணிபுரிந்த படங்கள் மிகப் பெரிய அனுபவம்.

ராதாமோகன் செட்டை ஹேண்டில் பண்ணும் விதம் அபாரமாக இருக்கும். ஒரு இயக்குநராக அவருக்கு பொறுப்புகள், கடமைகள் அதிகமாக இருந்தாலும் எதையும் வெளிக்காட்டாமல் எல்லோரும் கம்ஃபோர்ட் சோன்ல டிராவல் பண்ண உதவியாக இருப்பார். கோபப்படமாட்டார். யார் யாருக்கு என்ன சீன் என்பதை பேப்பரில் தெளிவாக எழுதி வைத்திருப்பார். எல்லாருக்கும் எல்லாருடைய கேரக்டர் பற்றியும் தெரியும் என்பதால் படப்பிடிப்பில் குழப்பமோ பிரச்சினையோ இருக்காது.

அதேபோல் இயக்குநர் ஏ.எல்.விஜய் படங்களில் நடிக்கும் போதும் நடிகனுக்குரிய சுதந்திரம் கிடைக்கும். யார் எப்படி சொதப்பினாலும் சிரித்த முகத்துடன் வேலை வாங்குவார்.என்னுடைய வாழ்க்கையில் சினிமா பயணம் விபத்தா, விரும்பியதா என்று கேட்டால் அதற்கு என்னுடைய பதில் தெரியாது என்பதுதான். ஆனால் இந்தப் பயணம் சுகமாக இருக்கு. பிடிச்சிருக்கு.

கஷ்டம் எல்லாத் துறைகளிலும் உள்ளது. அதை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பது கேள்வி. சினிமாவில் கஷ்டம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும்.

இந்த உலகத்தில் நிலையானது என்று எதுவும் இல்லை. நாளைய தினத்தை நினைத்து கவலைப்படுவதைவிட இன்றைய பொழுதை மகிழ்ச்சியாக வாழ கற்றுக் கொண்டாலே போதும். அந்த வகையில் எல்லா நாட்களையும் புத்தம் புது காலையாக பார்த்தால் கண்களில் பிரகாசம் தெரியும்.

என்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் நான் ஆசைப்பட்டதுதான் கிடைத்துள்ளது. நான் என்னவாக வேண்டும் என்பதை நான்தான் தீர்மானித்தேன். அதற்கு பெற்றோர் எனக்கு உதவியாக இருந்தார்கள்.

என்னுடைய பயணத்தில் குறிப்பிட்ட இடத்தை அடைய வேண்டும் என்ற இலக்கு எதுவும் இல்லை. பயணம் சுவாரஸ்யமாக இருக்கணும் என்றுதான் நினைப்பேன். ஓடை என்றால் தண்ணீர் போல் இருக்கவேண்டும். அதுபோல வாழ்க்கையை சுவாரஸ்யமாக மாற்ற கற்றுக் கொள்ள வேண்டும்.

சில படங்களில் நடிக்கும் போது உற்சாகம் பொங்கும். அப்படி கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தினாலேயே அது அடுத்த வாய்ப்புக்கான பாதையை உண்டாக்கும். அந்த வகையில் நாம் செய்யும் நல்லவைகள்தான் நம்மை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும்.

‘குரங்கு பொம்மை’ படத்தில் பாரதிராஜா சாரும் நானும் சேர்ந்து நடித்தோம். என்னுடைய நடிப்பை மனம் திறந்து பாராட்டினார். மிகப் பெரிய நடிகர்களை உருவாக்கிய அவரிடமிருந்து கிடைத்த பாராட்டை உயர்வாகப் பார்க்கிறேன். என்னுடைய இந்தப் பயணத்தில் பிரகாஷ்ராஜ், ராதாமோகன் ஆகியோருக்கு  முக்கிய இடமுண்டு.

 பிரகாஷ்ராஜ் தன்னுடைய பெரும்பாலான படங்களை ராதாமோகனை வைத்துத்தான் தயாரித்தார். ‘அழகிய தீயே’ படத்தில் நானும் பிரகாஷ்ராஜும் இணைந்து நடித்தாலும் எங்கள் இருவருக்கும் காம்பினேஷன் கிடையாது.

‘அபியும் நானும்’ படத்தில் பிரகாஷ்ராஜ் காம்பினேஷனில் நடித்தேன். படம் முழுவதும் அவர் வீட்டில் இருக்கும் வேலைக்காரன் வேடம். அந்தப் படப்பிடிப்பின்போது மொத்த படக்குழுவும் குடும்பமாகப் பழகியதை மறக்கமுடியாது.

பிரகாஷ்ராஜ் மிகப்பெரிய நடிகர். ஆனால் என்னை ராஜா மாதிரி வைத்திருந்தார். அவர் எனக்கு பணிவிடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் என்னை வீட்ல உள்ள சொந்தங்களைப் போல் கவனித்துக் கொண்டார். ஆனால் நடிப்புன்னு வரும் போது அவரிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  

நான் நாடகப் பின்னணியில் இருந்து வந்தவன். பிரகாஷ் ராஜும் நாடகப் பின்னணியில் இருந்து வந்தவர். ஆனால் அவருடைய ஆக்டிங் பிரமாதமாக இருக்கும். தன்னுடன் நடிப்பவர்களுக்கும் அந்தச் சூத்திரத்தை நாசூக்காக சொல்லிக் கொடுப்பார். அமைதியாக சொல்லிக் கொடுத்து சக நடிகர்களைத் தூக்கிவிட்டு அகம் மகிழ்வார்.

பிரகாஷ்ராஜ் நல்ல நடிகர் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் மிகச் சிறந்த கட்டிடக் கலை நிபுணர். அவருடைய பண்ணைவீட்டின் டிசைன் தொழில்முறை ஆர்க்கி டெக் மூக்கின்மீது விரல் வைக்குமளவுக்கு அசத்தலாக இருக்கும். அப்படி நடிகர் என்ற அடையாளத்தைத் தாண்டி நிறைய விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பார். இயக்குநர் ராதாமோகன் அழகாக வரைவார். நாங்கள் மூவரும் சந்திக்கும் போது சினிமா பேசுவதில்லை. அந்த நிமிடங்கள் என்னுடைய பயணத்தை அர்த்தமுள்ளதாக மாற்றும்.

கலைஞர் அவர்களின் கரங்களால் ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சிக்காக பரிசு பெற்றதும் என் பயணத்தின் சுவாரஸ்ய பக்கங்கள்தான்.

தற்போது ‘சர்வம் தாராளமயம்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் அப்பாவாக நடித்துள்ளேன். இதே படத்தில் நெடுமுடி வேணுவுடன் நடித்தது என்னுடைய பயணத்தில் எனக்குக் கிடைத்த மற்றொரு நல்ல அனுபவம். சித்தார்த்துடன் நடிக்கும் படம், விக்ரம் பிரபுவுடன் நடிக்கும் ‘அசுர குரு’, ஹிப்ஹாப் ஆதி படம் என்று பயணப் பட்டியல் நீள்கிறது.

எனக்கு மட்டுமில்ல, ஒவ்வொருவரும் தாங்கள் நேசிக்கும் பயணம் முடியக்கூடாது என்று நினைப்பார்கள். அப்படி... பயணம் முடியாமல் இருக்க வேண்டாம் என்றால் விழித்திருக்க வேண்டும். சிந்திக்க வேண்டும். சிந்தித்ததை செயலாற்ற வேண்டும்.

எதைச் செய்தாலும் ரசித்துச் செய்யவேண்டும். ரசனை பயணத்தை சுவாரஸ்யமாக மாற்றும். அப்படித்தான் நான் நடிக்கும் படங்களை ரசித்துப் பண்ணுகிறேன். என்னுடைய இந்தப் பயணத்தில் நான் குறைவான அளவுக்கே படங்கள் பண்ணியிருக்கிறேன். அதுக்குக் காரணம்  என்னை கலா ரசிகனாகவோ பொருள் மீது நாட்டம் இல்லாதவனோ என்று நினைக்கவேண்டாம். எனக்கும் அதிக படங்கள் பண்ணவேண்டும், பொருள் ஈட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கு. பொருள் எவ்வளவு வேண்டும் என்பது அவரவர் தீர்மானிக்க வேண்டியவை.

தொகுப்பு:சுரேஷ்ராஜா

(தொடரும்)