வண்டிஜோரா ஓடுது இந்த வண்டி!

படத்தின் துவக்கத்திலேயே ‘டுட்டு’ என்ற யமஹா பைக் காவல் நிலையத்தில் நிற்கின்றது. அந்த பைக் ஏன் காவல் நிலையத்திற்கு வந்தது என்கிற புள்ளியில் இருந்து கதை விரிகிறது.நாயகன் விதார்த், அவருடைய நண்பர்கள் கிஷோர், ஸ்ரீராம் ஹவுசிங் போர்டுவாசிகள். பக்கத்து வீட்டு சாந்தினி, விதார்த்திடம் கண்களால் கவிதை பாடி ரூட்டு அடிக்கிறார்.

விதார்த்துக்கு ஓட்டல் வேலை. கிஷோர் தட்டு கடையில் வேலை செய்கிறார். ஸ்ரீராம் பைக் பார்க்கிங் வேலை பார்க்கிறார். விதார்த் வேலைக்கு வண்டி தேவைப்படும்போது திருட்டு வண்டி கொடுத்து உதவுகிறார் நண்பர். முதலுக்கு மோசமில்லை என்கிற அளவுக்கு வண்டி நன்றாகவே ஓடுகிறது. ஒரு கட்டத்தில் ஏரியா ரவுடி அருள்தாஸ் ஒரு ஐபோனை ஒருவரிடம் ஒப்படைக்கும் பொறுப்பை விதார்த்திடம் கொடுக்கிறார்.

அந்த போன் விதார்த்தின் நிம்மதியைக் கெடுக்குமளவுக்கு ஏழரையாக மாறுகிறது. அதன் பிறகு விதார்த்தின் வண்டி ஆட்டம் காண்கிறது. இது தவிர படத்தில் வேறு சில கிளைக்கதைகளும் இருக்கின்றன. இதில் ஒவ்வொரு கதையும் எப்படி ஒரு இடத்தில் சந்தித்து படத்தின் டுவிஸ்ட் ஒவ்வொன்றாக அவிழ்கின்றது என்பதே மீதிக்தை.

விதார்த் எப்போதும் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்கக்கூடியவர். அந்த நற்பெயருக்கு களங்கமில்லாத அளவுக்கு இந்தப் படம் பெருமை சேர்த்திருக்கிறது. விதார்த் நடிப்பு சிறப்பு.பெட்ரோல் பங்க் ஊழியராக வரும் சாந்தினி நன்றாக நடித்திருக்கிறார். விதார்த் நண்பர்கள் கிஷோர், ஸ்ரீராம், போலீஸ் அதிகாரி ஜான் விஜய், அருள் தாஸ் உட்பட அனைவரும் கேரக்டருக்கு பெருமை சேர்க்கும் ரகம்.

கதையை நரேஷன் செய்யும் சிவாவின் குரலும், வண்டிக்குக் குரல் கொடுத்திருக்கும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனின் குரலும் அருமை. ராகேஷ் நாராயணின் கேமராதான் வண்டியின் பாதையை அழகாக காண்பிக்கும் பொறுப்பை எடுத்துள்ளது. கேமரா கோணங்கள் எல்லாக் காட்சிகளிலும் அசத்தல்.

படத்துக்கு பாடல்கள் தேவையில்லை என்றாலும் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் தன் பங்கை கச்சிதமாக செய்திருக்கிறார் இசையமைப்பாளர் சூரஜ் எஸ்.குரூப்.நீண்ட நெடிய வசனங்கள் வண்டியை அவ்வப்போது பஞ்சராக்கி பதம் பார்ப்பதை தவிர்த்திருக்கலாம்.
வித்தியாசமான கதையில் வண்டியின் பயணம் அமைந்திருப்பதால் இயக்குநர்  ரஜீஷ் பாலாவைப் பாராட்டலாம்.