செய்



உடல் உறுப்பு வியாபாரம்!

ஏற்கனவே வந்த படங்களின் சாயலில் சில படங்கள் வருவது சினிமாவில் தவிர்க்க முடியாதது.  அந்த வரிசையில் ஏற்கனவே வந்த சில படங்களின் ஜெராக்ஸ்தான் ‘செய்’.‘என்னை அறிந்தால்’, ‘காக்கிச் சட்டை’ போன்ற படங்களில் மனிதர்களின் உடல் உறுப்புகள் திருடப்படுவதுதான் கதை. மனிதர்களின் உடல் உறுப்புகள் திருடப்படுவதுதான் ‘செய்’ படத்தின் கதையும்.

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த நகுல் சினிமா ஹீரோவாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். நாயகி, அஞ்சல் முஞ்சல் சினிமா இயக்குநராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். பிறகு என்ன, இருவரையும் ஒரு சுபயோக சுபதினத்தில் காதலிக்க வைத்து விடுகிறார்கள். காதல் மட்டும் போதாது என்று நாயகனை வேலைக்குப் போகும்படி சொல்கிறார் நாயகி.

நாயகனும் அப்படியே செய்கிறார். வேலைக்குப் போன இடத்தில் ஒரு அமைச்சரின் மர்ம மரணம் சம்பந்தப்பட்ட பெரிய சிக்கலுக்குள் நாயகன் மாட்டிக்கொள்கிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் படம்.

நகுல் தனக்கே உரிய துள்ளலுடன் நடித்திருக்கிறார்.அவர் நன்றாக நடனம் ஆடுவார் என்பது தெரிந்ததே. இந்தப்படத்தில் நன்றாக சண்டையும் போடுகிறார். சில காட்சிகளில் வேகம் ஓவராய் தெரிந்தாலும் அந்தக் கேரக்டருக்கு அப்படியான ஒரு நடிப்பு தேவை என்பதை விறுவிறு திரைக்கதையில் உணர்த்தியுள்ளார் டைரக்டர்.

அஞ்சல் முஞ்சல் கிடைத்த கேப்பில் எல்லாம் தன் அழகாலும் நடிப்பாலும் ரசிக்க வைத்து விடுகிறார். நன்றாக முயற்சித்தால் கோலிவுட்டில் கலக்க வாய்ப்புள்ளது.நாசர், பிரகாஷ் ராஜ், தலைவாசல் விஜய் ஆகியோர் கொடுத்த வேடத்துக்கு நியாயம் செய்து நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார்கள். விஜய் உலகநாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

வனக் காட்சிகளில் அதிகம் கவனம் ஈர்த்துள்ளார்.நிக்ஸ் லோபஸின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் ரசிக்கும்படியாக இருக்கிறது. மலையாளத்தில்  ஏராளமான படங்களை இயக்கியுள்ள இயக்குநர் ராஜ் பாபுவுக்கு தமிழில் இது முதல் படம். தன் முதல் படைப்பை சிறப்பாகவே செய்திருக்கிறார்.