சித்தப்பா ரஜினிக்கு வில்லியாக நடிக்க ஆசை! மதுவந்தி சொல்கிறார்



கல்வியாளர், பரதநாட்டியக் கலைஞர், நாடகத் தயாரிப்பாளர், நடிகை என்று பல்வேறு முகங்கள் இவருக்கு உண்டு. பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள், ரஜினிகாந்தின் நெருங்கிய உறவினர், ஜெமினி கணேசன் வீட்டு மருமகள் என்கிற அடையாளங்களை எல்லாம் தாண்டி தனக்கென தனித்துவத்தை உருவாக்கியிருப்பதில்தான் மதுவந்தியின் வெற்றியே அடங்கியிருக்கிறது. ‘தர்மதுரை’ படத்தில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக விஜய்சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் காதலுக்கு ஆதரவாக நிற்பாரே, அவரேதான்.

‘கடம்பன்’, ‘சிவலிங்கா’ உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.சமீபகாலமாக சினிமாவில் ஆர்வம் செலுத்தி வரும் மதுவந்தியிடம் பேசினோம்.
“உங்கள் குடும்பமே தமிழகத்தின் பிரசித்தி பெற்ற பள்ளியை நடத்தி வருகிறது. உங்கள் பள்ளி நாட்கள் எப்படி?”“நண்பர்கள் எல்லோரும் என்னை ‘பார்ன் வித் சில்வர் ஸ்பூன்’ என்பார்கள். என்னை நான் அப்படி கருதிக்கொள்ளவில்லை.

ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்தவள் என்றே எண்ணிக் கொள்கிறேன். தாத்தா பார்த்தசாரதி - பாட்டி திருமதி பார்த்தசாரதி இருவரும் மிகப் பெரிய கல்வி நிறுவன ஸ்தாபகர்கள். அப்பா ஒய்.ஜி.மகேந்திரனை எல்லாருக்கும் தெரியும். சித்தப்பா ரஜினியைத் தெரியாதவர்கள் யாராவது உண்டா? சித்தி லதா ரஜினிகாந்த் மக்களுக்கு எவ்வளவோ சேவை செய்கிறார்.

நடிகர் ரவி ராகவேந்திரா என்னோட தாய்மாமா. இசையமைப்பாளர் அனிருத்கூட என்னோட மாமா பையன்தான். இதுமாதிரி எங்க குடும்பத்துலே ஒவ்வொருத்தரையா சொல்லிக்கிட்டே போகலாம்.

நம்மோட நண்பர்களை நாமே தேர்வு செய்யமுடியும். ஆனா, குடும்பம் என்பது இறைவன் கொடுக்கிற வரம். நான் பிறக்கும்போதே எங்க குடும்பம் நல்ல வசதிதான். ஆனா, எங்களையெல்லாம் நடுத்தரக் குடும்பத்தோட பண்புகளோடுதான் வளர்த்தாங்க. நாங்க பணக்காரங்க என்கிற ஃபீலிங், நான் படிச்ச காலத்தில் வந்ததே இல்லை.”

“சின்ன வயதிலேயே சினிமாவில் நடிக்க ஆசை இருந்ததா?”

“ஷூட்டிங், சினிமா விழாக்கள்னு எங்க குடும்பத்தில் எல்லாருமே பிஸியாகத்தான் இருப்பாங்க. சினிமா பின்னணி கொண்ட குடும்பம் என்பதால் எனக்குமே சினிமா மீது ஆர்வம் வந்தது இயல்புதான்.

ஆனா, எங்க பாட்டி படிப்புலே ரொம்ப கண்டிப்பு காட்டுவாங்க. அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்னு சொல்லிக் கொடுத்தாங்க. சின்ன வயசுலே எனக்கு சித்தப்பா ரஜினியின் ‘முத்து’ படத்துலேயும், கமல் சாரோடு ‘ஹேராம்’ படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. பாட்டியோட கண்டிப்புக்கு பயந்து தவிர்த்துட்டேன். அப்போ விட்ட வாய்ப்பையெல்லாம் இப்போ சேர்த்து பிடிக்கணும்னு ஆசையா இருக்கு.”

“அப்புறம் சினிமா என்ட்ரி எப்படித்தான் அமைஞ்சது?”

“இயக்குநர் சீனு ராமசாமி சார், என்னோட ‘பெருமாளே’ நாடகம் பார்க்க வந்திருந்தார். நாடகத்துல என்னோட நடிப்பைப் பார்த்துட்டு, தன்னோட ‘தர்மதுரை’ படத்துல இன்ஸ்பெக்டர் ரோல் பண்றதுக்கு வாய்ப்பு கொடுத்தார். இந்த வாய்ப்பு என்னுடைய குடும்பப் பின்னணியைப் பார்த்து வழங்கப்பட்ட வாய்ப்பு அல்ல. முழுக்க முழுக்க என்னுடைய திறமையை கருத்தில் கொண்டு அவர் கொடுத்த வாய்ப்பு. அதை சரியாதான் பயன்படுத்தியிருக்கேன்னு நெனைக்கிறேன். என்னோட அப்பா, ரொம்ப கறாரான விமர்சகர். அவரே என்னை சிறந்த நடிகைன்னு ஒப்புக்கிட்டாரு...”

“உங்க சித்தப்பா ரஜினி என்ன சொல்றாரு?”

“நான் சினிமாவில் நடிக்கிறேன்னு சொல்லுறப்போ, ‘கீழே விழுங்க. நிறைய தப்பு பண்ணுங்க. உங்களுக்கெல்லாம் வலிக்கணும். அந்த வலியில்தான் வெற்றியோட வேல்யூ தெரியும்’னு அவரோட அனுபவத்தை வெச்சி அட்வைஸ் செய்தார். நான் இப்போ சினிமாவில் நடிக்க உற்சாகமா இருக்கேன்னா அதுக்கு சித்தப்பா கொடுத்த ஊக்கம்தான் காரணம். என்னோட நாடகங்களை நிறைய முறை பார்த்திருக்கிறார். ‘தர்மதுரை’ படத்துலே முரட்டு போலீஸ் ஆபீஸரா என்னைப் பார்த்துட்டு ஆச்சரியமா பாராட்டினார்.”

“இப்போ என்ன படங்கள் செய்யுறீங்க?”
“எஸ்.ஜே.சூர்யா சார் நடிக்கிற ‘இறவாக்காலம்’. அஞ்சு இயக்குநர் சேர்ந்து இயக்கும் ‘மாமா கீ கீ’ உள்ளிட்ட படங்களில் நடிச்சிக்கிட்டிருக்கேன். தவிர்த்து நிறையபேர் கதை சொல்லிக்கிட்டிருக்காங்க...”
“எந்த மாதிரி கேரக்டர்களில் நடிக்க ஆர்வமா இருக்கீங்க?”

“நான் சினிமாவுக்கு வந்தது ரொம்ப லேட். இப்போ நாற்பது வயசைக் கடந்த நிலையில்தான் முழுக்கவனத்தையும் சினிமாவில் செலுத்தறேன். நான் முழுநேர நடிகை ஆகிட்டேன் என்பதுகூட இன்னும் இண்டஸ்ட்ரியிலேயே நிறைய பேருக்கு தெரியலை. தயங்கித் தயங்கி வந்து, ‘நீங்க இந்தக் கேரக்டர் பண்ண முடியுமா?’ன்னுலாம் கேட்குறாங்க. சன் டிவி ‘வாணி ராணி’ டிவி சீரியலில் ராதிகா ஆன்ட்டி எனக்கு நல்ல ரோல் கொடுத்தாங்க. ரசிகர்களிடம் - குறிப்பா இல்லத்தரசிகளிடம் - எனக்கு ‘வாணி ராணி’ மூலமா நல்ல ரீச் கிடைச்சிருக்கு...

எனக்கு நெகட்டிவ் ரோல் பண்றதுக்கு ஆசையா இருக்கு. ‘படையப்பா’ நீலாம்பரி மாதிரி வெயிட்டா ஒரு கேரக்டர் செய்யணும். ‘படையப்பா-2’ எடுக்கிறதா இருந்தா, சித்தப்பா கிட்டே அடம் பிடிச்சாவது அவருக்கு வில்லியா நடிச்சிடுவேன்.

இதுவரை சினிமாவில் எனக்கு காமெடி அமையலை. நாடகங்களில் காமெடியில் பின்னியிருக்கேன். காமெடி, சீரியஸ்னு எந்த ரோல் கிடைச்சாலும் ஏத்துக்கிட்டு நடிக்க தயாராக இருக்கேன்.”
“நாடகத்தில் நீண்ட அனுபவம் பெற்றவர் நீங்க. சினிமாவுக்கும் நாடகத்துக்கும் என்ன வித்தியாசத்தை உணருறீங்க?”

“நாடகம் கம்ப்ளீட்டா வேற. அது லைவ். இம்மீடியேட்டா ஆடியன்ஸ் பல்ஸ் தெரிஞ்சுடும். நாம சொதப்பிட்டோம்னா ‘ஓ’ன்னு கத்துவாங்க. சினிமாவில் சொதப்பினா, சாரி சொல்லிட்டு ரீடேக் போகலாம் என்பது வசதி. ஆனா, நடிப்புன்னு வந்துட்டா ரெண்டுக்குமே ஒரேமாதிரி உழைப்பைக் கொடுக்குறதுதான் நியாயம்.”

“கல்வியாளர், பரதநாட்டியக் கலைஞர், நாடகத் தயாரிப்பாளர், நடிகை.... இதில் எந்த மதுவந்தியை உங்களுக்கு பிடிக்கும்?”

“சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சேட்டேன் என்பதற்காக சொல்லவில்லை. ஆக்டர் மதுவந்தியைத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இத்தனை வருஷமா சினிமாவில் அந்த திறமையான நடிகையை நானே மறைச்சுவெச்சுட்டேனேன்னு வருத்தப்படறேன். பிளாக் & ஒயிட் காலத்து நாயகிகளைப் போல இயல், இசை, நாடகம் மூணுமே தெரிஞ்ச நடிகை நான்.”

“உங்களோட பள்ளிக்காலத் தோழர்கள் சினிமாவில் இருக்காங்களா?”

“கார்த்தி என்னோட பேட்ச். அவரை ‘பருத்திவீரன்’லே பார்த்தப்போ மிரண்டுட்டேன். நம்ம கார்த்தியா இதுன்னு ஆச்சரியமாயிடிச்சி. சூர்யா, எனக்கு ஸ்கூல் சீனியர். அனிருத்தெல்லாம் சின்னப் பையன். ரொம்பப் பின்னாடி எங்க ஸ்கூலில் படிச்சான்.”
“நீங்களும் சினிமாவுக்கு வந்துட்டீங்க. அப்போ நாடகங்களுக்கு எதிர்காலம் இல்லைன்னு நெனைக்கறீங்களா?”

“நாடகம் பார்க்கிற ஆர்வம் மக்களுக்கு இருக்கு. ஆனா, காசு செலவு பண்ணுறதுக்கு பயப்படுறாங்க. அதென்னவோ தெரியலை, சினிமான்னா எவ்வளவு விலை கொடுத்தாவது டிக்கெட் வாங்கிடறாங்க. நம்ம நாட்டைவிட வெளிநாடுகளில் நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. அங்கே இருக்கிற ரசிப்புத்தன்மையும், ஆர்வமும் வேற. ரசிகர்கள் ஆதரித்தால் நாடகம் நன்றாக வாழும்.”

“அந்தக் காலத்துலே ரஜினி-கமல் படங்களில் உங்கப்பாவோட காமெடி தனிச்சுத் தெரியும். வீட்டிலேயும் காமெடி செய்வாரா?”

“அவரோட கேரக்டரே எப்பவும் மத்தவங்களை சிரிக்க வெச்சு சந்தோஷப்படுறதுதான். அவரு வீட்டிலே இருந்தா எப்பவும் சிரிப்புச் சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும். எங்கம்மா ரொம்ப லக்கி. அவரைக் கட்டிக்கிட்ட இத்தனை வருஷத்துலே அவங்க சிரிக்காத நாளே இல்லை.”
“உங்களுக்கு யார் யார் ரோல் மாடல்?”

“ராதிகா ஆன்ட்டியை முதன்மையாகச் சொல்வேன். நடிகையா மட்டுமில்லாம சிறந்த நிர்வாகியாகவும் வென்றிருக்காங்க. சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டையும் அவங்க பேலன்ஸ் பண்ணி இன்னமும் பிஸியா இருக்கிறாங்க. அப்புறம், சுஹாசினி ஆன்ட்டி. நடிகை என்பதையும் தாண்டி ரொம்ப நல்ல மனசுக்காரங்க. அதுக்குப் பிறகு என்னோட பாட்டி, திருமதி பார்த்தசாரதியை சொல்லணும்.

அவங்க ஆச்சாரமான கட்டுப்பாடான குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், பெண்ணுக்குரிய தனித்தன்மையான போராடும் குணத்தால் தனி மனுஷியாக மிகப்பெரிய கல்வி சாம்ராஜ்யத்தை உருவாக்கி வெற்றிகரமா நடத்தினவங்க. என்னோட குரு டாக்டர் பத்மா சுப்பிரமணியம், எனக்கு வாழ்வதற்கான தத்துவங்களை சொல்லிக் கொடுத்தவங்க. என்னோட அம்மா சுதா மகேந்திரனிடம் பொறுமையை கத்துக்கிட்டேன். மக்கள் பணிகளுக்கு ரோல்மாடல்னா சித்தி லதா ரஜினிகாந்த்தான்.”

- சுரேஷ்ராஜா