அபிராமியைக் காணோம்!



மின்னுவதெல்லாம் பொன்தான்-8

1980களிலும் பெரும்பாலும் பாட்டும், சண்டையும், கொண்டாட்டமுமாக இருந்தது தமிழ் சினிமா.90களின் தொடக்கத்தில் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு புதிய முயற்சிகளை முன்னெடுத்தது.அதுநாள்வரை வசூல்ராஜாக்களாக இருந்த ஹீரோக்கள் தங்கள் இமேஜை தூக்கிக் கடாசி விட்டு கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க ஆரம்பித்தார்கள்.

கமல்ஹாசன் தன்னுடைய தொடக்கக் காலத்திலிருந்தே இந்தப் பண்புகளோடு இருந்தவர்தான். ஆணழகரான அவர் ‘16 வயதினிலே’ படத்தில் ஏற்று நடித்த சப்பாணி கதாபாத்திரமே இதற்கு நல்ல உதாரணம்.‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதனகாமராஜன்’ என்று பெரும் கமர்ஷியல் வெற்றிகளை குவித்த நிலையில் மீண்டும் அவர் தன்னை மீள்பரிசோதனை செய்துகொண்ட படம் ‘குணா’.

வெளியான காலத்தில் போதுமான வணிக வெற்றியை எட்டாவிட்டாலும், ‘குணா’ வெளியாகி கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் ஆகப்போகிறது. இன்றும்கூட கல்ட் கிளாசிக் அந்தஸ்தை அப்படம் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.‘குணா’வில் செக்கச் சிவந்த கமல் தன்னை கருப்பாக்கிக் கொண்டார்.

மனநிலை பிறழ்ந்த இளைஞனாக நடித்தார். குணாவின் தாய், பாலியல் தொழிலாளி. அப்படிப்பட்ட பிராத்தல் சூழலில்தான் குணா வளர்கிறான். அபிராமி மீது பித்து கொண்டவன். கிருஷ்ணனை மீரா தன் காதலனாக உருவகப்படுத்திக் கொண்டதைப் போல, அபிராமியை தன் உயிருக்கும் மேலாக நேசிக்கிறான். அவனுடைய மனதில் அபிராமிக்கு ஒரு உருவம் உண்டு.

ஒரு நாள் அந்த அபிராமியை கோயிலில் காண்கிறான். அவள் தனக்குரியவள், தனக்கு மட்டுமே உரியவள் என்கிற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்கிறான். குணா கண்ட அந்தப் பேரழகியோ பெரிய குடும்பத்தின் வாரிசு. எக்கச்சக்க சொத்து, பணம். அவளைக் கடத்திச் சென்று ஒரு மலைக்குகையில் வைத்து குழந்தை போல சீராட்டுகிறான். ‘மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல...’ என்று பாடுகிறான்.
இதுதான் ‘குணா’ கதை.

இதில் அபிராமி என்கிற கதையின் மையமான கேரக்டரில் நடித்த ரோஷிணியை, இருபதுகளில் இருக்கும் இளைஞர்கள் யாரும் இன்று அறியமாட்டார்கள்.படத்தின் கதைப்படி நாயகி பேரழகி மட்டுமல்ல. தெய்வாம்சக்கலை பொருந்தியவராகவும் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட முகத்தை பல மாதம் தேடி, கடைசியில் ரோஷிணியில்தான் அந்தத் தேடலை படக்குழு நிறுத்தியது.

அறிமுகக் காட்சியான அவர் கோயிலுக்குள் நடந்து வரும் காட்சிக்கும், பக்தர்களுக்கு அமைதியே அழகாய் லட்டு கொடுக்கும் காட்சிக்கும் அந்தக் காலத்தில் தியேட்டர்களில் விசில் பறக்கும். கமல் வரிசையில் வரும்போது பொறுமை பொறுமை என்று கைகாட்டுவதும், லட்டை எடுத்து கமல் கையில் போட்டதும் கமல் அந்த கையை முத்த மிடுவதாய் அமைந்த காட்சிகள் அனைத்தும் ‘பார்த்த விழி’ பாடலின் முன்னணிக் காட்சிகளாக மிகச்சிறப்பாக திரையில் விரிந்த அனுபவங்கள்.

கமல்ஹாசனும், ரோஷிணியும் ‘டெவில்ஸ் கிச்சன்’ என்று அழைக்கப்பட்ட கொடைக்கானல் மலைக்குகையில் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். ‘கண்மணி அன்போடு காதலன்’ பாட்டை டிவியில் பாருங்கள். உலகநாயகனின் நடிப்புத் திறமைக்கு ஈடு கொடுத்து தன் முதல் படத்திலேயே மிகச்சிறந்த நடிப்பை வெளிக்காட்டிய ரோஷிணி உங்களை ஆச்சரியப்படுத்துவார். இந்தப் படத்துக்குப் பிறகு அந்த மலைக்குகையே ‘குணா குகை’ என்று பெயர் மாற்றம் அடைந்து பிரபலமடைந்தது.

குணாவால் கடத்தப்பட்ட பிறகு குகைக்குள் மர்டான் அழகியாக மாறியிருப்பார். முதலில் பயம், பின்பு அன்பு, பிறகு காதல் என குணாவை அவர் உள்வாங்கிக் கொள்ளும் தருணங்களை அந்தக் குகைக்குள் அத்தனை பிரமாதமாக வெளிப்படுத்தியிருப்பார். அழகிலும், நடிப்பிலும் எந்தக் குறையும் இல்லாதவர்தான் ரோஷிணி.

படம் தயாரிப்பில் இருக்கும்போது தமிழ் சினிமாவின் அடுத்த கனவுக் கன்னி ரோஷிணிதான் என்கிற அளவிற்கு கொண்டாடப்பட்டார். ஆனால் படம் வெளிவந்த பிறகு நிலைமை மாறியது. என்னதான் அழகும், திறமையும் இருந்தாலும் அடுத்த பட வாய்ப்புக்கு முதல்பட வெற்றியே மூலதனம் என்கிற தமிழ் சினிமாவின் சித்தாந்தத்துக்கு ரோஷிணியும் தப்பவி–்ல்லை.

அப்போதெல்லாம் முதல் படம் தோல்வி அடைந்தாலும் அடுத்து ஒரு நான்கைந்து சிறிய படங்களிலாவது நடித்து விட்டுத்தான் செல்வார்கள். ஆனால் ரோஷிணிக்கு அந்த வாய்ப்பும் கிடைக்கவில்லையா, அல்லது ‘குணா’ தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவரே தவிர்த்து விட்டாரா என்று தெரியவில்லை. ‘குணா’ என்கிற ஒரே படத்துடன் அவர் விடைபெற்று விட்டார்.

ஒரு வேளை ‘குணா’ வெற்றி பெற்றிருந்தால் ரோஷிணிக்கு வாய்ப்புகள் குவிந்திருக்கும்; குஷ்பு, ஜோதிகா வரிசையில் நிச்சயமாக அவர்தான் சீனியர் இடத்தில் இருந்திருப்பார். ஆனால் இப்போது  ரோஷிணி எங்கிருக்கின்றார் என்றே தெரியவில்லை. சினிமா வட்டாரங்களில் விசாரித்தால், திருமணமாகி அமெரிக்காவில் குழந்தை, குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார் என்கிறார்கள். எனினும், இதுவும் உறுதியான தகவல் இல்லை.

(மின்னும்)

●பைம்பொழில் மீரான்