கலைஞரோடு பழகிய கலைஞர்!



தமிழ், தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களை இயக்கியவர் வி.சி.குகநாதன். இளம் வயதிலேயே திராவிட இயக்கத்தின் மீது தீராத பற்று கொண்ட இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களிடம் நெருங்கிப் பழகியவர்களில் ஒருவர்.கலைஞருடன் பழகிய நாட்களை ‘முத்தமிழ் அறிஞரோடு முத்தான சந்திப்புகள்’ என்கிற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

வி.சி.குகநாதன் படங்களில் ஒரு சுவாரஸ்யம் இருக்கும். சுவாரஸ்யம் என்பதைவிட நடுத்தர மக்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துகாட்டியிருப்பார். கலைஞரைப் பற்றி எழுதியிருக்கும் இந்த நூலிலும் அந்த சுவாரஸ்யம் அப்படியே இருக்கிறது முத்தான வசனங்கள், மூர்க்கத்தனமான பகுத்தறிவுப் பிரசாரம், நகைச்சுவை உணர்வு என்று கலைஞரின் அறிவாற்றல் அனைத்தையும் கவனிக்க வைக்க முயல்கின்றார்.

திரைப்படத் தொழிலாளர் நல வாரியம் உட்பட கலைஞர் திரைத்துறைக்கு செய்துகொடுத்த சலுகைகள் பற்றி இந்தப் புத்தகத்தில் விலாவாரியாக சொல்லப்பட்டுள்ளது. பக்கத்துக்கு பக்கம் விறுவிறு வாசிப்பு. உடன்பிறப்புகள் மட்டுமில்லாமல் அனைத்துத் தரப்பு ரசிகர்களும் வாசித்து மகிழலாம்.

- சுரா