எமோஷனலான குடும்ப குத்துவிளக்கு!‘கூத்தன்’ படத்தின் மூலம் அறிமுகமாகிறார் ஸ்ரீஜிதா கோஷ். கொல்கத்தா வரவான இவருக்கு தமிழில் இதுதான் முதல் படம். புதுவரவாக இருந்தாலும் இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் அச்சாரம் போட்டுவிட்டு கோலிவுட்டுக்கு வந்துள்ளார். அழகிய முகம், வசீகரிக்கும் கண்கள், குறும்புத்தனமான பேச்சு என்று காண்போரைக் கவர்ந்திழுக்கிறார். தமிழ் சினிமாவில் விஜய் ஜோடியாக நடிக்கத் துடிக்கும் அவரிடம் பேசினோம்.
“உங்களைப் பற்றி?”

“சொந்த ஊர் கொல்கத்தா. நாங்க ரொம்ப ஆச்சாரமான குடும்பம். எங்க குடும்பத்திலிருந்து நான் தான் முதல் ஆளாக சினிமாவுக்கு வந்துள்ளேன். ஆனால் அதற்காக அப்பா, அம்மாவிடம் செமத்தியா வாங்கிக் கட்டிக்கிட்டது தனிக் கதை.சின்ன வயதிலிருந்து நடனத்திலும் பாடுவதிலும் எனக்கு ஆர்வம் அதிகம். சொன்னா நம்பமாட்டீங்க. அந்த வயசிலேயே ‘நீ கலையை நோக்கித்தான் பயணமாகப் போகிறாய்’ என்று என்னுடைய உள் மனசு சொன்னது. ஆனால் என் ஆசையை வீட்டில் சொன்னால் என்ன நடக்கும் என்றும் தெரியும்.

அதனால் நல்ல சமத்தா படிப்புல கவனம் செலுத்தினேன். கையில் ஒரு டிகிரி கிடைத்ததும் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வீட்டில் என் விருப்பத்தைச் சொன்னேன். இந்த முறை எதிர்ப்புக் குரல் சன்னமாக ஒலித்ததால் கொல்கத்தாவில் உள்ள ஒரு தியேட்டர் அகாடமியில் நடிப்புக்காக ஜாயின் பண்ணினேன். பிறகு சரோஜ்கான் நடனப் பள்ளியில் மூன்று வருடம் நடனம் கத்துக்கிட்டேன். ஓரளவுக்கு என் தகுதியை வளர்த்துக்கொண்டு மும்பைக்குப்  பறந்தேன்.

ஆனால் நான் நினைத்த மாதிரி பாலிவுட் அவ்வளவு சுலபம் இல்லை என்று அங்கு போனபோதுதான் தெரிந்துகொண்டேன். ஏராளமான கஷ்டங்களையும் போராட்டங்களையும் சந்தித்தேன். அவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியிலும் சன்னி தியோல் நடித்த ஒரு படத்தில் சின்ன கேரக்டர் கிடைத்தது. முழு முதல் நாயகி என்றால் இப்போது நடிக்கும் ‘கூத்தன்’ படம் மட்டுமே.”

“இந்த ‘கூத்தன்’ வாய்ப்பு எப்படி கிடைத்தது?”

“இணை தயாரிப்பாளர் மனோஜ் கிருஷ்ணா சார் மூலம் கிடைத்தது. மனோஜ் சார் கைராசிக்காரர் என்று கேள்விப்பட்டுள்ளேன். அவர்தான் நமீதா, தேஜா உட்பட ஏராளமான நடிகைகளை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவராம். அந்த ராசி எனக்கும் ஒர்க் அவுட்டாகும் என்ற நம்பிக்கை இருக்கு.”“உங்களுக்கு என்ன கேரக்டர்?”

“என்னுடைய கேரக்டர் பெயர் ஸ்ரீலக்ஷ்மி. எமோஷனலான குடும்ப குத்துவிளக்கு என்று சொல்லலாம். படத்துல கிளாசிக்கல் டான்சரா வர்றேன். எனக்கு நடனம் கை வந்த கலை என்பதால் ஸ்ரீலக்ஷ்மி கேரக்டர் எளிதாக இருந்தது. ஹீரோவா ராஜ்குமார் பண்றார்.”
“தமிழ் சினிமா அனுபவம் எப்படி?”

“மீண்டும் மீண்டும் வேலை செய்யத் தூண்டுகிறது. இங்குள்ளவர்கள் அன்பாகப் பழகுகிறார்கள். அதிகாலையிலேயே தூக்கத்தைவிட்டு எழுந்து உழைக்க ஆயத்தமாகிவிடுகிறார்கள்.

ஏழு மணிக்கெல்லாம் லொகேஷனில் பம்பரமாகச் சுற்றுகிறார்கள். தமிழில் நடிக்க ஆரம்பித்த பிறகு என் கவனமெல்லாம் இங்குதான் சுற்றிச் சுற்றி வருகிறது. சவுத் இண்டியாவின் டாப் ஹீரோயினா வருவேன் என்ற நம்பிக்கை இருக்கு. அதற்கு அடித்தளமாக இருக்கிற தமிழ் மொழியைக் கற்று வருகிறேன்.”

“யாரோடு ஜோடி சேர ஆசை?”
“விஜய் சாருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும். அவருடைய ஸ்டைல், டான்ஸ் என்று திரையில் அவர் பண்ணும் மேஜிக் அற்புதமா இருக்கும். அடுத்து தனுஷ் சாரையும் பிடிக்கும். சின்ன வயதிலேயே தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய ஆக்டர்.”
“கிளாமர்?”

“தவிர்க்க முடியாதது. ஒரு நடிகையா இருந்தா எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் நடித்து தான் ஆகவேண்டும். எப்படிப்பட்ட கிளாமர் ரோல் பண் றோம் என்பது முக்கியம். எனக்கும் கிளாமர் பண் ணத் தெரியும் என்று பண்ணும்போது மக்களுக்கு சலித்துவிடும். சினிமாவில் நான் கத்துக்குட்டி. முதலில் நல்ல கதை அம்சமுள்ள படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும். சில படங்களின் ஸ்கிரிப்ட் டிமாண்ட் பண்ணும். அப்போது அதைப் பற்றி யோசிப்பேன்.”

“சினிமாவில் பெண்களுக்கான பாதுகாப்பு எப்படியிருக்கு?”
“சினிமாவில் மட்டுமில்லை, இந்தியா முழுவதும் எல்லாத் துறைகளிலுமே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்திருக்கிறது. நானும் அதுபோன்ற பிரச்னைகளைச் சந்தித்துள்ளேன். ஆனால் பயப்படும்படியான மோசமான அனுபவம் எதுவும் இல்லை.
நம் நாட்டைப் பொறுத்தவரை பள்ளியிலேயே பெண்களுக்கான கொடுமைகள், அவமானங்கள் துவங்கிவிடுகிறது.

மாணவிகள் ஸ்கர்ட் மாதிரி குட்டையான சீருடைகளை அணிந்து வரும் போது சக மாணவர்களால் மோசமான வர்ணனைகளைக் கேட்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். சந்தடிமிக்க கடைத் தெருக்களில் நடக்கும்போதோ, நெரிசல் மிக்க பேருந்து பயணங்களிலோ உரசல் மன்னர்கள் தங்கள் இச்சையைத் தீர்த்துக்கொள்கிறார்கள்.

ஆண்கள் மனதில் வன்மத்தைத் தூண்டுவது பெண்களின் உடை இல்லை; மனதுதான் வன்மத்தின் முதல் புள்ளி. மனதளவிலேயே ஒரு பெண்ணை உடன் பிறந்த சகோதரியாகவோ, அன்னையாகவோ நினைத்தால் பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடலாம். இதில் துயரமான விஷயம் எது என்றால் இந்தியாவில் மீண்டும் மீண்டும் இதுபோன்ற அத்துமீறல்கள் நடப்பதுதான்.

பெண்களுக்கு நான் சொல்லும் ஆலோசனை இதுதான். உங்களிடம் பழகும் ஆண் நண்பர் நல்லவரா, கெட்டவரா என்பதைத் தெரிந்துகொண்டு பழகுங்கள். எந்த கட்டத்திலும் உங்கள் ஆண் நண்பர் அதீத உரிமை எடுக்குமளவுக்கு இடம் கொடுக்காதீர்.

உங்கள் எண்ணம் போல் வாழுங்கள்; விருப்பம் போல் வாழுங்கள். இது உங்களுக்கான வாழ்க்கை.”“அடுத்து?”“தெலுங்கு, கன்னட மொழிகளில் தயாராகும்  www.meenabazar.com என்ற படம் பண்றேன். சோஷியல் எலிமென்ட்ஸை உள்ளடக்கிய படம்.”

- சுரேஷ்ராஜா