பரியேறும் பெருமாள்



நீலம் வெல்லும்!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு குக்கிராமம் புளியங்குளம். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பரியேறும்பெருமாள் என்கிற இளைஞன், இந்தக் கிராமத்திலிருந்து சட்டம் படிக்க திருநெல்வேலிக்கு வருகிறான். அவனுடைய பின்னணி, சட்டக்கல்லூரியில் அவன் எதிர்கொள்ளக்கூடிய சாதிய அடக்குமுறைகள்தான் படம்.

ஒரு மனிதனின் இயல்பான, நியாயமான விருப்பங்களைக்கூட அவன் பிறந்த சாதியின் காரணமாக நிறைவேற்றிக்கொள்ளமுடியாத அவலமான சூழலை துல்லியமாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் புதுமுக இயக்குநர் மாரி செல்வராஜ்.“சட்டம் படித்துவிட்டு டாக்டர் ஆவேன்” என்று சொல்லும்போது சிரிக்கவைக்கும் பரியேறும் பெருமாள், அடுத்து “டாக்டர் அம்பேத்கர் ஆவேன்” எனும்போது தியேட்டரையே ஆர்ப்பரிக்க வைக்கிறார்.

பரியேறும் பெருமாளாக கதிர் நடித்திருக்கிறார். அவருடைய அப்பாவியான தோற்றமும், தேவைப்படும்போது காட்டும் சீற்றமும் அபாரம். காதலா, நட்பா என்கிற குழப்பத்திலேயே கதிரை துரத்தித் துரத்தி நேசிக்கும் கதாபாத்திரம் ஆனந்திக்கு. கதிர் - ஆனந்தி ஜோடிப்பொருத்தம் பிரமாதம்.

கதிரின் சட்டக்கல்லூரி நண்பனாக வரும் யோகிபாபு, அசால்ட்டான நடிப்பில் படத்தை கலகலப்பாகக் கொண்டு செல்ல உதவுகிறார். “ஜாதி பார்த்தாடா உங்கிட்டே பழகினேன்” என்று அவர் கொந்தளிக்கும்போது, தனக்கு நடிக்கவும் வரும் என்று நிரூபிக்கிறார்.

ஆனந்தியின் அப்பாவாக நடித்திருக்கும் இயக்குநர் மாரிமுத்து, உறவுக்காரராக வரும் லிஜீஸ், கல்லூரி முதல்வராக ‘பூ’ ராமு என்று அனைவருமே கதாபாத்திரத்துக்கு ஏற்ற தோற்றங்கள். குறிப்பாக கதிரின் அப்பாவாக நடித்திருக்கும் தங்கராஜ், சில காட்சிகளே என்றாலும் ஒட்டுமொத்த அனுதாபத்தையும் சம்பாதிக்கிறார்.

அவருடைய கதாபாத்திரம், இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்படாத வித்தியாசமான தன்மையைக் கொண்டிருக்கிறது. போலவே, வில்லத்தனமான வேடத்தில் வரும் கராத்தே வெங்கடேசன். ‘குலதெய்வத்துக்கு செய்யுற சேவை’ என்று சொல்லிக்கொண்டு அவர் செய்யும் ஒவ்வொரு கொலையும் நடுமுதுகை சில்லிடச் செய்கிறது.

மிகச் சாதாரணமான காதல் கதையாக ஆகிவிட்டிருக்கக் கூடிய இப்படத்தை சாதிய ஏற்றத்தாழ்வுகளைச் சுட்டும் காட்சிகளால் சிறந்த படமாக மாற்றியிருக்கிறார் மாரிசெல்வராஜ்.சந்தோஷ்நாராயணனின் இசை, இயக்குநருக்கு பெரும் பலம். ‘கருப்பி கருப்பி’, ‘நான் யார்’ பாடல்கள் மூலமாக ‘சினிமாவுக்கு பாட்டுகள் தேவையா?’ என்கிற அரதப்பழசான பட்டிமன்றத்துக்கு அனாயாசமாக தீர்ப்பு எழுதுகிறார்.

ஸ்ரீதரின் ஒளிப்பதிவு தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களின் வெயிலை படம் பார்ப்பவர்களுக்கும் கடத்துகிறது.நீலம் என்பது நிறமல்ல என்பதை அழுத்தம் திருத்தமாக உணர்த்தியிருக்கும் இயக்குநரும், தயாரிப்பாளர் பா.ரஞ்சித்தும் பாராட்டுக்குரியவர்கள்.