முதல் படம் வெளிவரும் முன்பே மூன்று படங்களில் ஹீரோ!



முதல் படம் வெளிவருவதற்கு முன்பே மூன்று படங்களில் புக் ஆவதெல்லாம் ஹீரோயின்களுக்குத்தான் சாத்தியம். அந்த வழக்கத்தை உடைத்திருக்கிறார் வி.ஆர்.விநாயக். ‘அவதார வேட்டை’ மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்திருப்பவர், அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பாகவே ‘சிரிக்க விடலாமா?’, ‘ராஜாவுக்கு ராஜா’ படங்களை முடித்துவிட்டார்.

“அதென்ன ‘அவதார வேட்டை’ன்னு வித்தியாசமான டைட்டில்?”

“இது குழந்தைகளைக் குறிவெச்சு கடத்துற கும்பல் பற்றிய கதை. எதுக்கு குழந்தைகளைக் கடத்துறாங்க, ஹீரோ எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை ஆக்‌ஷன், காதல் மற்றும் காமெடி கலந்து கமர்ஷியலாகச் சொல்லுறோம்.”“படத்தைப் பற்றி சொல்லுங்க!”

“ராதாரவி அண்ணனுக்குத்தான் நன்றி சொல்லணும். ‘அவதார வேட்டை’யில் அவர் முக்கியமான வேடத்தில் நடிச்சிருக்காரு. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிப்பு நுணுக்கங்களை அவரிடமிருந்து கற்றுக் கொண்டது ரொம்ப பயனாக இருந்தது. படத்துலே எனக்கு ஜோடியா மீரா நாயர் நடிச்சிருக்காங்க. இவங்க ஏற்கனவே ‘சிகை’ படத்தில் ஹீரோயினா நடிச்சவங்க. அவங்களை துரத்தித் துரத்தி லவ் பண்ணுற கேரக்டர் எனக்கு. எனக்கும் அவருக்குமான ஆன்ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரி ரொம்ப பிரமாதமா வொர்க் அவுட் ஆகியிருக்கு.

சோனா மேடம் முக்கியமான ரோல் பண்ணியிருக்காங்க. படத்துலே அவங்களுக்கு எந்த இடத்திலும் கிளாமர் சீன்ஸ் இருக்காது. ‘தயா’ படத்தில் லக்ஷ்மி அம்மா பண்ணிய ரோல் மாதிரி இதில் அசத்தலான வேடத்தில் நடிச்சிருக்காங்க. காமெடிக்கு பவர் ஸ்டார் சீனிவாசன், நெல்லை சிவா ஆகியோர் இருக்கிறார்கள். ரியாஸ்கான், சம்பத், கராத்தே ராஜா போன்ற சீனியர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும்.”

“படத்துலே வேறென்ன ஹைலைட்?”

“படத்துலே ஹைலைட்டான விஷயம்னா ஃபைட் சீன்தான். ஃபைட் சீன்ல ரிஸ்க் அதிகம் இருந்தது. அதுக்காகவே ஃபைட் மாஸ்டர் த்ரில்லர் முருகன் சிறப்புப் பயிற்சி கொடுத்தார். ஒரு காட்சியில் வெடிகுண்டு வெடித்து சிதற வேண்டும்.

அந்தக் காட்சியில் நான், ராதாரவி, சோனா ஆகிய மூன்று பேரும் தப்பித்தது கடவுள் புண்ணியம். ஏன்னா அந்தக் காட்சியில் வெடிகுண்டுத் துகள்கள் அருகிலிருந்த கண்ணாடி மீது வீழ்ந்ததும் கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது.கண்ணாடிச் சில்லு எங்கள் மூணு பேரையும் பதம் பார்த்திருக்க வேண்டியது, ஜஸ்ட் மிஸ்.”

“டெக்னீஷியன் டீம்?”

“இயக்குநர் ஸ்டார் குஞ்சுமோன் ஏராளமான குறும்படங்கள், விளம்பரப் படங்கள் பண்ணியவர் என்பதால் ஒவ்வொரு ஷாட்டையும் விளம்பரப் படத்துக்குரிய பிரம்மாண்டத்தோட படமாக்கியுள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளை யதார்த்தமா படமாக்கிய விதத்தில் ஒளிப்பதிவாளர் காசி விஸ்வா பேசப்படுவார். மைக்கேல் மியூசிக் பண்ணியிருக்கிறார். இமான் உதவியாளர்.  பாடல்களை வெரைட்டியாகக் கொடுத்துள்ளார். இந்தப் படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படுவார்.”

“உங்களைப் பற்றி...”

“என்னைப் பற்றிச் சொல்வதாக இருந்தால் தமிழ் எனக்கு தாய்மொழி இல்லையென்றாலும் சினிமா ஆசையில் பல வருடங்களுக்கு முன் சென்னையில் செட்டிலாகிவிட்டேன். பூனே நமீத் கபூர் பிலிம் இன்ஸ்டிடியூட் ப்ராடக்ட் நான். சென்னையில் தெரிந்த நண்பர்களிடம் வாய்ப்பு கேட்டேன். அதில் அவமானம், ஏமாற்றம் என எல்லா அனுபவமும் கிடைத்தது.

ஆனால் அவமானத்தை தோல்வியாகப் பார்க்காமல் தொடர்ந்து வாய்ப்பைத் தேடினேன். அப்படி கிடைத்த வாய்ப்புதான் ‘அவதார வேட்டை’. நடிகர்களில் என்னுடைய பேவரைட்னா விஜய் சேதுபதி. அவர் மாதிரி படத்துக்கு படம்  வித்தியாசமான வேடங்களில் நடித்து என்னோட திறமையை வெளிப்படுத்தி பெஸ்ட் ஆக்டர் என்ற பெயர் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.”“அடுத்தடுத்த படங்கள்?”“இப்போ ‘அவதார வேட்டை’யில்தான் பிஸியாக இருக்கோம். அடுத்தடுத்த படங்கள் வெளிவரும்போது அவைபற்றி பேசுவோம்.”

- எஸ்