கார்ட்டூனிஸ்ட் டைரக்டர் ஆன கதை!‘முண்டாசுப்பட்டி’ வெற்றிப் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ராம்குமார். ஓர் இயக்குநருக்கான வழக்கமான சினிமா பந்தா இல்லாமல், டிகிரி முடித்துவிட்டு வேலை தேடும் சாதாரண இளைஞர் போன்ற தோற்றத்தில் இருக்கிறார். திருப்பூர்க்காரரான இவர் கவிதை, கட்டுரை, கார்ட்டூன் என்று சொந்த ஆர்வத்தில் வளர்ந்தவர். பிரபலமான வார இதழ் ஒன்றில் கார்ட்டூன் வரைந்திருக்கிறார், ஜோக்குகள் எழுதியிருக்கிறார். மீண்டும் விஷ்ணு விஷாலுடன் ‘ராட்சசன்’ படத்தில் கை கோர்த்திருப்பவரிடம் பேசினோம்.

“முதல் படமே நகைச்சுவைப் படம். தடாலடியாக ‘ராட்சசன்’ என்கிற ஆக்‌ஷன் டைட்டிலை அடுத்த படத்துக்கு வைத்திருக்கிறீர்களே?”

“படம் பார்த்தவர்களுக்கே அதுதான் பெரிய ஆச்சரியம். ஏன்னா, ‘முண்டாசுப்பட்டி’ வயிறை வெடிக்கச் செய்யுமளவுக்கு காமெடிப் படமாக வந்திருந்தது. இது மர்டர் மிஸ்டரி. ஒரே மாதிரி வேண்டாம் என்று நினைத்து இந்தப் படத்தைப் பண்ணினேன்.

ஒரு ரசிகனா எனக்கு எல்லா வகையான படமும் பார்க்க பிடிக்கும். ஒரு காமெடி படம் கொடுத்துவிட்டால் அவருக்கு காமெடிதான் வரும் என்ற முத்திரை வீழ்ந்துவிடும். எனக்கு அந்த முத்திரை வேண்டாம். என்னைப் பொறுத்தவரை காமெடி படமோ, ஆக்‌ஷன் படமோ அதை எவ்வளவு சிறப்பாகச் சொல்ல முடியுமோ அதுக்கான முயற்சி எடுத்துப் பண்ணுகிறேன்.

‘ராட்சசன்’ தமிழ் ஆடியன்ஸுக்கு புதுக்களமாக இருந்திருக்கும். சைக்கோ கொலைகள் பற்றி செய்தித்தாள்களில் கேள்விப் பட்டதோடு சரி, அதை நம் மக்களுடன் கனெக்ட் பண்ணி எடுத்தபோது வரவேற்பு கிடைத்தது. ஸ்கிப்ரிட்டுக்காக ஒரு வருடம் செலவு பண்ணினேன். அதற்கான பலன் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.”

“விஷ்ணு விஷால் கேரக்டரைவிட வில்லன் கேரக்டரின் டாமினேஷன் அதிகமா இருக்கே?”

“ஆமாம். அதற்கு விஷ்ணு விஷாலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது அவருக்கு நம்பிக்கை அதிகம். அந்தக் காரணத்தாலேயே கேள்வி கேட்காமல் இந்தப் படத்தில் நடித்தார். விஷ்ணு விஷாலின் ஒவ்வொரு நாள் இன்வால்வ்மென்ட்டும் அதிகமாக இருக்கும். ஒரு சீனியர் நடிகர் போல் இல்லாமல் கற்றுக்கொள்ளும் மாணவன் போல்தான் படப்பிடிப்புக்கு வருவார். நான் திருப்தி அடைந்தாலும் இன்னொரு டேக் போகலாம் என்பார். விஷ்ணுவைப் பாராட்டுவதாக இருந்தால் அவருடைய டெடிகேஷனுக்காக பாராட்டுவேன்.”

“அமலாபால்?”
“இந்த டீச்சர் ரோலுக்கு தென்னிந்திய சாயலில் நதியா மாதிரி ஒரு முகம் தேவைப்பட்டது. அதற்கு அமலா பால் பொருத்தமாக இருந்தார். அவர் ஸ்கிரீன்ல வரும்போது கேர்ள் நெக்ஸ்ட் டோர் ஃபீல் கொடுத்திருப்பதை கவனித்திருப்பீர்கள். டீன் ஏஜ் பசங்களின் டீச்சர் என்றால் தோற்றத்தில் நம்பகத்தன்மை வேண்டும். அந்த வகையில் எங்க டீம்ல இருந்த எல்லாருடைய சாய்ஸாக அமலா பால் இருந்தார். டீச்சர் கேரக்டர் பொறுத்தவரை ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு தேவைப்பட்டது. அதை அமலா பால் இயல்பாகப் பண்ணினார். நடிப்பைப் பொறுத்தவரை எந்த இடத்திலும் ரீ டேக் இல்லாமல் பண்ணினார்.நான் நினைத்ததைவிட பெட்டர் பெர்ஃபா மன்ஸைக் கொடுத்தார்.

என்னுடைய ஃபேவரைட் ஆர்ட்டிஸ்ட்டான ராம்தாஸ், முனீஸ்காந்த், காளிவெங்கட் ஆகியோரும் நல்லா பண்ணினாங்க. அவர்கள் இருந்தால் எந்த இடத்திலும் நான் பயப்படத் தேவையில்லை. அவங்க நடிக்கும் போது ஹேப்பியா இருப்பேன். எமோஷனல் சீன்ல முனீஸ்காந்த் நடிக்கும்போது படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த ஜனங்க கைதட்டினார்கள். அதே ரெஸ்பான்ஸ் தியேட்டரிலும் கிடைத்தது.

ராதாரவி, நிழல்கள் ரவி ஆகியோருடன் பணி புரிந்தது நல்ல அனுபவம். தலைமுறை இடைவெளி இல்லாமல் பழகுகிறார்கள். சீனியர் நடிகர்கள் புது இயக்குநர்களிடம் காட்டும் மரியாதை அதிகம். அவர்கள் ஒர்க் பண்ணாத இயக்குநர்களே இல்லை. அவர்கள் தங்களை சீனியர் என்று எங்கும் காட்டவில்லை. ஸ்பாட்டில் இயக்குநர்தான் கேப்டன் என்று நம்புகிறார்கள்.”

“டெக்னீஷியன்கள் பற்றி?”

“ஒளிப்பதிவாளர் சங்கர் நான் குறும்படம் எடுத்த சமயங்களிலிருந்து பழக்கம். ‘முண்டாசுப்பட்டி’ நல்லா வரக் காரணமானவர்களில் அவரும் ஒருவர். எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்ததால் சிறப்பாக வேலை பார்க்க முடிகிறது. 100 சதவீத உழைப்பை கொடுக்கத் தயங்காதவர். இந்தப் படத்துக்காக ஜிப்ரானுக்கு விருது கிடைக்கும் என்று படம் பார்த்தவர்கள் சொல்கிறார்கள். ஏன்னா, இசை பெரிய பலமாக இருந்தது. நான் பாதி படத்தைத்தான்  எடுத்தேன். மீதி படத்தை அவர்தான் முடித்தார். கதை எழுதும்போதே சில இடங்களில் இசை என்று எழுதி வைத்தேன். டயலாக் கம்மியாக வைத்தேன். அதை ஜிப்ரான் அழகாக ஃபில்லப் பண்ணினார்.

எடிட்டர் ஷான் லோகேஷ் அட்டகாசமான உழைப்பைக் கொடுத்தார். படம் வெளிவருவதற்கு முன்பே டிவிட்டர்ல ஷேர் பண்ணியிருந்தார்கள். படம் பார்க்கும்போது க்ரிப்பாக இருந்திருப்பதை ஃபீல் பண்ணியிருப்பீங்க. சும்மா இல்ல. அது அவருடைய ஒரு வருட உழைப்பு. இந்தப் படத்தில் பழகுவதற்கு இனிமையானவர்கள் கிடைத்தார்கள். எல்லாருமே  திறமைசாலிகள். ஆனால் தலைக்கனம் இல்லாதவர்கள். எனக்கு அந்த மாதிரி குணம் உள்ளவர்கள் தான் செட்டாவார்கள்.

தயாரிப்பாளர் டில்லிபாபு மறக்கமுடியாத நல்ல உள்ளம். இந்தப் படத்தைத் தயாரிக்க நிறைய பேரை சந்தித்தேன். தயாரிப்பாளரைத் தேடி ஏழெட்டு மாதம் அலைந்தேன். காமெடி படம் எடுத்தவர் சீரியஸ் படம் எடுக்கமுடியுமா? என்று தயங்கினார்கள். டில்லி சாருக்கு இயல்பாகவே  த்ரில்லர் படங்கள் பிடிக்கும். என்னிடம் சினிமா அனுபவம் இருக்கிறதா என்பதை மட்டுமே  எதிர்பார்த்தார்.

அடுத்து கதையை எதிர்பார்த்தார். நான் சொன்ன கதை அவருக்குப் பிடித்திருந்தது. அவரிடம் எப்படி கதை சொன்னேனோ அதை அப்படியே எடுத்துக் கொடுத்ததில் அவருக்கு ரொம்ப சந்தோஷம். பொதுவாக ஒரு படத்தை முடிப்பதற்குள் இயக்குநர் - தயாரிப்பாளர் இடையே சில கருத்துவேறுபாடுகள் வரும். படத்தோட ரிசல்ட் தயாரிப்பாளரை குஷியாக்கியுள்ளது.”
“சினிமாவுக்கு எப்படி வந்தீங்க?”

“சொந்த ஊர் திருப்பூர். நல்லா கார்ட்டூன் போடுவேன். இயக்குநர் சிம்புதேவன் சாரும் கார்ட்டூனிஸ்ட் என்பதால் அவரிடம்தான் வாய்ப்பு கேட்டேன். சந்தோஷமா சேர்த்துக்கிட்டாரு. ஆனா, குடும்பச் சிக்கல்களால் அவரிடம் ஒர்க் பண்ணமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

‘முண்டாசுப்பட்டி’ உட்பட ஏழெட்டு குறும்படங்கள் எடுத்தபோது சினிமாவுக்கான அனுபவம் கிடைத்தது. இப்போது நான் இரண்டு படங்களை இயக்கியிருந்தாலும் சிம்புதேவன் சாரிடம் ஒர்க் பண்ணமுடியவில்லையே என்ற ஆதங்கம் மனதுக்குள் இருக்கிறது. எது எப்படியோ, நான் தொடர் வெற்றிப் படங்கள் கொடுப்பதில் சாருக்கு சந்தோஷம்.”

“அடுத்து?”

“ஃபேன்டஸி கதை பண்றேன். தனுஷ் ஹீரோவா பண்றார். லைன் சொல்லி ஓ.கே. வாங்கிவிட்டேன். எப்போ ஷூட்டிங் போகலாம் என்று தனுஷ் சார் கேட்டார். நான் எப்பவுமே கதையை முழுமையா நம்புவேன். என் இரண்டு படங்களையும் அப்படித்தான் உருவாக்கினேன். அதனால் தனுஷ் சாரிடம் கொஞ்சம் டைம் கேட்டுள்ளேன். சில மாதங்களில் ஸ்கிரிப்ட் பணி முழுமை அடைந்துவிடும். பிரபல நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தனுஷ் இயக்கி நடிக்கும் படம் உள்பட இரண்டு படங்களின் வேலை முடிந்ததும் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளேன்.”

“உங்கள் அனுபவத்தில், புதிதாக வரும் இளம் இயக்குநர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?”

“நல்ல கதையும், திரைக்கதையும் இருந்தால் கட்டாயம் இங்கே வாய்ப்பிருக்கிறது. எனக்கு எந்த பின்புலமும் கிடையாது, எனக்காக யாரும் சிபாரிசு பண்ணியதில்லை. எனக்கும் சினிமாவில் தெரிந்தவர்கள் என்று யாரும் இல்லை. நானாக முயற்சி செய்து முயற்சி செய்துதான் சினிமாவுக்கு வந்தேன்.தயாரிப்பாளர்களைப் பொறுத்தவரை நம்முடைய பின்புலம் இரண்டாவது பட்சம்தான்.

நம்மிடம் நல்ல கதை இருக்கிறதா என்றுதான் பார்க்கிறார்கள். இப்போது சினிமாவுக்கான வாசல்கள் திறந்தே இருக்கிறது. உங்கள் உழைப்பையும் அறிவையும் குறும்படத்தில் காட்டுங்கள். சி.வி.குமார் சார் என்னுடைய குறும்படத்தைப் பார்த்தார், என்னுடைய திரைக்கதையைப் பார்த்தார். நன்றாக இருக்கவே ஒப்புக்கொண்டார்.”

“தரமான ஸ்கிரிப்ட்டுக்கு அளவுகோல் என்ன?”

“என்னுடைய ஸ்கிரிப்ட் தரமானது என்று எப்போதும் சொல்லமாட்டேன். அன்றும் சரி, இன்றும் சரி நல்ல ஸ்கிரிப்ட்டுக்கான அளவுகோள் மக்களுக்குப் பிடிக்க வேண்டும் என்பதே.”

- சுரேஷ்ராஜா