மின்னுவதெல்லாம் பொன்தான்!புதிய தொடர் 1

சின்ன குஷ்பூவாக மலர்ந்திருக்க வேண்டியவர்!

‘என் ராசாவின் மனசிலே’ மிகப்பெரிய வெற்றியை எட்டியிருந்த நேரம். சினிமா விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும் இருந்த ராஜ்கிரண், ஒரு ஹீரோவுக்கான எந்த இலக்கணமும் இல்லாமலேயே மிகப்பெரிய ஹீரோவாகி விட்டார். ரஜினிக்குப் பிறகு ஒரு கோடி சம்பளம் அவருக்குத்தான் என்று ஊடகங்கள் புகழ்மாலை வாசித்துக் கொண்டிருந்தன.

அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று ஆவலோடு அத்தனை பேரும் காத்துக் கொண்டிருந்தபோது, ஹீரோவாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் இயக்குநராகவும் களமிறங்குகிறேன் என்று அதிரடியாக அறிவித்தார். தமிழ் சினிமாவையும், ரசிகர்களையும் ஒட்டுமொத்தமாக கவன ஈர்ப்பு செய்த அந்தப் படம்தான் ‘அரண்மனை கிளி’.

படத்தின் பெயரே ஹீரோயினை அடிப்படையாகக் கொண்டது என்பதால், அந்தப் படத்தில் நடிக்கப் போகும் பிரபலமான ஹீரோயின் யாரென்று தெரிந்துகொள்ள எல்லோரும் ஆவலாக இருந்தார்கள். குஷ்பூ  உச்சத்தில் இருந்த நேரம்.

அவருக்கு சேலத்தில் ரசிகர்கள் கோயிலெல்லாம் கட்டி ஜமாய்த்துக் கொண்டிருந்தார்கள். எனவே, அவர்தான் ராஜ்கிரண் படத்து ஹீரோயின் என்றெல்லாம் பத்திரிகைகளில் எழுதப்பட்டது. ரேவதி, சுகன்யா, சிவரஞ்சனி, கஸ்தூரி, ரஞ்சிதா, பானுப்ரியா என்று அவரவருடைய விருப்பமான நாயகிகளின் பெயர்களைச் சொன்னார்கள்.

எல்லோருடைய எதிர்பார்ப்புகளையும் தவிடுபொடியாக்கினார் ராஜ்கிரண். தமிழ் சினிமாவின் பெரிய ஹீரோயின்களைத் தவிர்த்து, மும்பையிலிருந்து ஒரு புதுமுகத்தை இறக்குமதி செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவர்தான் அஹானா.அப்படியே குஷ்பூவின் சாயலில் முகத்தோற்றம். அதே கொழுக் மொழுக் உடல்வாகு. குஷ்பூவைப் போலவே அஹானாவும் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதும் இன்னொரு ஒற்றுமை.

அஹானாவின் வண்ணப் படங்களை அட்டையில் பிரசுரித்து, ‘சின்ன குஷ்பூ’ என்று கொண்டாடின ஊடகங்கள். படத்திலும் அவரது அறிமுகக் காட்சியை ஹீரோக்களுக்கு இணையாக அமைத்திருந்தார் ராஜ்கிரண்.ஒரு பிரும்மாண்டமான அரண்மனை காட்டப்படும். அரண்மனை மாடத்தில் கொலுசுகள் ஒலிக்க தோழிகளுடன் கலகலவென சிரித்துக்கொண்டே இளவரசியாக ஓடிவருவார் அஹானா.

பூஜை அறைக்கு வந்து நிற்பார். அவருடைய சித்தப்பா, நெற்றியில் திலகம் வைத்து ‘நீ நல்லா இருக்கணும்மா’ என்று வாழ்த்துவார். சென்டிமென்டாக ஒரு புதுமுகத்தை இதைவிட சிறப்பாக வேறு யார் வரவேற்க முடியும்? ராஜ்கிரண் சிவப்புக் கம்பளம் விரித்து அஹானாவை வரவேற்றார்.

‘அரண்மனை கிளி’ படத்தின் ஆரம்பக் காட்சிகளில் அஹானாவுக்கு ஹேர்ஸ்டைல், மேக்கப், மேனரிசம் எல்லாமே அசலாக குஷ்பூ மாதிரியே அமைக்கப்பட்டிருந்தன.

‘அரண்மனைக் கிளி’யான அஹானா, கோயில் சாமி சப்பரங்களைத் தூக்கும் ராசய்யாவை (ராஜ்கிரண்) காதலிக்கிற கதை.

‘வான்மதியே... வான்மதியே.... தூது செல்லு வான்மதியே...’ என்கிற பாட்டில் இனிமையை தேனாய் ஊற்றி இளையராஜா கொடுக்க, அஹானாவை அற்புதமாகப் படம் பிடித்து அழகியலாகக் காட்டியிருந்தார் ராஜ்கிரண்.

‘குஷ்பூ மாதிரியே ஒரு பொண்ணை ராஜ்கிரண் நடிக்க வெச்சிருக்காராம்பா’ என்று தியேட்டருக்கு குடும்பம் குடும்பமாக வந்தார்கள் மக்கள்.
படம் வெற்றிதான்.அஹானாவும் அழகாகத்தான் ‘அரண்மனைக் கிளி’யாகவே இருந்தார்.ஆனால் -நடிப்பு?

ராஜ்கிரணின் முந்தைய வெற்றிப்படமான ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் மீனா நடித்ததில் பத்து சதவிகிதம் கூட அவரிடம் இல்லை என்கிற விமர்சனத்தை சந்தித்தார். பாடல் காட்சி தவிர, மற்ற காட்சிகளில் அஹானா எடுபடவில்லை என்று எழுதினார்கள் விமர்சகர்கள்.

குஷ்பூவுக்கு போட்டியென்று படத்தின் ரிலீஸுக்கு முன்பு எழுதியவர்கள், ‘ஒரே ஒரு குஷ்பூதான், குயிலெல்லாம் மயிலாக முடியுமா?’ என்றெல்லாம் அஹானாவை வாரினார்கள்.

எதிர்பார்த்த மாதிரி அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவியவில்லை.“மேக்கப் இல்லாமலேயே பளிச்சுன்னு இருக்கிற அழகிதான். நடிப்புதான் கொஞ்சம் சிக்கல். ஏகத்துக்கும் ரீடேக் வாங்குவார். தமிழில் பேசினா புரிஞ்சுக்க மாட்டார். அவருக்கு வசனம் சொல்லிக் கொடுக்க எப்பவும் ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவை. முதல் படத்துக்குப் பிறகு டயட்டில் கவனம் செலுத்தாமல் இஷ்டத்துக்கும் வெயிட் போட்டாங்க. தனக்குரிய நேரத்துக்காக காத்திருக்காமல் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக்க நெனைச்சாங்க.

அடுத்த படமே மன்சூரலிகான் ஜோடியாக ‘ராவணன்’ படத்தில் நடிச்சாங்க. மன்சூரலிகானுக்கு ஜோடியா நடிச்சதாலே, இவங்களோட டூயட் பாட பெரிய ஹீரோக்கள் மறுத்தாங்க. சரியான வழிகாட்டுதல் இருந்திருந்தா, அவங்க அடுத்த குஷ்பூவா ஆகலைன்னாலும் பெரிய சலனத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியிருப்பாங்க” என்று அந்த நாள் நினைவுகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் அஹானாவை வைத்து படமெடுத்த இயக்குநர் ஒருவர்.

‘சீவலப்பேரி பாண்டி’ படத்தில் சிறிய வேடம்தான். ‘ஒயிலா பாடும் பாட்டுலே ஆடுது ஆடு’ பாடலில் ஜாக்கெட் அணியாமல் மலையும் மலையை சார்ந்த இடமுமான குறிஞ்சிப்பண் அழகியாக ரசிகர்களைக் கவர்ந்தார். அஹானாவின் அழகை அவ்வளவு அழகாக அணுஅணுவாக ரசித்து வெளிப்படுத்தி யிருந்தார் இயக்குநர் பிரதாப் போத்தன்.

கருத்த சரவணனுக்கு ஜோடியாக ‘செவத்த பொண்ணு’ படத்தில் நடித்தார். தமிழில் பெரிய வரவேற்பில்லாத நிலையில் தெலுங்கு, கன்னடப் படங்களிலும் முயற்சித்தார். வேலுபிரபாகரன் இயக்கத்தில் கடைசியாக ‘சிவன்’ படத்தில்தான் அவரைப் பார்க்க முடிந்தது. எதிர்பார்த்த வகையில் மின்ன முடியாத நட்சத்திரமானதால், மேலும் போராட முடியாமல் மும்பைக்கே திரும்பிவிட்டார்.அஹானாவை தமிழ் ரசிகர்கள் பார்த்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகிறது. அங்கே சின்னத்திரை தொடர்களில் இன்னும் நடித்து வருவதாகக் கேள்வி.

பைம்பொழில் மீரான், ‘வண்ணத்திரை’ வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான மூத்த பத்திரிகையாளர். ‘ஹீரோயினிஸம்’, ‘பிலிமாயணம்’ போன்ற அவரது தொடர்கள் வாசகர்களிடம் மட்டுமின்றி சினிமாத்துறையினரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றவை. தமிழில் பெரும் ஒளியோடு மின்னிய நட்சத்திரங்களைக் குறித்த தன்னுடைய தனித்துவமான பார்வையை இத்தொடரில் முன்வைக்க இருக்கிறார்.

(மின்னும்)

●பைம்பொழில் மீரான்