அண்ணனுக்கு ஜே! பாடகர் வேல்முருகன்



டைட்டில்ஸ் டாக் 86

சமூகம் பெரும்பாலும் நகர்மயமாகிவிட்ட இந்த காலகட்டத்தில் அன்பும், பாசமும் இரத்த உறவாக மட்டுமே வருவதல்ல. சொந்த சகோதரனிடம் மட்டுமே கிடைக்கக்கூடிய பாசத்தை இப்போது நட்பின் வாயிலாகக் கிடைத்த அண்ணன்மார்களிடமும் பெறுகிறேன். என்னுடைய அனுபவத்தில் சகோதரத்துவம் என்பதே தலை சிறந்தது. அது சொந்த சகோதரனிடமிருந்து கிடைத்தாலும் சரி, நாம் சகோதரனாக ஏற்றுக் கொண்ட நண்பனிடமிருந்து கிடைத்தாலும் சரி.

சொந்த ஊர் கடலூர் மாவட்டம் முதனை. இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தவன். என்னை தாலாட்டி சீராட்டி வளர்த்தது என் உடன்பிறந்த அண்ணன் பெரியசாமிதான். நான் ‘அண்ணனுக்கு ஜே’ போட்டால் அது இயல்புதானே?என் அண்ணனை நானோ, என்னை அவரோ எக்காலத்திலும் விட்டுக் கொடுத்ததில்லை. ஊரில் நாங்கள் சேர்ந்து நடக்கும்போது ‘பாசப்பறவைகள் போகுது’ என்று நெகிழ்ச்சியாக சொல்வார்கள்.

சின்ன வயதிலிருந்தே எனக்கு பாட்டென்றால் உயிர். மஞ்சள் நீராட்டுவிழா, காதுகுத்து மாதிரி விழாக்களில் மைக் செட் இருந்தால் போதும். அலுமினிய அன்னக்கூடையை எடுத்து தட்டிக் கொண்டே மெட்டு கட்டி பாட ஆரம்பித்து விடுவேன். இப்படித்தான் என் இசைப்பயணம் தொடங்கியது.
பள்ளியில் ஆசிரியர்களாக வாய்த்த அண்ணன்கள் ராஜேந்திரன், பரமசிவம், ரமேஷ் போன்றோரின் ஊக்குவிப்பால் பத்தாம் வகுப்பு நிறைவு செய்தேன்.
அண்ணன் ஏற்பாட்டில் கோயமுத்தூரில் ஐடிஐ சேர்ந்தேன். அங்கே ஸ்டேன்லி என்கிற ஆசிரியர் அண்ணனாய் வாய்த்து வழிநடத்தினார். பயிற்சி முடிந்ததும் அங்கேயே பெரிய மோட்டார் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன்.

வேலையை முடித்துவிட்டு கச்சேரி நடக்கும் இடங்களுக்குப் போய் ரசித்து, எனக்கும் பாட வாய்ப்புக் கேட்பேன். அப்படித்தான் ரவிச்சந்திரன், ரவிராஜா, டேவிட், மலர்தாசன் ஆகிய நான்கு அண்ணன்மார்களின் நட்பு கிடைத்தது. என் கிராமிய வாசனையோடு கூடிய குரல் அவர்களுக்கு பிடித்திருந்தது. சென்னையில் உள்ள இசைக்கல்லூரியில் சேர்ந்து படிக்கச் சொல்லி ஊக்கமும் கொடுத்தார்கள். அவர்களால்தான் சென்னைக்கே வந்தேன்.

கிராமத்துக்காரனான என்னை சென்னை ரொம்பவே மிரட்டியது. தமிழ் ஒளி, அன்பழகன்,  போட்டோகிராபர் சந்துரு போன்ற அண்ணன்கள்தான் தோள் கொடுத்து சீராட்டினார்கள். சினிமாப் பாடல்களைப் பாடச்சொல்லி ஐடியா கொடுத்தார்கள். பொதுவாக இசைக்கல்லூரியில் சினிமாப் பாடல்களை பாடச் சொல்ல மாட்டார்கள். சுத்த கர்நாடகம்தான்.

இசைக்கல்லூரியில் படித்த காலம் ரொம்பவே சிரமமானது. தங்குவதற்கு ஹாஸ்டல் உண்டு. கைச்செலவுக்குத்தான் திண்டாடிவிடுவேன். அச்சமயங்களில் தூர்தர்ஷன் இயக்குநர் அண்ணன் அனந்த நாராயணன், செலவுக்கு பணம் கொடுப்பார். அதே கால கட்டங்களில் ஹரிதாஸ் என்கிற அண்ணன் தன்னுடைய பத்திரிகையில் வேலை கொடுத்து சோறு போட்டார்.

 வின்சென்ட், குமார் அண்ணன்களும் 100, 200 கொடுத்து உதவி செய்துள்ளார்கள். இசைக் கல்லூரியில் இருந்து வந்தும் வராததுமாக என் திருமணப்பேச்சு. என் வயிற்றுப் பாட்டுக்கே திண்டாட்டமான காலகட்டம். மனைவிக்கும் சேர்த்து சம்பாதிக்க வேண்டும். கல்லூரியில் பழகிய அண்ணன்கள் சிலர் ‘‘முதலில் பாடகனாவதற்கு முயற்சி செய்’’ என்று லட்சியத்தை அடைவதற்கான வழியைச் சொன்னார்கள்.

‘‘என்னுடையது காதல் திருமணம். அதனால் இப்போது ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. எனக்கு பெண் பார்த்து கல்யாணம் செய்து வைக்க பெற்றோரும் இல்லை. அண்ணனுக்கும் தொல்லை கொடுக்கக் கூடாது என்றுதான்  திருமணம் செய்து கொள்வது என்ற முடிவை எடுத்தேன்’’ என்று சொன்னேன்.

திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தது பெனிசுலா குமார் அண்ணன். அப்போது என் கையில் சல்லிக் காசு இல்லை. அந்த சமயத்தில் குமார் அண்ணன்தான் தன்னுடைய ஓட்டலிலேயே இடமும் கொடுத்து ஐநூறு பேருக்கு சாப்பாடும் போட்டு ஜாம்ஜாம்னு நடத்தி வைத்தார்.

நான் பாடகனானது நினைத்துப் பார்க்காத ஒன்று. ஏன்னா, திருமணத்துக்குப் பிறகு வேலை, குடும்பம் என்று செட்டிலாகத் தோன்றியது. எதிர்பாராதவிதமாக ஒரு தனியார் தொலைக்காட்சியில் முதல் முறையா பாட வாய்ப்பு கிடைத்தது.

அந்நிகழ்ச்சியில் என் அம்மாவைப் பற்றி உருக்கமாகப் பாடினேன். அந்தப் பாடல் ஏராளமான உள்ளங்களைத் தொட்டது. அப்படித் தொட்ட நல்ல உள்ளங்களில் ஒருவர்தான் இசையமைப்பாளர் அண்ணன் ஜேம்ஸ் வசந்தன். அவர் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு போன் பண்ணி என் நம்பரை வாங்கி தொடர்பு கொண்டு பேசினார்.

அடுத்தநாள் அவர் ஸ்டூடியோவுக்கு வரச் சொல்லி எனக்கு கொடுத்த வாய்ப்புதான் ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் இடம் பெற்ற ‘மதுர குலுங்க குலுங்க’ பாடல். தொடர்ந்து சசிகுமார் அண்ணன் சுந்தர்.சி. பாபு இசையில் ‘நாடோடிகள்’ படத்தில் ‘ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா’ என்ற ஹிட் பாடலைக் கொடுத்தார்.

ஜி.வி.பிரகாஷ் அண்ணன் ‘ஆடுகளம்’ படத்தில் ‘ஒத்தச் சொல்லால’ என்ற ஹிட் பாடல் கொடுத்து எனக்கு தமிழ் சினிமாவில் நிலையான இடத்தைப் பெற்றுக் கொடுக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தார்.

அவருடைய இசையில் ‘சகுனி’, ‘கொம்பன்’, ‘செம’, ‘காவலன்’ உள்பட ஏராளமான படங்களுக்கு பாடினேன். அதில் ‘செம’ படத்தில் இடம்பெற்ற ‘சண்டாளி’ பாடல் என்னை பட்டி தொட்டு மட்டுமில்லாமல் உலகத் தமிழர்கள் அனைவரிடமும் கொண்டு போய்ச் சேர்த்தது. 25 மில்லியன் மக்கள் அந்தப் பாடலை ரசித்துள்ளார்கள்.

யுவன் ஷங்கர் ராஜா ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘கழுகு’, ‘கடம்பன்’, ‘அவன் இவன்’ போன்ற படங்களில் வாய்ப்பு கொடுத்தார். ஹாரிஸ் ஜெயராஜ் அண்ணனிடம் ‘என்னை அறிந்தால்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘என்றென்றும் புன்னகை‘, ‘இது கதிர்வேலனின் காதல்’ உள்பட ஏராளமான படங்களுக்கு பாடியுள்ளேன்.

இமான் அண்ணனிடம் ‘தேரோடும் வீதியிலே’, ‘தம்பிக்கோட்டை’  உள்பட சில படங்களுக்கு பாடியுள்ளேன். இது தவிர இளையராஜா, பரத்வாஜ், தமன், கார்த்திக் ராஜா, ஹிப் ஹாப் தமிழா ஆதி, வித்யாசாகர், தேவா, ஸ்ரீகாந்த் தேவா, ‘அண்ணனுக்கு ஜே’ இசையமைப்பாளர் அரொல் கரோலி, சாம் சி.எஸ்., அனிரூத் உள்பட முன்னணி இசை யமைப்பாளர்கள் அனைவரிடம் பாடியுள்ளேன்.இதுவரை நான் பாடாத இசையமைப்பாளர் என்றால் அண்ணன் ஏ.ஆர்.ரகுமான் மட்டுமே. அவருக்கு டிராக் மட்டும் பாடியுள்ளேன். அண்ணன் சந்தோஷ் நாராயணன்  இசையிலும்  பாடவில்லை.

பின்னணி பாடகராக வருவதற்கு முன் அண்ணன்கள் அறிவுமதி, யுகபாரதி, இளைய கம்பன், ஏகாதசி, ‘சாதகப் பறவைகள்’ சங்கர், வி.கே.டி.பாலன் போன்றவர்களின் பழக்கம் சினிமாவில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது.

என்னுடைய வாழ்க்கையில் அண்ணன்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் இன்றளவிலும் என்னால் பிஸியாக பாடிக் கொண்டிருக்க முடியாது. நான் பாட வந்து பன்னிரண்டு வருடங்கள் கடந்துவிட்டது.  இப்போதும் பீக்கில் இருக்கக் காரணம் அண்ணன்களின் பாசம்.

பொதுவாக பாடகர் என்றால் அவர் என்ன வாய்ஸில் பாடி ஹிட் கொடுக்கிறாரோ, அதே மாதிரிதான் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் எனக்கு ‘சண்டாளி’ மாதிரியான மெலடியும் கிடைத்துள்ளது. ‘கவண்’ படத்தில் ‘யாரோ’ என்ற ராப் ஸ்டைல் பாடலும், ‘கலகலப்பு-2’ படத்தில் ‘கிருஷ்ணா முகுந்தா’ என்ற கிளாசிக் பாடலும் கிடைத்துள்ளது.

கவாலி ஸ்டைல் பாடலை ஜேம்ஸ் வசந்தன் இசையில் பாடியுள்ளேன். வித்யாசாகர் இசையமைத்த ‘ஜன்னலோரம்’ படத்தில் வித்தியாசமான பாடலைப் பாடியிருக்கிறேன்.  ஹரிணி, லேகா பார்த்தசாரதி உட்பட ஏராளமான பின்னணி பாடகிகளுடன் இணைந்து டூயட் பாடியுள்ளேன்.

ஒரு குக்கிராமத்தில் பிறந்து கொட்டாங்குச்சியைத் தட்டி தாளம் போட்டுக் கொண்டிருந்த எனக்கு டி.எம்.எஸ்., எஸ்.பி.பி., கே.ஜே ஜேசுதாஸ், மனோ, ஹரிஹரன், சங்கர் மகாதேவன், ஸ்ரீநிவாஸ், உன்னி மேனன் போன்ற ஜாம்பவான்கள் கோலோச்சிக் கொண்டிருக்கும் இசைத் துறையில் இடம் கிடைத்திருப்பது இறைவன் கொடுத்த வரம் என்றாலும் எனக்குக் கிடைத்த அண்ணன்களின் ஊக்கமும் ஆக்கமும்தான் காரணம். இல்லையென்றால் குறுகிய காலத்தில் 300 பாடல்களை என்னால் பாடியிருக்க முடியாது. நான் சொல்லிய இந்த அண்ணன்கள் இல்லை என்றால் இந்தத் தம்பியால் முன்னேற்றப் பாதைக்கு வந்திருக்க முடியாது. அப்படி என் வாழ்வில் ஓராயிரம் அண்ணன்கள் இருக்கிறார்கள்.

சிறு வயதில் இருந்தே என் அப்பாவும் அம்மாவும் ஒற்றுமையையும் அன்பையும் ஊட்டி வளர்த்ததால்தான் என்னால் எல்லோரிடமும் சகோதர மனப்பான்மையுடன் பழக முடிகிறது. இன்று அப்பாவும் அம்மாவும் இல்லாவிட்டாலும் நானும் என் அண்ணனும் அன்பை ஒருவருக்கொருவர் பரிமாறுவதில் குறை வைப்பதில்லை.

அண்ணன், தம்பி பாசத்துக்கிடையே அண்ணி என்ற புதுவரவு வரும்போது பாசப்பறவைகளிடையே ஒரு இடைவெளி வரும். குடும்பத்தில் புதுவரவாக அண்ணிமார் வந்தாலும் அவரையும் நம் குடும்பத்தில் ஒருவராக நினைத்துவிட்டால் அவர்கள் குறைகள் நமக்கு பெரிதாகத் தெரியாது. மற்றவர்களது நிறைகளை மட்டுமே நினைவில் நிறுத்தி குறைகளை மறந்து அவர்கள் செய்யும் சிறு பிழைகளைப் பெரிது படுத்தாவிட்டாலே போதும் குடும்பத்தில் அன்பு நிலைகொள்ளும்.

இப்போது நான் வீடு, வாசல், கார் என்று வாழ்க்கையில் செட்டிலாகியிருந்தாலும் அண்ணன்களின் அளவில்லாத அன்பைத்தான் நான் சேர்த்து வைத்த உண்மையான சொத்தாக நம்புகிறேன். அண்ணனுக்கு ஜே!

தொகுப்பு : சுரேஷ்ராஜா

(தொடரும்)