சிவந்தது படச்சுருள்!



பிலிமாயணம்  16

நிவின் பாலி நடிப்பில் சமீபத்தில் கேரளாவில் வெளிவந்து சக்கைப்போடு போட்ட படம் ‘சகாவு’. இந்த மலையாளச் சொல்லுக்கு தோழர் என்று பொருள். இதில் நிவின் பாலி, கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த புரட்சிகர இளைஞராக நடித்திருந்தார். இதனால், அந்தப் படம் ஓடும் தியேட்டர்களில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த இளைஞர்கள் திரண்டார்கள்.

தியேட்டர்களை சிவப்புக் கொடியால் அலங்கரித்தனர். படம் ஓடிக் ெகாண்டிருக்கும்போதே எழுந்து ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ (புரட்சி வாழ்க) என்று கூட்டம் கூட்டமாக முழங்கினார்கள். பொதுவாக கம்யூனிஸ்டுகள் திரைப்படம் பார்க்கமாட்டார்கள். சில முக்கிய பிரச்சினைகளைப் பேசும் படமாக இருந்தாலோ அல்லது ஆவணப்படங்களையோதான் பார்க்க விரும்புவார்கள். வணிக சினிமா அவர்களுக்கு ஆகாது.

இந்த நிலையில் ‘சகாவு’ படத்தை கேரள கம்யூனிஸ்ட் இளைஞர்கள் கொண்டாடியது ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது. இப்போது கம்யூனிஸ்டுகள் மாறிவிட்டார்கள். கொள்கைகளை மாற்றிக் கொள்ளாவிட்டாலும் தங்களை மாற்றிக் ெகாண்டார்கள். இதனால்தான் இந்தக் கொண்டாட்டம் என்றும்கூட கொள்ளலாம்.

ஆனால்-முப்பத்தாறு வருடங்களுக்கு முன்பே கம்யூனிஸ்டுகள் கொள்கையில் மிகவும் கட்டுப்பாடாக இருந்த காலத்தில் தமிழ் நாட்டில் ஒரு திரைப்படத்தை கொண்டாடினார்கள். அது ‘சிவப்பு மல்லி’.அப்போது எனக்கு பதினைந்து வயது. என் தந்தை தீவிரமான கம்யூனிஸ்ட். அவருடன் சேர்ந்து சிவப்பு துண்டு போட்டுக் கொண்டு போராட்டங்களுக்கு சென்றிருக்கிறேன். அவருடன் காலையில் கைதாகி மாலையில் விடுதலையாகியிருக்கிறேன். என் தந்தைக்கு திரைப்படங்கள் பிடிக்காது.

அது மக்களை ஏமாற்றும் மோடிமஸ்தான் வித்தை என்று விமர்சிப்பார். அவரே “வாடா மகனே சினிமாவுக்கு ேபாவோம்” என்று அழைத்துப் ேபான படம் ‘சிவப்பு மல்லி’.1981ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிவந்த அந்தப் படம் மூன்று மாதங்களுக்குப் பிறகு செங்கோட்டை ஜனதா தியேட்டருக்கு வந்திருந்தது.

செங்கோட்டை பகுதி காம்ரேடுகள் தியேட்டரை அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்துடன் கூடிய செங்கொடிகளால் அலங்கரித்திருந்தார்கள். பல ஊர்களிலிருந்தும் தோழர்கள் சிவப்பு சட்டை, சிவப்பு துண்டு அணிந்து கையில் செங்ெகாடியுடன் அலை அலையாய் கிளம்பி வந்திருந்தார்கள். படம் பார்க்க வருகிறவர்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.

படத்தில் விஜயகாந்த் கோபமிக்க கம்யூனிஸ்ட் இளைஞர் ரங்காவாக நடித்திருந்தார். அவரது நண்பராக வாகை சந்திரசேகர் நடித்திருந்தார். இருவருமே ஒரு கம்பெனியில் வேலை செய்வார்கள். அந்தக் கம்பெனியில் கூலி உயர்வு கேட்டு போராட்டம் நடக்கும், கம்பெனி முதலாளிகள் மூன்று பேரும் வில்லன்கள்.

விஜயகாந்த் எப்போதும் கையில் கம்யூனிஸ்ட் கொடியுடன்தான் வருவார். படம் முழுக்க சிவப்பு சட்டையுடன்தான் வருவார்.‘எரிமலை எப்படி பொறுக்கும், நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம், ரத்தச் சாட்டை எடுத்தால் ைகயை நெரிக்கும் விலங்கு தெறிக்கும்...’ என்ற பாடல் வந்தபோது இளைஞர்கள் சீட்டின் நுனியில் நின்றுகொண்டு ‘புரட்சி ஓங்குக, புரட்சி ஓங்குக’ என்று முழுங்கினார்கள்.

நானும் அப்படி முழங்கினேன். வேலை முடிந்து மனைவிக்கு மல்லிகைப் பூ வாங்கிக் கொண்டு வாகை சந்திரசேகர் வரும்போது அவரை முதலாளியின் ஆட்கள் கொலை செய்து விடுவார்கள். மார்பில் இருந்து பாயும் ரத்தத்தில் அவர் கொண்டு வந்த மல்லி சிவப்பு மல்லி ஆகிறபோது வீரவணக்க கோஷங்கள் தியேட்டரை அதிர வைத்தன.

இதேபோன்றுதான் தமிழ்நாடு முழுக்க இருந்தது. சிவப்பு மல்லியை கம்யூனிஸ்டுகள் கொண்டாடித் தீர்த்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் மேடைகளில் ‘எரிமலை எப்படி பொறுக்கும்...’ பாடல் அதிகமாக இடம்பெற்றது. அப்போது விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்நாட்டில் வளர்ந்து வந்த நேரம் என்பதால் அவர்களும் இந்தப் பாடலைப் பயன்படுத்தினார்கள்.

சிவப்பு மல்லிக்குப் பிறகு கம்யூனிஸ்டுகள் எந்தப் படத்தையும் கொண்டாடவில்லை. ‘ஜோக்கர்’ மாதிரியான படங்களை அரிதாகப் பாராட்டியிருக்கிறார்கள்.‘சிவப்பு மல்லி’ படத்தை இயக்கியது விலங்குகளை வைத்தும், சாமி கதைகளை வைத்தும் படம் இயக்கி வந்த ராம.நாராயணன் என்பதும், தயாரித்தது முதலாளித்துவ சிந்தனை கொண்ட ஏவிஎம் நிறுவனம் என்பதும் சுவாரஸ்யமான முரண்பாடு.

(பிலிம் ஓட்டுவோம்)

பைம்பொழில் மீரான்